கால்நடைகளை மேய்ப்பவன்
கால்நடையில் வலம் வருகிறான்
கால்நடை, பால் கொள்வனவாளன்
முதலாளி ஆகிறான்.
உழவு செய்பவன்
உழவனாகிறான்
விவசாய உற்பத்தி கொள்வனவாளன்
விரைவாய் பணக்காரன் ஆகிறான்.
அனுபவத்தை கற்றவன்
அனுபவசாலி ஆகிறான்
அனுபவத்தை பெற்று
நூலாக்குபவர் பேராசிரியர் ஆகிறார்.
தேயிலை கொழுந்து பறிப்போர்
தேய்ந்து போகின்றனர்
கொழுந்தை தேயிலை ஆக்குபவன்
கம்பனிக்காரர் ஆகின்றனர்.
உருவாக்கிய
கால்நடையாளன்,
உழவன்,
அனுபவசாலி,
கொழுந்து பறிப்போர்…..
ஒதுக்கப்படுவதேன்?
உருவாக்கப்பட்ட
முதலாளி,
பணக்காரன்,
பேராசிரியர்,
கம்பெனிக்காரர்….
உயர்த்தப்படுவதேன்?
உருவாக்குபவன் இல்லாவிட்டால்
உருவாக முடியாது!
மாற்றுவோம் போற்றுவோம்
உருவாக்கிய உழைப்பாளியை…
– வ.துசாந்தன் –