உயிர் கொடுத்த அன்னைக்கு,
உலகை இரசிக்க வைப்பதற்கு,
உணவு கொடுக்கும்,
உழைப்பாளி வாழ்க!
இறைவனின் உணர்வு இல்லை எனில்,
இங்கு நாம் இல்லை.
இவர்களின் உழைப்பு இல்லை எனில்,
இங்கு எம் உடல் இல்லை.
உடலுக்கு உரம் கொடுக்கும்
உழைப்பாளி வாழ்க!
இயங்கியலின் உன்னத படைப்பு
அவர்கள்.
இயங்கிக்கொண்டிருப்பதில் உன்னைவிட
உயர்ந்த உழைப்பாளி யார்?
உழைப்பாளி வாழ்க!
உலகில், இல்லை என்று சொல்ல
நிறையவே இருக்கிறது.
இருந்தும்,
எங்கும் இல்லை, என்று சொல்லமுடியாத
அளவு உள்ளனர் உழைப்பாளர் கூட்டம்
உலகெங்குமுள்ள உழைப்பாளி வாழ்க!
பனித்துளிகள் போல் வியர்வை
துளிகளை
பணியை முடிக்கும் மட்டும்
பாசத்துடன் ஏற்கும் பண்பு கொண்ட
உழைப்பாளி வாழ்க!
கனத்த வெயிலில் கல்லுடைப்பான்.
உடைத்த கல்லை கொண்டு சேர்ப்பான்.
சேர்த்த கல்லுடன் இன்னும் சில சேர்த்து,
சேறு போல் தன்னைக் காட்டி,
கட்டி எழுப்புவான்.
சேனைகளும் தாக்க முடியாது
செங்கோட்டைகளை,
உழைப்பின் சிகரம் அவன்
உழைப்பாளி வாழ்க!
பாறை போல் படர்ந்து கிடக்கும்
பல்லாயிரம் நிலங்களை,
பார்த்துக்கொண்டே இருக்க மாட்டான்
அதிலேயே,
பச்சைப் புற்களை படரவிட்டு
பச்சை சோலையாய் பார்க்கச் செய்ய
பாடுபடும் உழைப்பாளி வாழ்க!
ஏவுகணைகளை விட சிறப்பான
ஆயுதங்களைத் தேடும் இவ்வுலகில்,
எவற்றையும் துணிந்து செய்ய,
அருங் கரங்கள் போதும் என்று
உழைக்கும் கரங்கள் அவன்
உழைப்பாளி வாழ்க!
உலகுக்கு உணவு கொடுக்கும் விவசாயி
இவ்வுலகில் உள்ள நிலை யாரறிவார்?
இருந்தும், எதுவும் பாராமல்
பார் உயிர்கள் வாழ
பசித்திருந்து,
பார் காக்கும் அரசன் அவன்
உழைப்பாளி வாழ்க!
வானுயர்ந்த கோபுரங்களும்,
வண்ண வண்ண வாசல்களும்,
வைத்துக் கட்டும் உழைப்பாளி
வாழ்வதோ வான் தெரியும்
ஓட்டை குடிசையில்.
உழைப்பாளி வாழ்க!
தான் மட்டும் என்று வாழும்
இவ்வுலகில், தன்னை, தன் வீட்டை,
தன் நாட்டை சுத்தம் செய்யும்
உலக சுகாதாரத்தை பாதுகாக்கும்
உழைப்பாளியின் சுகாதாரத்திற்கு
இல்லை இங்கு பாதுகாப்பு.
உழைப்பாளி வாழ்க!
உழைப்பாளி இல்லா நிலமும் இல்லை.
உழைப்பு இடம்பெற நேரமும் இல்லை.
தூக்கத்தின் கனவுகளில் கூட,
உழைக்கிறான் உழைப்பாளி
கனவு காணும் வேலையே,
ஒரு உழைப்பு தான்.
வேட்கையின் கண்கள்
உழைப்பாளி வாழ்க!
இரவு பகல் விழித்திருந்து உயிர் துறக்க,
உழைப்பவர்கள் இராணுவத்தினர் மட்டுமல்ல,
ஆழியில் அல்லல்படும் அன்புத் தோழர்
மீனவர்களும் தான்!
அருமைத் தோழர்கள் சாரதிகளும் தான்!
பண்பு தோழர்கள் பாதுகாவலர்களும் தான்!
இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம்
செங்குருதியின் சிதறல்கள்.
உழைப்பாளி வாழ்க!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்பதை வெளிக்காட்டும்
உழைப்பாளர் கூட்டம்
ஒற்றுமையின் சேர்க்கை
உழைப்பாளி வாழ்க!
கண்கண்ட தெய்வங்கள்
பெற்றோர்கள்மட்டுமல்ல.
தேவைக்கு சேவை செய்யும்
உழைப்பாளியும் தான்.
உலகில் உள்ள தெய்வம்
உழைப்பாளி வாழ்க!
கிருஷ்ணமூர்த்தி விஜிதா,
இரண்டாம் வருடம்,
கலைக்கலாசாரப்பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.