சூழ்ந்து உள்ள வேலி போல்
எம்மை சுற்றியுள்ள ஆழி.
வா வா என்று அழைப்பதை போல்
அதன் அலைகள்.
கண்களால் காண முடியாத
அளப்பெரும் விம்பம் அது.
கண்டங்கள் பல கொண்ட
கார்நீல வண்ணம் அது.
கனவையும் களையவைக்கும்
கற்பனை வெள்ளம் அது.
அள்ள அள்ள குறையாத
அற்புதக் கிண்ணம் அது.
ஆன்றோர் சான்றோர் பாடிய
கவியின் ஊற்றும் அதுவே.
நீர்நிலையில் நீங்காத நித்திய
சிறப்புடையதும் அதுவே.
அண்ட சராசரத்தையும் அடக்கிவைக்கும்
அன்னையும் அதுவே.
ஆசையெல்லாம் அழியவைக்கும்
பேரலைகொண்டதும் அதுவே.
சிற்பியில் இருந்து முத்துவரை
கொண்டதும் அதுவே.
முத்தெடுக்க செல்பவரை முழுமையாக
முழுங்குவதும் அதுவே.
நெஞ்சை நெகிழச் செய்யும்
நெய்தல் நிலமும் அதுவே.
சங்கத்தோர் பிரியாது புணர்ந்து,
காதல்கொண்ட இடமும் அதுவே.
தாழைகள், சோலைகள் போல்
சாய்ந்து கொண்டு மடிதரும்.
வானுயர்ந்த தென்னைகள்
வாய்குளிர இளநீர் தரும்.
கட்டுமர தோணியையும்,
கரைகாணா கப்பலையும்,
காக்கும் அன்னைமடி அதுவே.
இத்தனையும் அதன் ஒரு துளி தானோ?
அத்துளியில் உள்ள சாரல்
என் கவி தானோ?
கிருஷ்ணமூர்த்தி விஜிதா,
இரண்டாம் வருடம்,
கலைக்கலாசாரப்பீடம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.