ஷாதோல் மாவட்டத்தில் புகையிரத விபத்தில் பலியானவரின் குடும்பத்துடன் பேசும் அதிகாரிகள்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5:15 மணிக்கு, மகாராஷ்ட்ராவிலிருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள உமேரியா மாவட்டத்துக்கு கால்நடையாகப் புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் 16 பேர் அவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் மோதுண்டு இறந்தனர், 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பலியான தொழிலாளர் ஒருவரின் மனைவி கிருஷ்ணாவதி சிங்கிற்கு, வியாழக்கிழமை இரவு 9 மணியளவில், அவரது கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. அந்த அழைப்பில் “எங்களுக்கு ஏதாவது பணம் இருந்தால் அனுப்புங்க, எங்களிடம் எதுவும் இல்லை. ஒப்பந்தகாரர்களும் எங்களுக்குப் பணம் கொடுக்க மறுத்து விட்டனர். நாங்கள் என்ன செய்ய முடியும்? பசியிலும் தாகத்திலும் இறந்து விடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
புகையிரத தண்டவாளம் வழியாக இந்தப் புலம் பெயர் தொழிலாளர்கள், சுமார் 800 கிமீ தூர சொந்த ஊருக்கான நடைபயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இதுகுறித்து, மனைவி கூறுகையில் கணவர் கேட்டு விட்டார், “எங்களிடம் ஒன்றுமேயில்லை என்ற நிலையில்தான், வேலைக்காக இன்னொரு மாநிலத்துக்குச் அவர் சென்றார். எங்களுக்கு இங்கு சாப்பிடக்கூட எதுவும் இல்லை. நாங்கள் எப்படி அவர்களுக்கு அனுப்ப முடியும்?” என்று கடும் வேதனையுடனும் அழுகையுடனும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இரவு புகையிரத பாலத்தில் ஓய்வுஎடுத்து விட்டு காலை தங்கள் நடைபயணத்தை தொடங்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
இன்னொரு தொழிலாளியின் மனைவி தேவதி சிங் கூறுகையில், “நான் என்னுடைய சேமிப்பிலிருந்து ஆயிரம் ரூபாய் அனுப்புகிறேன், புகையிரதம் ஓடத் தொடங்கியதும் வாருங்கள் என்றேன் ஆனால் அவர் கேட்கவில்லை” என்றார்.
மகாராஷ்ட்ரா ஜல்னா மாவட்டத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பதால் ஒப்பந்தகாரரிடம் சென்று தாங்கள் ஊருக்குச் செல்ல பேருந்து ஏற்பாட் செய்யுங்கள் என்று முறையிட்டுள்ளனர். ஆனால் அவரோ அதன் பிறகு மாயமானதாகத் தெரிகிறது.
இப்போதைக்கு இவர்களது குடும்பத்துக்கு ரேஷன் கடையில் கிடைக்கும் 15கிலோ அரிசிதான் வாழ்வாதாரம். பலியானவர்களில் அதிகம் பேர் கோண்ட் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்கு ஊரில் வெறும் பசியும் பட்டினியும்தான் மிச்சம். அதனால்தான் இவர்கள் புலம்பெயர்ந்து ஆகக்குறைந்த ஊதியத்துக்கு, தினக்கூலிக்கு வெளிமாநிலங்களுக்குச் செல்ல நேரிடுவதாக ராகேஷ் குமார் மாலவ்யா என்ற சமூக தொண்டர் வேதனை தெரிவித்தார்.
நன்னி – இந்து..