நீண்ட நாட்களாக வாடிய முகத்துடன், சோர்ந்து போய் இருந்த சந்தியா திடீர் என ஒரு நாள் பட்டாம் பூச்சி சிறகடித்துப் பறந்தது போல் சிட்டாய் பறந்தாள். காரணம் உயர்தரப் பரிட்சை எழுதி, பரீட்சைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்ற போதிலும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போனமையிட்டுக் கவலை கொண்டு தன்னைத்தானே வெறுத்துக் கொண்டிருந்தாள். அவளை உறவினர்கள் சமாதானப்படுத்தி வேறு வழிகளில் படிக்க முடியும் என வழிகாட்டினர். இருந்தும் அவளுக்கு மனதில் ஆறாத்துயரம் குடிகொண்டது. “என்னை விடக் குறைவான புள்ளிகள் பெற்ற எனது நண்பர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ள போது ஏன் எனக்கு மட்டும் கிடைக்கவில்லை?” என்ற கேள்விக்கு விடை காண முடியாதவளாய் அவளின் பல இரவுகள் புலம்புவதில் கழிந்து கொண்டிருந்தது. ஆனால் அவள் “நான் பல்கலை செல்வேன், அங்கே அறிமுகம் இல்லாத பல நட்புக்கள் எனக்காக காத்திருக்கின” என்றெல்லாம் மனக்கோட்டை கட்டி வைத்திருந்தாள். ஒரு நாள் தீடீர்ரென்று ஓர் தொலைபேசி அழைப்பு!!!! இவள் காதில் அலைமோதியது. யாராக இருக்கும்? எனத் தன் எண்ணவோட்டத்தில் ஓடிக் கொண்டு இருக்க, அழைப்பைத் தொடுக்கின்றாள். அழைப்பைத் தொடுத்த போதுதான் தெரிந்தது, அவளின் நெருங்கிய தோழி என்று,
தோழி- கலோ!!! சந்தியா என்னடி செய்றா?
சந்தியா- ஏதோ இருக்கன்டி. என்ன சொல்லு ஏன் கோல் எடுத்தா? (ஒரு வித சலிப்புடன் கதைத்தாள்)
தோழி- என்னடி இப்பிடி கதைக்கிறா? உனக்கு ஒன்ட சொல்லத்தான் எடுத்தன்.
சந்தியா- என்ன?
தோழி- யுனிக்கு திரும்ப வெய்ரிங்கில ஆக்கள எடுக்கிறாங்களாம்….. உனக்கு தெரியுமா? நம்மட சகோ ஸ்கூலில (சகோதர பாடசாலை) ஒருத்தனுக்கு கடிதம் வந்திருக்காம் டி. (இவ்வாறு கூறி அவள் தொடர்பை துண்டிக்கின்றாள்)
சந்தியாவை இத்தகவல் உச்சி குளிர வைத்தது. “ நிச்சயமாக எனக்கும் கடிதம் வரும்” என ஆவலுடன் எதிர் பார்த்திருந்தாள் அவள். ஊரில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு கடிதம் வந்த போதும் சந்தியாவிற்கு மட்டும் வந்து சேரவில்லை ஆனாலும் இம்முறை அவள் சோர்ந்தும் போகவில்லை. நேராக் தபால் நிலையத்திற்கு தன் அப்பாவுடன் சென்று தன்னுடைய பெயரில் கடிதம் ஏதும் வந்துள்ளதா என விசாரித்தாள். அப்போது தான் தெரிந்தது அவளுடைய பல்கலைக்கழகத்திற்கான அனுமதிக் கடிதம் யாரும் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இதனை பார்த்த சந்தியாவிற்கு கிடந்த கடிதத்தைப் பார்த்து சந்தோசப்படுவதா அல்லது அங்கே கிடக்க வைத்தவர்கள் மேல் கோவப்படுவதா என்ற மன உணர்வுடன், தன்னுள் அனைத்தையும் அடக்கிக்கொண்டு அமைதியாக கடிதத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள். அன்றுதான் அவளுடைய புன்னகைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அவள் மனமோ சிறகடித்துப் பறந்தது.
இவ்வாறுதான் நாமும் பல சந்தர்ப்பங்களில் நமக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை முறையாக செய்யாமல் அசட்டைத்தனமாக இருந்து விடுகின்றோம். இதனால் பலரது எதிர்காலம் திசைமாறி தடுமாறி விடுகின்றது. வேறு ஒருவருக்கு வெறும் கடதாசியாக தெரிந்த இக் கடிதம் சந்தியாவிற்கு மட்டுமே ஓர் எதிர் காலம். சந்தியாவின் வாழ்வில் இடம் பெற்றது போல் நம்மில் பலருக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அது விதியென விட்டு கடந்து செல்லாமல், சந்தியாவைப் போல நாமும் நம்முடைய எண்ணத்தினால் குறிக்கோளை அடைந்து கொள்வோம்
அ.ஆன் நிவேத்திகா
கிழக்குப் பல்கலைக்கழகம்.