உலகை காப்போம்
உலகிற்கு வயது குறைகிறது
பாட்டன் பூட்டனின் வாழ்வியலை
நினைவு கொள்ளும் நேரமிது.
காடுகளிலும்
மலைமேடுகளிலும்
சூழலை காதல் செய்து
வாழ்ந்த வாழ்க்கை
எங்கே?
இருள் காட்டிற்குள் சிக்கிய
கண் இழந்தவன் போல்
தவிக்கும் பூமி
இங்கே!
தேவைகளை தேர்ந்துணர்ந்து
விதைத்துண்டு விதைக்கப்பட்டவர்கள்
வாழ்க்கை பசுமையல்லோ?
பணம் இருக்கும் மமதையால்
பலதையும் விதைத்துவிட்டு
அலறுவது குற்றமல்லோ?
எதிர்வு கூறல்களையெல்லாம்
எட்டி உதைத்து
எதிர்தது நிற்கிறது
அழிவுக்காலன்
அதை எதிர்த்து நிற்க
ஒன்று கூட முடியாமல்
தயங்குகிறது கலிகாலம்
இன்றோ நாளையோ
விடிவு என்ற நம்பிக்கையில்
சேமித்தவையெல்லாம்
தீர்ந்துவிட்டது
இனி எழ வேண்டிய
நம்பிக்கை
உழுதுண்ணும் நடைமுறையே!
பாரம்பரியம்
பழமை என்று
நவீனத்தை கொண்டு வந்தவர்கள்
நவீனம் பழமையாகிவிட்டது.
பின் நவீனம்
உலக மயமாக்கமெல்லாம்
காலாவதியாக கிடக்கிறது
புதிதாக எதை
கொண்டு வரப்போறீர்
உலகை அழிக்க…
காலம் காட்டும் வழியில்
கண்கள் நடக்க வேண்டும்.
காலத்தைக் கடந்து
கண்கள் சஞ்சரித்தால்
நடப்பது நமக்கெல்லாம்
கெடுதல்தான்
வைத்தியங்களுக்கு காத்திராமல்
உள அளவில் ஓய்ந்திடாமல்
இயற்கையை கற்றால்
அருகிலும் அணுகாது
செயற்கை தொற்று
காலத்தோடு சஞ்சரித்து
எதிர்காலத்தை மீட்போம்.
ஓய்ந்தது உலகம்
சந்திரனிலும் செவ்வாயிலும்
செய்மதிக்கு என்ன வேலை
வாழும் பூமி ஆகிவிட்டது
பிணங்களின் சவக்காலை
பட்டாம் பூச்சி தேன் அருந்த
இல்லை ஒரு பூஞ்சோலை
சோர்வடைந்து வீழ்ந்துவிட்டது
இயந்திர மனிதர்களின் மூளை
வண்டுகளின் இரைச்சலில்
கண்டறிந்தோம் இசைக்கும் யாழை
நிசப்தத்தில் அடங்கிவிட்டது
வாகனம் இரைந்த சாலை
அறிவியலில் மூழ்கி
அணுவாயுதம் கண்டுபிடித்த வேளை
எதற்கும் உதவாமல் போனது
இயற்கையை கொன்ற தொழிற்சாலை
நிச்சயமற்று போனது
நாளையெனும் விடியற்காலை
அநாதைப் பிணங்களுக்கில்லை
புதைக்க ஒரு ஆறடி மூலை
கனவிலும் நனவிலும்
நினைவிருந்தது அச்சிட்ட காசோலை
மருந்தொன்று கிடைக்காமல்
உருளுது உலகின் தலை
த.நிறோஜன்.
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.