மங்கையவள் பருவமானதும்
பக்குவமாய் தொடங்குகிறது
பெண் பார்க்கும் படலம்
யார் யாரோ வருகிறார்கள் தான்
விலை தான் விண்ணைத் தாண்டுகிறது
பலியாடாய் நிற்கும் நிலை அறியாமல்
பங்கு இலாபம்
பார்க்கும் பரம்பரை- இவர்கள்
மனப் பொருத்தம் போய்
பணப் பொருத்தமே
திருமணத்திற்கு தீர்வானது
வேளை மாறாமல் விதவிதமாய் அலங்கரித்தாலும் எங்கள் வாழ்க்கை மட்டும் அழகாவதில்லை
வாழ்க்கை வரதட்சணையால்
வணிகமாகி பல வருடங்களாயிற்று
உறவுகள் எப்போதும் உதவாக்கரம் நீட்டுகையில்
ஊரார்கள் ஆளுக்கொன்றாய் உபதேசிக்க
தீராத நோய் வந்து படுக்கையில்
கிடக்கும் முன்பே
பெற்ற கடன் தீர்ப்பதே
பெரும் தவமாய் இருக்கையில்
மற்றவைப் பற்றி எல்லாம் நினைப்பேது- மனதுக்கு
ஏதோ ஒன்று வசதிக்கு ஏற்றால் போல அமைய
சாதகமும் சம்மதம் கூற
கையில் இருந்ததையும்
கடனை வாங்கியும் முடித்து விடும் எண்ணத்தில் இருக்கையில் நல்லது ஏதும் நிகழ்கையில்
நமது சனத்துக்கு பிடிக்காமல்
வரன் வீட்டாருடன் வத்தி வைக்க
வருவதாகக் கூறிச் சென்றவர்கள்
இன்னும் வந்தபாடில்லை
கன்னியில் தொடங்கியது முதிர் கன்னியாயும் முடியவில்லை….
ஆக்கம்- ஜனந்தினி சுப்பிரமணியம்