எனக்குப் பத்து வயதிருக்கும் நான் தரம் 5ல் கல்வி கற்றுக் கொண்டிருந்ததாக ஞாபகம். எங்கள் சித்திர ஆசிரியர், றாணி டீச்சர் என்று அவரை எல்லோரும் அழைப்பார்கள். அவர் சித்திர பாடவேளை ஒன்றின்போது ஷஐஸ்கிறீம் வான்| என்னும் தலைப்பில் சித்திரம் ஒன்றை வரையுமாறு கூறினார். நாங்கள் வரைந்தோம். கொஞ்சம் கடினமான தலைப்பு. வர்ண அலங்காரங்களுடன் ஐஸ்கிறீம் வான் ஒன்று தெருவோரம் நிற்கிறது. விற்பனையாளர் ஒருவர் வானிற்குள் நின்று கோன் ஐஸ்கிறீம் ஒன்றை நீட்டுகிறார். பல சிறுவர், சிறுமியர் காசுகளை நீட்டியபடி ஓடி வருகிறார்கள். றாணி டீச்சரிடம் இந்தச் சித்திரத்தைக் காட்டினேன். ஷநீங்க ஒருகாலத்தில் நல்ல ஆட்டிஸ்ரா வருவீங்க| என்று அவர் சொன்னார். அப்படி நடக்கவில்லை. ஆனால் அழகியல் நோக்கங்களை அடைந்த, அந்த மென்மையான நல்லிதயம் கொண்ட றாணி டீச்சருக்காகவே நான் 6ம் வகுப்பில் சித்திர பாடத்தைத் தெரிவு செய்து படிக்கத் தொடங்கினேன். அவர் ஓர் அருமையான சித்திர கூடத்தையும் வைத்திருந்தார். மாணவரின் ஆக்கங்களை மாற்றி மாற்றிக் காட்சிப்படுத்துவார். ஓவியர் ஜோர்ஜ்கீற்றின் ஓவியங்களைக் கொண்ட மக்கள் வங்கிக் கலண்டர் ஒன்றும் அந்த சித்திர கூடத்தில் தொங்க விடப்பட்டிருந்தது. அந்த அழகிய சூழலை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. எனது முதலாவது சித்திரத்துறைசார் அனுபவமாக இன்றுவரை நினைவுகளின் ஆழத்தில் பதிந்து போயுள்ளது.
எனது 24வது வயதில் நான் ஓர் ஆசிரியராகப் பணியேற்றபின் எனக்கு மிகவும் பிடித்துப்போன சித்திர ஆசிரியரை, ஓவியர் மாற்குவை சந்தித்தேன். திருமறைக் கலாமன்றத்தால் ஓவிய வகுப்புக்கள் நடாத்தப்பட்ட ஷபெல்லாகாசா| என்னும் வீட்டில் வரவேற்பறையின் மத்தியில் சிறுவர்கள் புடைசூழ சிறுவருள் சிறுவராக சித்திரம் வரைய வழிகாட்டிக் கொண்டிருந்த எளிமையான, இனிமையான ஒரு சித்திர ஆசிரியர் எனக்கு அறிமுகமானார். அன்றுமுதல் இன்றுவரை என் நினைவுகளில் தனியான இடம் பிடித்துக் கொண்டவர்தான் ஓவியர் மாற்கு.
அழகியல் என்பது பொதுக் கல்விப் பாடமாக 1972ம் ஆண்டிலிருந்து இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டது. தரம்1 இலிருந்து தரம் 11வரை அழகியல் பாடங்கள் பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகின்றன. அழகியல் பாடத்தின் பிரதான நோக்கங்களாக இரசனை விருத்தி, மனப்பாங்கு விருத்தி, ஆக்க சிந்தனை விருத்தி, ஆக்கத் திறன் விருத்தி என்பன அடையப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அழகியல் பாடம் அதன் இலக்கை அடைந்துள்ளதா என்ற கேள்விக்கு விடை திருப்திகரமானதாக அமையப் போவதில்லை. ஆனால் இந் நோக்கங்களை வாழ்ந்த மிகச் சிலருள்; தயக்கமின்றிச் சுட்டிக்காட்டப்படக் கூடிய ஒருவரே மாற்கு என்னும் மாமனிதர்.
இரசனையும் மாற்குவும்
இயற்கையை மிகவும் இரசித்தவர் ஓவியர் மாற்கு. அவர் தனது மாணவர்களின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சவாரி செய்து கொண்டு, (அவருக்கு சைக்கிள் ஓடத் தெரியாது) இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கோட்டை, மணிக்கூட்டுக் கோபுரம், புல்லுக்குளம், சற்று அப்பால் பண்ணைக் கடற்கரை, யாழ் நகரை தீவுப் பகுதியுடன் இணைக்கும் மரப்பாலம், அல்லைப்பிட்டிப் பனங்கூடல், மணியந்தோட்டம், மண்ணித்தலை போன்ற நகர மற்றும் புறநகர்ப் பகுதிகளின் காட்சிகள் எங்கள் கைகளுக்குள் கோடுகளாகவும், வர்ணங்களாகவும் சிக்கிக் கொள்ளும.; கடதாசிகள், வர்ணச் சுண்ணக்கட்டிகள், பொக்ஸி பென் என்று அழைக்கப்பட்ட கறுப்பு மைப்பேனா, இந்தியன்மை போன்ற ஊடகங்களைக் கொண்டு இயற்கையை இரசித்தலுக்கான கற்றல் இயல்பாக நடைபெறும். அழகான, எளிமையான சித்திரங்கள் எங்கள் வசமாகும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவை ஒரு காட்சிப் பொருளாகும்.
இப்படியான வெளிக்களக் கற்கையின்போது அவ்வப் பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய சிப்பிகள், சங்குகள், கற்கள் முதல் அழகுத் தாவரங்கள் ஊமல் கொட்டைகள் எனப் பல பொருட்களுக்கான சேகரிப்பும் நடக்கும். பின்பு அவை கழிவுப் பொருள் கலை ஆக்கங்களாக மாற்றம் பெறும். தனக்குப்பின்னால் வருகின்ற படையணிக்கு இவ்வாறுதான் இயற்கையை இரசிக்கச் சொல்லித் தந்தார் ஓவியர் மாற்கு.
ஓவியம் சார்ந்த புத்தகங்கள், சஞ்சிகைகளைச் சேகரிக்கும் பழக்கமும் அவருக்கிருந்தது. தன்னுடைய சேகரிப்பிலிருந்த விலைமதிப்பற்ற அந்தப் புத்தகங்களை அவற்றிலுள்ள ஓவியங்களை பார்க்கவும், பார்த்து வரையவும் ஊக்கப்படுத்துவார். இவ்வாறாக பிறிதொரு வகையில் இரசனை விருத்தி ஏற்பட வகை செய்வார். ஆரோக்கியமான இரசனைகளைக் கொண்டிருந்த ஓவியர் மாற்கு தனது மாணவப் பரம்பரைக்கு நல்ல இரசனையை கற்றுத் தந்தார்.
ஓவியர் மாற்குவின் மனப்பாங்குகள்
மாற்கு பணபலம் படைத்தவரோ மேட்டுக் குடியினரோ அல்ல. சராசரி யாழ்ப்பாண நடுத்தரக் குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தவர். தனது குடும்பத்திற்காக செலவிட வேண்டிய தனது நேரத்தையும் உழைப்பையும் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பொது நோக்கிற்காகவே செலவிட்டார். அவரிடம் ஒரு நல்லிதயம் இருந்தது. யாரையும் கடிந்து பேசிப் பார்த்ததாக ஞாபகமில்லை. வியாபார நோக்குடன் படைப்புக்களில் ஈடுபட்டதுமில்லை. யார் எதைக் கேட்டாலும் தன்னால் இயன்றவரை உதவுவதற்கு பின்னின்றதையும் பார்த்ததில்லை. மாணவர்கள் மத்தியில் உயர்ந்தோர் தாழ்ந்தோர், ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை அவரது சிறிய சித்திர கூடம் என்றுமே இனங்காட்டியதில்லை. அவரது வீட்டு விறாந்தையில் கூடிய மாணவர்கள் இனிய விலைமதிக்க முடியாத அழகியல் அனுபவங்களை மட்டுமே பெற்றுச் சென்றனர்.
அவரது அயராத உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத போதும், சந்தர்ப்பங்கள் பல மறுக்கப்பட்ட சூழலிலும,; அவரை நோக்கிக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வேளைகளிலும்கூட சலனமற்ற நதிபோல அவாது ஓவிய வாழ்வு ஓடிக்கொண்டேயிருந்தது. சற்றும் கலங்காமல் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனதுடன் தனது தேடலையும் முயற்சிகளையும் முடிவிலியாக்கிக் கொண்டேயிருந்தமையினால் தவிர்க்க முடியாத வகையில் வரலாறு அவரைப் பதிவு செய்து கொண்டது.
ஆக்க சிந்தனை நிறைந்த மாற்கு
தனது படைப்புலகிற்குள் நின்று கொண்டு கிடைக்கின்ற எந்தச் சந்தர்ப்பங்களையும் பயனுறுதிமிக்கதாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவருக்கிருந்தது. திருமறைக்கலாமன்றத்தில் தான் கற்பித்த காலத்தில் வருடாவருடம் தைப்பொங்கல் தினத்தையொட்டி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடாத்தும்; திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தினார். இத்தகைய காட்சிப்படுத்தல்கள் மாணவரின் திறன் விருத்திக்கு சிறந்த களம் அமைத்துக் கொடுத்தது. அப்போது யாழ் மாநகர மேயராக இருந்த திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் ஆக்க சிந்தனையும் ஓவியர் மாற்குவின் ஆக்க சிந்தனையும் இணைந்து ஓவியக் கண்காட்சி ஒன்று அக்காலப்பகுதியில் நடத்தப்பட்டது. விடுதலைப் போராளிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சிகளையும் சிறப்பாகப் பயன்படுத்தினார். தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை தனது மாணவர்களிற்கும் ஏற்படுத்திக் கொடுப்பார். கிடைத்த பொழுதுகளில் ஓவியம் மட்டுமன்றி அதனுடன் இணைந்த பல்வேறு கலைப்படைப்புக்களையும் உருவாக்க உழைத்தமை அவரை ஒரு பூரணத்துவமான அழகியல் ஆசானாக மிளிரச் செய்தது.
ஆக்கத்திறனின் உச்சம் மாற்கு
கல்வியியலாளர் புளூம் என்பாரின் அறிவுப் பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி மனிதனின் அறிதல் ஆட்சி விருத்தியில் உயர் நிலையில் இருப்பது ஆக்கத்திறன் விருத்தி என்பதாகும். ஓவியர் மாற்குவின் ஆக்க உலகத்தில் ஆக்கத்திறனும், அறிவுத் தொகுப்பும் நிறைந்த கலைப்படைப்புகள் பற்பல உருவாகின.
அவரது வாழ்க்கைச் சூழலின் வாழ்வனுபவங்கள் அனைத்தும் கதைகளும், நிகழ்வுகளும் ஓவியமாக மாறிக் கொண்டிருந்தன. 1960களில் ஷகழுவுதற்பாணி| நீர்வர்ண ஓவியங்கள், யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஷஅலங்காரம்| என்னும் தலைப்பிலான தொடர் ஓவியங்கள், ஷசல்லாபம்| என்னும் தலைப்பிலான தொடர் ஓவியங்கள், சகுந்தலை, தமயந்தி போன்ற இலக்கியப் பெண்களின் தொடர் படைப்புக்கள் இன்றும் உயிரோட்டத்துடன் நினைவில் நிறைந்துள்ளன.
இந்துக் கடவுளர்களான சிவன், பார்வதி, இருவரும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர், சிவதாண்டவம், விநாயகர் எனப் பலவும் நவீனத்துடன் கலந்த கலைவெளிப்பாடாக மிளிர்ந்தன. யேசுவின் சிலுவை மரணம், யேசுவின் திருமுகம், மகனை மடியில் ஏந்திய வியாகுலத்தாய், தமிழ் அடையாளங்களை உள்வாங்கி கலாசாரமயப்படுத்தப்பட்ட யேசு போன்றவை கிறிஸ்தவ கடவுளரை மையப்படுத்திய சில ஓவியங்களாகும். குரங்கும் கோட்டானும், புறாவும் பூனையும், கழுதைகளும் காளைகளும், நாயும் நரியும், சேவலும் கோழியும் என வீட்டு விலங்குகளும் காட்டு விலங்குகளும், பூச்சிகளும் புள்ளினமும் அவற்றின் இயல்புகளுடன் கருத்தேற்றம் பெற்று கண்ணிற்கு விருந்தும் சிந்தனைக்குச் செய்தியும் வழங்கும் ஓவியங்களாக பரிணமித்திருந்தமை ஞாபகங்களில் நிலைத்துள்ளது.
அழகியலில் அடுத்துள்ள கலைகளையும் ஓவியமாக்க ஓவியர் மாற்கு தவறவில்லை. காவடியாட்டம், நாதஸ்வரக் கச்சேரி, தவில் வாசிப்பு, இராகங்களின் சங்கமம் என இசையும், நடனமும், நாடகமும் இலக்கியமும் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் உருப்பெற்றன. அச்சில் வரும் வர்ணப்படங்களை உருமறைப்புச் செய்து படைத்த ஓவியங்கள் இவரின் மற்றுமொரு தனித்துவமான கண்டுபிடிப்பாகும்.
போரின் உக்கிர தாண்டவம் தொடங்கியபோது தவிர்க்க முடியாதபடி சனத்தின் அவலங்கள் பதிவாகத் தொடங்கின. வரைதல் ஊடகங்களின் கிடைப்பனவு இறுக்கமானபோது வெள்ளைத்தாளில் கறுப்புமையால் வரையப்பட்ட ஓவியங்கள் போரின் அச்சத்தையும் அவதியையும் புலப்படுத்தி அர்த்தத்துடன் வெளிப்பட்டன. இவ்வாறு சலிப்பில்லாத அவரது தேடலும் உழைப்பும் ஆக்கத்திறன் மிகுந்த படைப்பாளியாக அவரை உயர்த்தி இருந்தன.
அற்புத மனிதன். அழகியல் ஆசான். இனியவை உரைத்து இயல்பாய் வாழ்ந்தவர். போட்டியில்லை பொறாமையில்லை. பட்டமும் பதவியும் நாடிப் பெற்றதுமில்லை. இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தார். மனித நேயத்துடன் மாண்பாக வாழ்ந்தார். எனது இருபத்துநாலாவது வயதிலிருந்து நாற்பது வயதுவரை, ஆரம்பத்தில் அன்றாடம், வாராவாரம், மாதத்திற்கொரு தடவை என அவரை சந்தித்துப் பேசிய, பழகிய, தேடிய, படைத்த காலங்கள் அனுபவத் திரட்சியாக என்னுள் உறைந்திருக்கிறது. இடப்பெயர்வு எம்மைத் திசைக்கொன்றாய்ப் பிரித்த பின்பும், பிறிதோர் நாளில் மன்னார்க் கல்விவலயம் நடத்திய கல்விக் கண்காட்சியின் போது நாங்கள் அருகருகே காட்சிக் கூடங்களை அமைத்திருந்தோம். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காட்சிகளை ஒழுங்கமைத்த அவர் எனதும் எனது மாணவர்களினதும் காட்சிக்கூடத்தைப் பார்வையிட்டு உற்சாகம் தந்தார். அதுதான் அவருடன் இறுதிச் சந்திப்பு என அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு மாலைப் பொழுதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாலைச் செய்தியறிக்கையில் வடக்கின் பிரபல ஓவியர் மாற்கு காலமானார் என்ற செய்தி கேட்டு இதயம் ஒரு கணம் அதிர்ந்தது. ஊரடங்கு நீங்கி மறுநாள் காலை இல்லம் நாடிச் சென்றபோது எல்லாம் முடிந்திருந்தது. மாற்கு என்னும் அழகியல் ஆளுமை நீண்ட அமைதியில் ஆழ்ந்து போனது. நிலைத்த நினைவை தந்து போனது.