தேடலும் படைப்புலகமும் நூலினது முதற்பதிப்பு 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் (13-16) ஓவியர் அ.மாற்குவின் கலை அம்பலம் ஓவியக் காட்சி இடம்பெற உள்ளது.ஓவியர் அ.மாற்கு அவர்களின் வாழ்நாட்கால படைப்புக்களில் போரிற்கு தப்பியவற்றின் நூற்றுக்கணக்கான ஓவியங்களில் இருந்து தெரிந்தெடுத்த 70 ஓவியங்களின் காட்சியிது.
இக்காலகட்டத்தில் நின்று திரும்பிப் பார்க்கும் பொழுது தேடலும் படைப்புலகமும் நூல், அதன் உருவாக்ககாலம், உருவாக்கமுறைமை என்பன இன்ப அதிர்ச்சியூட்டுவன. உருவாக்க முறைமை என்னும்போது விடயத்தேடலுக்கான பயணங்கள், நூல் தயாரிப்பிற்கான வழிமுறைகள் என்பன நினைவு கூரப்பட வேண்டியவை.
ஏனெனில் பல்வேறு கலை மரபுகளும் மிகவும் தராதரமான நிலையில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற பொழுதும் அவை மதிப்பிடப்படாமை, வரலாறாக்கப்படாமை என்பன பெரும் பாதகங்களாக அமைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் தமிழியலின் தேடலும் படைப்புலகமும் நூலாக்கப் பணியின் முக்கியத்துவம் விளங்கப்படவேண்டியதாகின்றது. இது போர்க்காலப் பதிப்பாகவும் அமைந்து விடுகின்றது. இத்தகைய காலகட்டத்தில் நூறு ரூபாய்க்கு நூற்றியெழுபத்தேழுபக்கங்களில் இந் நூலின் வெளியீடும் ஆச்சரியம் தருவது.
ஈழத்திற்கென்று தனித்துவமான பதிப்பு மரபு உண்டு, இந்தப் பின்னணியில் அதன் தொடர்ச்சியின் முக்கிய புள்ளியாகவும் இந்நூல் வெளிவந்திருக்கின்றது என்பதும் அதன் சிறப்பாகும். இந்நூலை அ.ஜேசுராசா, சி.பத்மநாபஐயர், க.சுகுமார் தொகுத்திருக்கின்றனர். உள்ளூர் ஓவியர் சார்ந்த கட்டுரைகள் மற்றும் குறிப்புகளை ம.நிலாந்தன் ஆக்கியுள்ளார்.
தேடலும் படைப்புலகமும் நூலாக்கத்திற்கான உள்ளூர் ஓவியர்களுடான சந்திப்புகளில் ம.நிலாந்தன் ஈடுபட்டிருந்த காலங்களில் நானும் அவரும் சந்திப்பதும் உரையாடுவதும் வழமை. இது பல்வேறு உள்ளூர் ஓவியர்களது ஆக்கங்கள், ஆக்க திறன்கள், அவர்களது கருத்து நிலைகள், அதிருப்திகள், அலர்கள் என்பவற்றை உரையாடும் சந்தர்ப்பமாக அமைந்தது.
ஈழத்தமிழர்தம் கலையாக்க மரபுகள் நவீன காலத்திலும் சிறப்புற்றிந்த பொழுதும் அவை பற்றி கவனத்தில் கொள்ளப்படாமையை காணமுடிகின்றது. இலக்கியமையப்பட்ட உரையாடல்களே ஆதிக்கம் பெற்றிருந்தன. குறிப்பாக சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை நூல்களே இடம் பிடித்திருந்தன. விதிவிலக்காக நாடகக்கலை, நாடக இலக்கியம் பற்றிய உரையாடல்களை காணமுடியும்.
ஓவியம், சிற்பம், திரைப்படம், புகைப்படம் உள்ளூர் கலை மரபுகள் என்பன சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களாக இருந்த பொழுதும் இவை முன்னிறுத்தப்படவில்லை என்பதிலும் கவனத்தில் எடுக்கப்படாத விடயங்களாகவே இருந்திருக்கின்றன. இத்தகைய பின்னணியில் தான் அலை சஞ்சிகையின் வரவும் தமிழியல் பதிப்பகத்தின் வரவும் மேற்படி விடயங்களை 1970ற்கு பின்னரான காலங்களில் கவனத்திற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இதன் வெளிப்பாடுதான் தேடலும் படைப்புலகமும் நூலாக்கம் குறித்த சிந்தனையும் செயற்பாடுமாகும். இந்நூல் உருவாக்கத்திற்கான தேடலானது தனித்து தவித்துப் போயிருந்த ஓவியக் கலைஞர்கள் தமது மனங்களை திறப்பதற்கு, கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு, வெளிப்படுத்தப்படாமலே இருந்த படைப்பாக்கங்களை அறிமுகப்படுத்தி அளவளாவதற்கு களங்களாகவும் அமைந்தன.
மட்டுப்படுத்தப்பட்டவொரு வட்டத்திற்குளாவது மேற்படி விடியங்கள் சார்ந்த உரையாடல்கள் முகுழ்த்தனவெனலாம். 1992ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணத்து ஓவியர்கள் என்ற தலைப்பில் ஆறு நாட்ககள் கொண்ட ஓவியக் காட்சிப்படுத்தலையும், கலந்துரையாடல்களையும் வடிவமைத்து முன்னெடுப்பதற்கான விதையாக இருந்திருக்கின்றது.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் துறைத்தலைவராக இருந்ததும் அவரது சிறப்பாளுமை காரணமாக மேற்படி ஓவியக் காட்சிப்படுத்தலுக்கான அலுவலக ஏற்பாடுகள் தங்குதடையின்றி முன்னெடுக்கும் படியாக இருந்ததும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
இவற்றை செய்யும் பொழுதோ அல்லது நாடக விழாக்கள், கலை விழாக்கள், திரைப்பட விழாக்கள் என்பவற்றை நடத்தும் பொழுதோ நிதி என்ற விவகாரம் அறியப்படாமலேயே விழாக்களை நடாத்தி முடித்து இருக்கின்றோம். இன்றும் எமது செயற்பாடுகளை நாங்களாகவே முன்னெடுக்கும் அறிவையும், திறனையும் தந்திருக்கின்றது என்பது கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடமாக இருக்கின்றது.
தேடலும் படைப்புலகமும் நூலுருவாக்கத்திற்கான விடையத் தேடலுமொரு செயல்நிலை படிப்பினை. அதேபோல அதன் நூலுருவாக்கமும் ஒரு செயல்நிலை படிப்பினை. இந்த விடயங்கள் விரிவாக அறியப்பட்டு ஆராயப்பட்டு எழுதப்படவேண்டியவை.
உள்ளூர் கலையாக்கத் திறனொன்று பற்றிய பாரியபதிவொன்று எவ்வாறு உள்ளூர் ஆளுமைகளாலும், அறிவுத்திறன்களாலும் உருவாக்கம் பெற்றிருக்கின்றது என்பது படிப்பினைக்குரியது.
நடமாடுதல் அல்லது உயிர் வாழ்தலே மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்த ஒரு போர்ச் சூழலின் வீரியமிக்க குழந்தைதான் தேடலும் படைப்புலகமும்.
பேராசிரியர் சி. ஜெயசங்கர்