இலக்கியங்கள் எப்போதும், அதன் இயலுகின்ற முறையால், சம்பவங்களை கண்முன்னே காண்பியங்களாக, காட்சிவிம்பங்களாகப் படம்பிடித்துகாட்டும் இயல்புடையன. எனினும், வாசிப்பின் வழி தோன்றிடும் காட்சிவிம்பங்கள் எப்போதும், அவரவர் அனுபவ அறிவிற்கு ஏற்றாற்போலவும், கற்பனாநிலைக்கு ஏற்றாற் போலவும் வேறுபடுதல் இயல்பு. ஆயினும் கதை என்னவோ ஒன்றாகவே இருந்திருக்கும். இந்நிலை என்பது எல்லாவகையான புதின இலக்கியங்களுக்கும் பொருந்தும். அப்படித்தான், ‘ஆயிஷா’ இரா.நடராசன் எழுத்து வழி குறுநாவலாகக் கருக்கொண்டு, இரா.புவனா இயக்கத்தில், இரா.சந்திரசேகரன் இசையில், சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவில் குறும்படமாக ‘ஆயிஷா’ எனும் பெயரிலேயே, உருவாகியுள்ளது.
விஜயபுவனேஸ்வரி பிலிம்ஸ் வழங்கும் குறித்த குறும்படத்தில், கதை, வசனம் இரா.நடராசனும், படத்தொகுப்புஃஒலிவடிவமைப்பு சுரேஸ் அர்ஸ்சும், திரைக்கதை பா.சிவகுமாரும் செய்திருக்கின்றனர். ஊர்வசி அர்ச்சனா- விஞ்ஞானப்பாட ஆசிரியராகவும், கலைராணி-ஆயிஷாவின் சித்தியாகவும், ஸ்வேதா- ஆயிஷாவாகவும் நடிப்பினூடாக, நாவலுக்கு உயிரூட்டியிருக்கின்றனர். கல்வி சூழலின் யதார்த்த நிலையை வெளிப்படுத்துவதாக, பள்ளிக்கூடங்கள் பலிக்கூடங்களாகிவிட்ட கசப்பான உண்மையை தெளிவுப்படுத்துவதாக அமைந்த குறுநாவலின் கதையை இசகாமல்,பிசகாமல் படமாக்கியிருக்கின்றனர் படக்குழுமத்தினர்.
விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதும் முன்னுரையாக அமையும் குறித்த குறுநாவல், படமாகும் போது, அச்சகத்தில் குறித்த விஞ்ஞான நூலின் அச்சுப்பதிப்பை பெற செல்லும் ஊர்வசி, அச்சகஉரிமையாளர் ‘நீங்கள் ஒரு முன்னுரை எழுதிக் கொடுத்து விட்டால், புத்தக வேலை முடிந்துவிடும்’ என சொல்லவும், நாளைக்கு எழுதி தந்துவிடுகிறேன் என சொல்வதோடு படம், ஆரம்பமாகிறது. கதைசொல்லும் பாங்கில், விஞ்ஞான பாட ஆசிரியரான ஊர்வசியின் நனவோடையாக (காந்தவியல் தொடர்பான கேள்வியுடன் உயிர்கொள்ளும் ஆயிஷா, வுhந வசரவா ழக அயபநெவள என்ற புத்தகத்தை ஊர்வசிக்கு கொடுக்கிறாள். ஊர்வசிக்கு இணைபுரியாத பிரியமும், ஆயிஷா குறித்து அறிய வேண்டும் என்ற ஆவல் உந்தப்படவே, மறுநாள் வகுப்பறையில் சென்று பார்க்கவும், ஆயிஷா இல்லாதிருக்கவும் மற்றைய மாணவர்களிடம் கேட்டு ஆயிஷா குறித்து அறிந்துக் கொள்ளும் ஊர்வசி, சக ஆசிரியரால் ( கணித பாடம் ) பத்தாந்தர கணக்கு செயல்முறையை செய்துக் கொடுத்ததற்காக, தண்டிக்கப்பட்டதையும், அறிந்துக் கொள்கிறார்.
இப்போது ஆசிரியர் மாணவர் என்ற உறவை தாண்டிய, பாசமும் புரிதலும் இருவர் மத்தியிலும் இருப்பதை படம் காட்சியாக்கியிருக்கிறது. பின்னரும் கேள்விகளுக்காக தண்டிக்கப்படும், ஆயிஷாவின் கால்களில், அடிவாங்கிய தடம் இருப்பதைக் கண்டு, ஊர்வசி இது என்ன? என்று வினவவும், தான் கேள்விக் கேட்டதற்காக தண்டிக்கப்பட்டதை கூறுகிறாள். அடித்தால் வலிக்காமல் இருப்பதற்கு மருந்து ஏதும் இருக்கா மிஸ்? முதல்ல அத கண்டுபிடிக்கணும் என்கிறாள், ஊர்வசி இருக அணைத்துக் கொள்கிறாள். மறுநாள் மாணவி ஒருத்தி ஊர்வசியை, ஆயிஷா அழைத்ததாக சொல்லிக் கூட்டிச் செல்கிறாள், ஆயிஷா தன் பரிசோதனை வெற்றியடைந்ததாகச் சொல்லுகிறாள்; ஊர்வசி ஒன்றும் புரியாதவராய், என்ன பரிசோதனை, என்ன வெற்றி எனக் கேட்கிறார். தான் தவளை ஒன்றிற்கு, நைட்ரஸ் ஆக்சைட்டு கரைசலை செலுத்தியதாகவும், அது இரண்டு மணிநேரமாக அசைவற்று கிடப்பதாகவும், தானும் தனக்கு செலுத்திக் கொண்டதாகவும், தனக்கு இப்போது எவ்வளவு அடித்தாலும் வலிக்காது என்பதையும் சொல்லி முடிக்கும் அவள், தன் பரிட்சார்த்த வெற்றியோடு மரணித்;து போகிறாள்.) படம் முழுதும் நகர்கிறது. கண்ணீர் மழ்க முன்னுரையை எழுதி முடிக்கும் ஊர்வசி, இறுதியில் ஆயிஷாவின் கல்லறையில், குறித்த விஞ்ஞான புத்தகத்துடன் அஞ்சலி செலுத்துவதாக,ஆயிஷாவின் ‘ மிஸ், கரோலின் ஏர்ஷல் போலவோ, மேரி கியூரி போலவோ நம்ம நாட்டுல பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்?’ என்ற கேள்வியை நினைவு கூர்ந்து, கல்லறையை விட்டு எழுந்து செல்வதுடன் படம் முடிவடைகிறது.
பரீட்சைகளுக்காவும், பெறுபேறுகளுக்காகவும் தயார்படுத்தப்படும், எங்களுக்குள்ளும் இப்படியான ஆயிஷாக்கள், அருவமற்றவர்களாகவே, வாழ்ந்துமடிந்துக் கொண்டிருக்கிறார்கள். உலகளாவிய கல்வி ஆர்வலர்களின் மனதை புழுவாய் குடைந்துக் கொண்டிருக்கும், ஆயிஷா,இப்படியாக படமாக்கப்பட்டிருக்கிறது.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.