வாழ்வதும் கெடுவதும்
வாயினால் தான்!
என்னை,
இப்படியாக
அறிமுகஞ் செய்துக்கொள்கிறேன்.
ச்சி…ச்சி..
என்னை,
அவர்கள்
அப்படியே அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
பதின்ம பருவ பெண்களெல்லாம்
பத்தோடு பதினொன்றாய்,
வாழ்ந்துக் கொண்டிருந்த காலமது.
பத்தோடு பதினொன்றாய் வாழ
பிடிப்பு இல்லாதவளாய்,
பாதம் துளைக்கும்
முட்கள் போல்,
என்
சிந்தை துளைக்கும்
கேள்விகளால்,
அவரை சந்திக்கும் வரை,
பலர் முன்னும்,
பலமுறை
கெடுதிபட்டுக்கொண்டிருந்தேன்.
காந்தம் என்றால் ஈர்ப்பு
அப்படித்தானே அர்த்தம்.
அப்படித்தான்
என் கேள்விகளும்.
அவரை மட்டும்
காந்தமாய் ஒரு பொழுதில்,
கவர்ந்திருந்தன.
காந்தவியல்..
அந்த காந்தவியல் பாடம் தான்
அவரை,
என் ஆசிரியரை,
என்னோடு உறவாட வைத்திருந்தது.
அந்த ஈர்ப்பு தான்,
என் கேள்விகளுக்கானப் பதில்களை
கேட்டுத் தெளியும் முயற்சியில்,
என்னை
வாழவைத்துக் கொண்டிருந்தது.
இப்போது
வாழ்வதும் கெடுவதும்
வாயினால் தான்
என்பவளாக இருந்த
நான்,
அவர்வழி,
ஆயிஷாவாக அடையாளப்பட்டு
நிற்கிறேன்.
என்
சிந்தை துளைக்கும் கேள்விகளுக்கு
அவர்வழி,
பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கேள்விக் கணைகளே,
என் வாழ்வாகிப் போயிருந்த
ஒரு காலத்தில்,
பரீட்சார்த்தத்தின் தேவையையும்
அன்றே,
உணர்ந்திருந்தேன்.
இல்லை.
அந்த பிரம்பின் தழும்புகள்
அதன் தேவையை
வலுவாக உணர்த்தியிருந்தது.
உடல் மருத்து போவச் செய்வதே
என் முதல் பரீட்சார்த்தம்.
நான் பாக்கியசாலியாக இருந்திருக்கிறேன்.
கொஞ்சம் துர்திஷ்டமும் தான்.
என் முதல் பரீட்சார்த்தமோ,
வெற்றியின் மைல்கல்லை
தொட்டிருந்தது.
என் உயிரோ
சுவர்க்கத்தின் வாயில்கதவை
எட்டிக்கொண்டிருந்தது.
ஆயிஷா….
மரணித்துப் போனதாக
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இல்லை.
நிச்சயமாக இல்லை.
எங்கே,
அவர் அவர் அறிவிற்கு
கதவுகள் திறக்கப்படுகிறதோ,
எங்கே,
அவர் அவர் கேள்விகள்
கணைகளாகத் தொடுக்கப்படுகிறதோ
அங்கெல்லாம்,
நான்
ஆயிஷாவாக
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு,
ஆயிஷா.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.