கட்டுரைகள் பிரதான செய்திகள்

தமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி? நிலாந்தன்..


சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா? என்றுகேட்கப்பட்டபொழுதுசுமந்திரன் கூறுகிறார் ‘ஆம் ‘என்று. ஆணித்தரமாகஅவர்அந்தப்பதிலைக் கூறுகிறார்.

எந்ததுணிச்சலில் அவர் அந்தபதிலை கூறுகிறார்?கடந்தமுறைவென்றதைப்போல இந்தமுறையும் வெல்லலாம் என்று அவர் நம்புகிறாரா? அல்லது கடந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் திட்டமிட்டுவேலை செய்திருக்கிறாரா?

இந்த கேள்விக்கான விடை மிகவும் முக்கியம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் சுமந்திரன் வெல்வதற்கான வாய்ப்புகள் சந்தேகத்துக்கு உரியவை என்று நம்பப்பட்டது. எனினும் அவர் வென்றார். இம்முறையும் தான் வெல்வேன் என்று உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது ? தமிழரசுக் கட்சிக்குள்ள பாரம்பரிய வாக்கு வங்கியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து வருகிறதா? அல்லது அவருடைய கடும் உழைப்பில் இருந்து வருகிறதா ?அல்லது தமிழ் வாக்காளர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நம்பிக்கையிலிருந்து வருகிறதா?

சுமந்திரனை எதிர்க்கும் பலரும் இந்தவிடயத்தை ஆழமாக ஆராய வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் வாக்காளர்கள் மத்தியில் தமிழ் தேசியவாக்கு வங்கிக்கு வெளியே சிறுசிறு வாக்கு வங்கிகள் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேவானந்தாவுக்கு ஒரு பலமானவாக்கு வங்கி இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவுசெய்யப் போதுமான அந்தவாக்கு வங்கிகடந்த 11 ஆண்டுகளில் தேய்ந்து வருக்கிறது.எனினும் இப்பொழுதும் ஒருநாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேவையான அளவுக்கு அதுபலமாக இருப்பதாகவே தெரிகிறது. தேவானந்தாவுக்கு வெளியே விஜயகலா அங்கஜன் பிள்ளையான் போன்றோருக்கும் வாக்குவங்கிகள் வளர்ந்து  வருகின்றன.

சுமந்திரனின் நேர்காணலை ஒரு விவகாரமாக மாற்றும் விதத்தில் உரிய அழுத்தங்களைக் கொடுத்து தொகுத்து பிரசுரித்த கப்பிட்டல் டிவி அங்கஜனின் உறவினரால் நடத்தப்படுவது. எனவே அதற்குப்பின் ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரல் உண்டு. ஆனால் இங்கு பிரச்சினை அதுவல்ல. சுமந்திரனை போலவே அங்கஜனும் நம்புகிறார் தனக்கு ஒருவாக்கு வங்கியை விருத்திசெய்யலாம் என்று. விஜயகலா நம்புகிறார் தனக்கு ஒருவாக்குவங்கி உண்டு என்று. கிளிநொச்சியில் சந்திரகுமாரம் அவ்வாறு நம்புகிறார்.

கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்தேசியபரப்புக்கு வெளியே தேசிய நோக்குநிலை அற்ற அல்லது அதற்கு எதிரான சிறுசிறு வாக்குவங்கிகள் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வருகின்றன. இவை வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. தங்களை தமிழ்த்தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் விட்ட வெற்றிடமே இந்ததமிழ் தேசியநீக்கம் செய்யப்பட்ட வாக்குவங்கிகளின் அல்லது தமிழ்தேசிய எதிர் வாக்குவங்கிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகும். அதாவதுகடந்த 11 ஆண்டுகளாக தமிழ்தேசியவாதிகள் பொருத்தமான அரசியல் தரிசனங்களோடு வாக்காளர்களை அணிதிரட்டத் தவறிய ஒருவெற்றிடத்தில் இப்படிப்பட்ட வாக்குவங்கிகள் உற்பத்தியாகி பலமடைந்து வருகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய வறுமை அறியாமை சாதி ஏற்றத்தாழ்வுகள் சமூக ஏற்றத்தாழ்வுகள் மத முரண்பாடுகள் போன்றவற்றை சமயோசிதமாக கையாண்டு இந்த வாக்குவங்கிகள் விருத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு கருத்து ரீதியாகவும் நடைமுறை அனுபவரீதியாகவும் தமிழ்தேசிய வாக்குவங்கியில் இருந்து உடைந்துபோகும் வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசியல்வாதிகள்  வந்துவிட்டார்கள்.

சுமந்திரனும் அவர்களில் ஒருவர்தான். ஆனால் அவர் தமிழ்த் தேசியக் கொடியின் கீழ் அதைச் செய்கிறார் என்பதுதான் இங்குகவனிக்கப்படவேண்டியது. சுமந்திரனின் தொடக்க கால வாக்காளர்கள் பெருமளவிற்கு தமிழ்தேசிய தன்மைமிக்கவர்கள். கூட்டமைப்பின் வாக்குவங்கிதான் அது. கூட்டமைப்பின் பேரால் தான் சுமந்திரன் வாக்குகேட்டார். எனவே அந்தவாக்கு வங்கியின் அடித்தளம் தமிழ்தேசிய ஆதரவுதளம் தான்.

கடந்தவெள்ளிக் கிழமைநடந்த கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் கதைத்த சம்பந்தர் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பேட்டி கூட்டமைப்பின் வாக்குவங்கியில் தாக்கத்தைச் செலுத்துமெனப் பரவலாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

எனினும் தன்னுடையசர்ச்சைக்குரியபேட்டியும் உட்படதான் தொடர்ச்சியாகதெரிவித்துவரும் கருத்துக்கள் தனதுவாக்குவங்கியைபலவீனப்படுத்தலாம் என்பதைநன்குதெரிந்திருந்தும் சுமந்திரன் எந்தத் துணிச்சலில் அவ்வாறுகதைத்தும் செயற்பட்டும்வருகிறார் ?

விடைமிகஎளிமையானது. தமிழ்தேசிய நீரோட்டத்துக்கு வெளியே ஒருவாக்கு வங்கி தனக்கு உண்டு என்று அவர் வலிமையாக நம்புகிறார். அங்கஜனும் டக்ளஸ் தேவானந்தாவும் விஜயகலாவும் சந்திரகுமாரும் நம்புவதைப் போல சுமந்திரனும் நம்புகிறார். தனது வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின்னரும் தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தனக்கு எதிராக திரும்பப் போவதில்லை என்று அவர் நம்புகிறார். அப்படிநம்பும் அளவுக்கு அவர் வேலை செய்கிறார். தனது வாக்கு வங்கியை கடந்த பத்தாண்டுகளில் தான் எப்படித் திட்டமிட்டுக் கட்டிஎழுப்பினார் என்பதுசுமந்திரனுக்கு தெரியும். அதன் பலன் தனக்குகிடைக்கும் என்றுஅவர் நம்புகிறாரா?

இந்த இடத்தில் ஓர் ஆகப் பிந்திய உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டும். வடமாகாணசபையில் முக்கிய பொறுப்பை வகித்த ஒரு அரசியல்வாதி என்னிடம் சொன்னார்… கோவிட் -19ற்காக நிவாரண பொருட்களை வழங்கியபொழுது பழகநேர்ந்த சிலநபர்கள் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் தமிழ்தேசிய எதிர்நோக்குநிலையை கொண்டவைகளாக காணப்பட்டன என்று. தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்படட ஒரு தொகுதிவாக்காளர்கள் திரண்டுவருகிறார்கள் என்று. தமிழ் தேசிய நோக்குநிலைக்கு எதிராக மிக இயல்பாக ஒரு வாக்கு வங்கி வளர்ச்சியுற்று வருகிறது. வரலாறு தெரியாமல் அல்ல துதிரிபுபடுத்தப்பட்ட வரலாற்றை நம்பியோ அல்லதுதமிழ் தேசியவாதிகளாக தெரியும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்து ஒருதொகுதி வாக்காளர்கள் சுமந்திரனை போன்றவர்களின் பின் போகிறார்கள். இது ஓர் இயல்பானவளர்ச்சி போல நடந்துவருகிறது. சுமந்திரனை குறைகூறும் பலரும் இவ்வாறுதென்னிலங்கை கட்சிகளுக்கும் சுமந்திரனைப் போன்றவர்களுக்கும் எப்படிவாக்குகள் திரளுகின்றன என்பதைக் குறித்து ஆழமாக ஆராயவேண்டும்.

தமிழ் தேசியக் கொடியின் கீழ் அதற்கு எதிரான ஒருவாக்கு வங்கியை சுமந்திரன் மட்டும் கட்டியெழுப்பவில்லை. சுமந்திரனின் பேட்டியை நியாயப்படுத்திய சம்பந்தனின் தலைமையின் கீழ் கட்சிக்குள் வேறுசிலரும் அவ்வாறான நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள். ஆனாலவர்கள் சுமந்திரனைப் போல வெளிப்டையாகக் கதைப்பதில்லை. அதாவது தமிழ் தேசியக் கொடியின் கீழ் தமிழ் தேசியநீக்கம் செய்யப்பட்டஒரு வாக்குவங்கி வளர்க்கப்படுகிறது.

சுமந்திரன் ஒரு தனிமனிதர் அல்லஅவருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் உண்டு. மாகாணசபை மட்டத்திலும் ஆட்கள் உண்டு. அவர் வடமாகாணசபைக்குள் ஒருபலமான அணியைவைத்திருந்தார். உள்ளூராட்சி சபை மட்டத்திலும் அவருக்கு விசுவாசிகள் கூட்டம் ஒன்று உண்டு. தவிர அரசு அலுவலர்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் அவருக்கு வேலைசெய்பவர்கள் உண்டு. முகநூலில் அவருக்காக பிரச்சாரம் செய்பவர்களைப் பார்த்தால் அதுதெரியும். ஒருஅணியாக அவர்கள் இயங்கிவருகிறார்கள். சட்டவாளர் தவராசாவை தேசியப் பட்டியலின் மூலம் உள்வாங்குவதற்கு தடையாக இருப்பது சுமந்திரன் என்று கூறி கட்சிக்குள் ஒருபகுதியினர் அவருக்கு எதிராககாணப்படுகிறார்கள். அவருடையஅரசியல் நிலைப்பாட்டுக்குகட்சிக்குள்ளேயே எதிர்ப்பு பலப்பட்டு வருகிறது. எனினும் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் தனக்கென்று மிகப் பலமான ஆதரவுத் தளம் ஒன்றைக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறார். அதற்குகட்சித் தலைமையின் ஆசீர்வாதமும் உண்டு .

சுமந்திரனின் ஆதரவாளர்கள் யார் யார் என்றுபார்த்தால் அவர்கள் அனைவரும் பிறகுஒருகாலம் சுமந்திரன் தங்களை நல்லநிலைக்கு உயர்த்துவார் என்று நம்புவோராகக் காணப்படுகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடவேண்டும் என்றகனவுடன் காணப்படும் பலரும் அவ்வாறு நம்புகிறார்கள். ஊடகத்துறைக்குள்ளும் கல்விச் சமூகத்துக்குள்ளும் அரசுஅலுவலர்கள் மத்தியிலும் இவ்வாறாக எதிர்காலத்தில் சுமந்திரன் தங்களுக்குஉரியபதவிகளைத் தருவார் என்று நம்பிக் காத்திருக்கும் ஒருதொகை வளர்ந்து வருகிறது.

சுமந்திரனை நம்பினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பதவிகளை அவர் தமக்கு வழங்குவார் அவர் வாக்குறுதிஅளித்த வெற்றியை தமக்கு எப்படியாவது பெற்றுத் தருவார் என்று நம்பும் ஒருதொகுதி படித்தவர்கள் இப்பொழுது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுகிறார்கள். யாழ் மாநகரசபையில் ஆர்னோல்ட்டை சுமந்திரன் எப்படி வெல்லவைத்தார் என்ற முன்னுதாரணம் அவர்களைக் கவர்ந்திழுக்கிறது. அரசியலில் ஈடுபட்டவிரும்புகின்ற அல்லது ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு அடுத்தடுத்தநிலைப் பதவிஉயர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் மத்தியிலும் சுமந்திரனை விசுவாசித்தால் தாம் கனவுகாணும் பதவிகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. இந்தநம்பிக்கைக்குஆர்னோல்ட் ஓர் முன்னுதாரணமாக காணப்படுகிறார்.

எனவே சுமந்திரனை விமர்சிப்பவர்களும் சம்பந்தரை விமர்சிப்பவர்களும் ஒருவிடயத்தை தெளிவாக உணரவேண்டும். தமிழ் தேசியக் கொடியின் கீழேயே அதற்குஎதிரான அல்லது தேசியநீக்கம் செய்யப்பட்ட வாக்குவங்கி ஒன்று வளர்ந்து வருகிறது. தமிழ் தேசிய வாக்கு வங்கிக்கு வெளியே தென்னிலங்கை மையகட்சிகளுக்கு வாக்கு வங்கிகள் வளர்ந்துவருகின்றன. இந்தவாக்குவங்கிகளை உடைக்கவேண்டிய பொறுப்பு தமிழ் தேசியகட்சிகள் அனைத்துக்கும் உண்டு அதை எப்படி உடைக்கலாம்?

ஒரேஒரு வழிதான் உண்டு வாக்களிப்பு அலை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பேரலைக்குள் சிறிய சிறியவாக்கு வங்கிகள் கரைந்து போய்விடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எப்படி சிறிய சிறியவாக்கு வங்கிகள் கரைந்தனவோ அப்படித்தான். எனவே ஒரு தேசிய வாக்களிப்பு அலையை உற்பத்தி செய்தால் மட்டும்தான் மேற்சொன்ன சுமந்திரனை போன்றவர்களின் வாக்கு வங்கிகளை உடைக்கலாம். அதற்கு ஒரேஒரு முன்நிபந்தனைதான் உண்டு. கூட்டமைப்பைவிடப் பலமான ஓர் ஐக்கியமுன்னணியைக் கட்டியெழுப்பினால் மட்டும்தான் தமிழ்த் தேசியவாக்களிப்பு அலையொன்று தோன்றும். இல்லையென்றால் வாக்குகள் சிதறும். அப்படிச் சிதறும் வாக்குகளை அங்கஜன் அள்ளிச் செல்வார். விஜயகலாஅள்ளிச் செல்வார். சுமந்திரனும் அள்ளிச் செல்வார்.வடைபோய்ச்சே…

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap