கொரோனா வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்க வாய்ப்புள்ள தடுப்பு மருந்து ஒன்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இன்னமும் நடந்து வருகின்றன. ஆனால், ஒருவேளை தங்களது தடுப்பூசி கோவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்த கூடியது எனத் தெரியவந்தால் உடனடியாக ஏற்படும் தேவையை எதிர்கொள்ளும் பொருட்டே தற்போது அந்தத் தடுப்பூசிக்கான உற்பத்தியை தொடங்க வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் கூறுகிறார்.
“நாங்கள் உடனடியாக இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணியை தொடங்குகிறோம். பரிசோதனை முடிவுகள் சாதகமாக வரும் நேரத்தில, நாம் தயாராக இருக்க வேண்டும்” என அவர் கூறுகிறார். தங்களது நிறுவனத்தால் 200 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிக்க முடியுமென்று ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிபிசி டுடே நிகழ்ச்சியில் பேசிய சொரியட், “தேவையான அளவு தடுப்பூசியை தயார் செய்வதற்காக உற்பத்தி விரைந்து தொடங்கப்படுகிறது. ஆனால், ஒருவேளை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனையில் தடுப்பூசி தோல்வியடைந்துவிட்டால், அதனால் எங்களுக்கு மிகப் பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படும் என்று தெரிந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
அதே சமயத்தில், இந்த தடுப்பூசி வெற்றியடைந்தால் அதை சந்தைப்படுத்துவதன் மூலம் லாபத்தை ஈட்டுவதற்கு தங்களது நிறுவனம் முனையாது என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம்
கடந்த வியாழக்கிழமை இந்தியாவை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் பில் கேட்ஸ் ஆகிய இரண்டு தரப்பினருடன் மேற்கொண்ட புதிய ஒப்பந்தங்களின் மூலம், தடுப்பூசி சோதனையில் வெற்றியடைந்தால், தங்களால் 200 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யமுடியுமென்று அந்த நிறுவனம் கூறுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து தடுப்பூசியை உருவாக்கி வரும் ஆஸ்ட்ராசெனிகா, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு உற்பத்தி செய்யும் தடுப்பூசியில் பாதி அளவை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
தடுப்பூசியை உற்பத்தி செய்வது தொடர்பாக இரண்டு முக்கிய ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவின் புனே நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) உடன் ஆஸ்ட்ராசெனிகா ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே போன்று, பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோரின் இரண்டு சுகாதார அமைப்புகளுடன் 750 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
சி.இ.பி.ஐ. மற்றும் ஜி.ஏ.வி.ஐ. உள்ளிட்ட இரண்டு தொண்டு நிறுவனங்கள் 30 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அவற்றை விநியோகிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபடும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள AZD1222 என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுமா, இல்லையா என்பதை ஆகஸ்டு மாதம் தெரியவரும் என்று எதிர்பார்ப்பதாக சொரியட் கூறும் நிலையில், இந்த தடுப்பூசி சோதனையில் தோல்வியடைவதற்கும் வாய்ப்புள்ளதாக சி.இ.பி.ஐ. நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ரிச்சர்ட் ஹட்சட் தெரிவிக்கிறார்.
இந்தியாவை சேர்ந்த எஸ்.ஐ.ஐ. நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அங்கு உற்பத்தி செய்யப்படவுள்ள 100 கோடி தடுப்பூசிகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 கோடி தடுப்பூசிகளை வழங்குவதற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் ஏராளமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கி வருவதாகவும், “இந்த பெருந்தொற்று காலத்தில் எந்த லாபமும் இல்லாமல் உலகம் முழுவதும் இரண்டு பில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஆதரவு இதுவரை கிடைத்துள்ளது” என்று சொரியட் கூறினார்.
“தடுப்பூசியை கண்டுபிடிப்பது முக்கியமானதுதான், ஆனால் அதை அதிகளவில் உற்பத்தி செய்து விநியோகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல” என்று ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் என்பது “ஓர் உலக நெருக்கடி” என்றும் அது “மனிதகுலத்திற்கான சவால்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி பரிசோதனை வெற்றியடையும் பட்சத்தில், முதற்கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் 30 கோடி தடுப்பூசி அமெரிக்காவுக்கும், 10 கோடி தடுப்பூசி பிரிட்டனுக்கும் அளிக்கப்படும்.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கோவிட்-19 தடுப்பூசிக்கு பில்லியன்கணக்கான டாலர்களை ஒதுக்க முன்வந்துள்ளன. உலகெங்கிலும் எண்ணற்ற மருந்து நிறுவனங்கள் சாத்தியமான மருந்துகளை உருவாக்கி பரிசோதிக்கும் போட்டியில் உள்ளன.
BBC