Home இலங்கை மத வேறுபாடுகளை கடந்து கிழக்கில் புராதன இடங்களை பாதுகாப்பேன் என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்

மத வேறுபாடுகளை கடந்து கிழக்கில் புராதன இடங்களை பாதுகாப்பேன் என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்

by admin

ஒரு மதத்தை சேர்ந்த மதத் தலைவர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் குற்றஞ்சாட்டுக்கு இலக்கான   ஜனாதிபதி செயலணியின் பணி என்பது, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தொல்பொருள் புராதன இடங்களை பாதுகாப்பதாகும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் புராதன இடங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் அங்குரார்ப்பண கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, கிழக்கிலுள்ள அனைத்து தொல்பொருள் புராதன இடங்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு செயணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த செயலணியின் உருவாக்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு ஆகிய இரண்டு சிவில் சமூக செயற்பாட்டு நிறுவனங்களும்,  கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாராம்பரியம்மிக்க இடங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பான செயலணி இராணுவ அதிகாரிகளுக்கு மேலதிகமாக ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ளமை, மாகாணத்தின் பல்லின அடையாளத்தை வேண்டும் என்றே குறைத்து மதிப்பிடும் செயற்பாடாகும் என இதற்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தன.

பாதுகாப்பு அமைச்சில் கடந்த யூன் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற செயலணியின் கூட்டடத்தில் உரையாற்றிய செலயணியின் தலைவரான பாதுகாப்புச் செயலாளர், இனம், மதம் ஏனைய வேறுபாடுகளை கடந்து கிழக்கு மாகாணத்திலுள்ள ஸ்ரீலங்காவின் வரலாற்று புராதன இடங்களை எதிர்கால தலைமுறையினருக்காக பாதுகாக்கும் பொருட்டு ஜனாதிபதி செயலணிக்கு அனைத்து இலங்கை பிரஜைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் பல வரலாற்று தொல்பொருள் புராதன இடங்கள் உள்ளன.அவை பல்வேறு காரணங்களால் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த வரலாற்று சின்னங்கள் தேசிய பாரம்பரியத்துடன் தொடர்புபட்டுள்ளதால் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி அரசாங்கம் அவற்றை பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

கடற்கோவில்

புதிய செயலணி உருவாக்கப்படுவதற்கு முன்னர் முப்படைகளின் பிரதானியுடன் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்புச் செயலாளர், பிரதேசத்தில் உள்ள புராதன தொல்பொருட்களை பாதுாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு பொத்துவில் பகுதியிலுள்ள கடற்கோவிலை சுற்றி கடற்படை தளத்தை அமைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் புராதன இடங்களை அடையாளம் காணுதல், புராதன தொல்பொருள் இடங்களை முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான வேலைத்திட்டத்தை அடையாம் கண்டு செயற்படுத்துவதன் ஊடாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் தொல்பொருட்கள் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல், அத்தகைய தொல்பொருள் இடங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தின் அளவை கண்டறிந்து அவற்றை முறையாகவும் சட்டரீதியாகவும் ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல், தொல்பொருள் தளங்களின் கலாசார மதிப்பை பாதுகாத்தல், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் தனித்துவத்தை ஊக்குவிக்குவித்தல், அத்தகைய தொல்பொருள் இடங்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் போன்ற பணிகள் 11 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன.

புராதன முக்கியத்துவம்மிக்க இடங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அந்த தளங்களை பாதுகாப்பதன் முக்கியத்தும் குறித்து பிரதேச மக்களின் ஒத்தழைப்பை பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை பாதுகாப்பு அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி தொல்பொருள் இடங்களை கண்டறிதல் மற்றும் ஜனாதிபதி செயலணியின் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது கண்டறியப்பட்டுள்ள புரதான தொல்பொருள் இடங்கள் மற்றும் சின்னங்களை பாதுகாத்து அவற்றை மறுசீரமைப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு செயலணி உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களான தொல்பொருள் சக்கரவர்த்தி எல்லாவெல மேதானந்த தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகானங்களுக்கான பிரதம விகாராதிபதி பணாமுரே திலகவன்ச தேரர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி. செனரத் பண்டார திசாநாயக்க, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையியலாளர் நாயகம் ஏ எல் எஸ் சீ பெரேரா, பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ, பேராசிரியர் கபில குணவர்த்தன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறைமாஅதிபர் தேஷபந்து தென்னகோன், கிழக்கு மாகான காணி ஆணையாளர் எச் ஈ எம் டபிள்யூ ஜி. திசாநாயக்க, தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். #மதவேறுபாடுகள்  #கிழக்கில்  #புராதன #பாதுகாப்புச்செயலாளர் #இனம் #மதம்  #கமல்குணரத்ன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More