சினிமா என்றவுடனே நம் மனக் காட்சியில் புலப்படுவது தென்னிந்திய சினிமாதான். இதை விட நாம் வேறு சினிமாக்களைப் பார்ப்பது மிக அரிது. சினிமாவின் வளர்ச்சிக்கட்டத்தை நாம் தென்னிந்திய பின்புலத்தில் இருந்து நோக்குதல் மிக அபத்தம். அதில் இருந்து சற்று வெளியில் வந்து ஏனைய நாட்டு சினிமாக்களையும் இரசிக்க பழகிக் கொள்ள வேண்டும். இரசனை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை இரசிக்கும் கண்கள், அவை பார்க்கும் கோணங்கள் என்பவற்றில் இருந்து இரசனை வேறுபடுகின்றது.
“அமெரிக்கா, பிரான்ஸ், ரஸ்யா, இத்தாலி, ஜேர்மன் போன்ற பெரும் தலை நாடுகளே ஆரம்ப கட்ட சினிமாவினை வளர்த்த நாடுகளாகும். இதனையடுத்து யப்பான், போலந்து, ஈரான், கொரியா, இந்தியா என்று பல நாடுகள் தமக்கான தனித்துவம் கொண்ட சினிமாப் படைப்புக்களைப் படைக்கத் தொடங்கின. இதனால் பல இயக்கச் செயற்பாடுகள் ஆரம்பமாகின. அவ்வாறு உருவானதுதான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட யதார்த்தவாத சினிமாக்கள். இதைப் பின்பற்றிப் பல நாடுகள் யதார்த்த வாத சினிமாக்களை உள்வாங்கத் தொடங்கின.” இத்தகைய பின்னணியில் சில தென்கொரியத் திரைப்படங்களும் இத்தகைய சாயலைக் கொண்டுள்ளன.
என் வாழ்வில் இற்றைக்கு கிட்டத்தட்ட 18 வருட கால வாழ்க்கையை முன்னிழுத்துச் சென்று, அதாவது எனது 7வயது நிகழ்வுகளை அசைபோட வைத்த திரைப்படம் பற்றித்தான் பேசப் போகின்றேன். தென்கொரியாவில் 2002 ஆம் ஆண்டு வெளியானதும், அவ்வாண்டே அதிக வசூலினைப் பெற்றுக் கொடுத்தும், சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதினையும் தட்டிப்பறித்துமான திரைப்படம்தான் The Way Home. இது லீ ஜியோங் ஹியாங் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். கிராமத்தில் வசிக்கும் பாட்டியைப் பற்றியதும் நகரத்திலிருந்து அவருடன் சில காலங்கள் தங்குவதற்காக வரும் பேரனைப் பற்றியதுமான கதையாகும்.
கதையின் ஆரம்பம்
காலை வேளையிலே சூரிய உதயத்துடன் நம்முடைய மனங்கள் புத்துணர்ச்சி பெற்று அந்நாளை வரவேற்பது யதார்த்தம். இந்த யதார்த்தம்தான் கதையின் ஆரம்பமாகும். ஒரு சிறந்த விடியலை நோக்கிய புதுவித பயணத்தில், சிறுவனும் அவனுடைய தாயும், நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்வதுடன் கதை ஆரம்பமாகின்றது. பஸ்சில் கிராம வாசிகளின் தமது செயற்பாட்டால் அச் சிறுவனை எரிச்சலூட்டுகின்றனர். நகரத்திலே பிறந்து வளர்ந்த அச் சிறுவனுக்கோ கிராமவாசிகள், அவர்களின் சூழல் ஆரம்பத்திலே பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
கதையமைப்பு
சியோலில் ஒரு வணிக முயற்சி தோல்வியடைந்த பின்னர் வேறு வேலை தேடும் வரை தனது மகனை 78 வயதான வாய் பேச முடியாத தனது தாயிடம் விட்டு விட்டு செல்லும் காட்சியுடன் கதை நகர்கின்றது. அந்த சிறுவனுக்கோ அந்தக் கிராம வாழ்க்கை பிடிக்கவில்லை. தனது பாட்டியை அருவருப்பாகப் பார்க்கின்றான். அவள் தொடுவதை அனுமதியாது விலகிச் செல்லுகின்றான். அவனுடைய பொருட்களையும் பாட்டி தொடுவதை விலக்கி விடுகின்றான்.
அது ஒரு அழகிய விரிந்த மலைச்சாரல் கொண்ட, புற்கள் படர்ந்த, ஆறுகள் ஓசையெழுப்புகின்ற ரம்மியமான கிராமம். பாட்டி சுத்தமான தண்ணீரினைப் பெறுவதற்காக மலைச்சாரலில் இருக்கும் தனது வீட்டில் இருந்து இறங்கி ஆற்றங்கரைக்கு வருவது வழக்கம். சந்தையிலே விற்கக்கூடிய முலான் பழங்களைப் பாட்டி தனது வீட்டில் வளர்க்கின்றாள்.
தனது அயலவர்களை வரவேற்கும் பண்பு பாட்டிக்கு இயல்பாகவே உண்டு. ஒரு நாள் அயல் வீட்டுப் பையன் பாட்டி வீட்டிற்கு வரும் போது பாட்டியின் பேரன் அவனை மதியாமல் நடக்கும் போது பாட்டி மன்னிப்புக் கேட்கின்றார்.
ஒரு நாள் சிறுவனின் வீடியோகேம் Battery செயலிழந்து போக, புதிதாக அவற்றை வாங்கித்தரும்படி கேட்கின்றான். யாருமற்ற ஏழைப் பாட்டியிடமோ அதற்குப் பணம் இல்லை. தனது சட்டைப் பையை வெளியில் எடுத்து தனது மொழியில் பேரனுக்கு விளங்கும் வகையில் காட்டுகின்றார். பேரனோ அடம் பிடிக்கின்றான். சகிப்புத்தன்மையற்ற சிறுவன் பாட்டியை கேலி செய்து அவள் பாதணிகளை எடுத்து வீசி விடுகின்றான். அவளிடம் இருந்த ஒரே ஒரு குவளையையும் காலால் உதைந்து உடைத்து விடுகின்றான்.
தனது தேவைக்காக கடைசியில் பாட்டியிடம் இருந்த ஒரே ஒரு ஹேயார்பின்னையும் திருடி அதை விற்று பெற்றிகளை வாங்குவதற்காக கடைகளைத் தேடிப்புறப்பட்டுச் செல்லுகின்றான். அப்போது கடைகடையாக அதை விற்பதற்கு முயற்சிக்கும் போது ஒரு கடைக்காரர் பாட்டியின் நண்பர். அவர் சிறுவனின் தலையில் சாடையாக தட்டி வீட்டுக்கு அனுப்புகின்றார். சிறுவன் வழி தவறி தடுமாறும் வேளை ஒரு பெரியவரின் உதவியுடன் வீடு திரும்புகின்றான்.
சிறுவன் தனக்கு Kentucky Chicken வேண்டும் என்று அடம் பிடிக்கின்றான். பாட்டி முலாம் பழங்களை எடுத்துக் கொண்டு சந்தையில் விற்று கோழி வாங்கி வந்து தனக்குத் தெரிந்தாற் போல் சமைத்துக் கொடுக்கிறார். இது இல்லை அது என்று சிறுவன் சாப்பிடாமல் படுக்கின்றான். பசியெடுத்ததும் மீண்டும் எழுந்து சாப்பிடுகின்றான். பாட்டி நோய்வாய்ப்படுகின்றாள். சிறுவன் பாட்டியை பராமரிக்கின்றான். மெல்ல மெல்ல பாட்டி மீது சிறுவனுக்கு பாசம் தோன்றுகிறது. அதற்குள் சிறுவனின் தாய் வந்து சிறுவனை அழைத்துச் செல்கின்றார் இதன் போது பாட்டிக்கு சிறுவன் நினைவுப் பரிசாக ஏதோ கொடுத்து விட்டுச் செல்லுகின்றான். இவ்வாறாக படம் பல கோணங்களில் பலவாறு பேசப்பட்டு மிக எளிமையான முறையில் முடிவடைகின்றது.
படத்தின் சிறப்புக்கள்.
இப்படத்தில் வருகின்ற காட்சிகள் மிகவும் எளிமையான முறையில் கதைக்குப் பொருத்தமான முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
கதாப் பாத்திரங்களின் தெரிவு இயக்குனரின் ஆழ்ந்த நுண்ணியத் தன்மையினைக் காட்டி நிற்கின்றது. கதையில் வரும் மாந்தர்களில் சிறுவன் மற்றும் அவனது தாய் தவிர்ந்த ஏனையவர்கள் தொழில்முறை சாராத, அந்தக் கிராமிய வாழ்வியலோடு ஒன்றரக் கலந்தவர்கள் என்பதே இத் திரைப்படத்துக்கு சிறப்பு.
இதில் வருகின்ற காட்சிகள் இயற்கையான காட்சிகள் என்பதைப் படத்தைப் பார்ப்பதன் ஊடாகத் தெரிந்து கொள்ளலாம்.
காதல் என்பதை தவறாகப் புரிந்து வைத்துள்ள இளம் சமூகத்திற்கு இந்தப்படம் சிறந்த எடுத்துக்காட்டான படம். அதாவது பாட்டி-சிறுவன் காதல், இயற்கை-மனிதன் காதல். இது வரை தமிழ் திரைப்படங்களில் பேசப்படாத புதுவித ஆனால் நம் வாழ்வியலில் புதைந்துள்ள காதல் பற்றி இப்படம் பேசுகின்றது. காதலி பாட்டி- காதலன் சிறுவன் அருமை. இவ் உறவிற்கு உலகில் சொல்ல வார்த்தையில்லை
இதில் பயன்படுத்தப்பட்ட இசை என்று பார்த்தால் வண்டுகளின் இயல்பான ரீங்கார ஓசை, பூச்சிகளின் இன்னிசைகள், வீடியோகேம் சத்தம், தேவைக்கு ஏற்ப ஆங்காங்கே மெல்லிய இசை கொடுக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தின் மூலமாக தென் கொரிய வாழ்வியலை ஏனையவர்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது. வயதானவர்கள் தன்னலம் இன்றிக் கொடுக்கும் நிபந்தனையற்ற அன்பையும் இளைய தலைமுறைக்கு நினைவூட்டும் சிறந்த படமாகும்
காலைக் காட்சியாக இருக்கட்டும் மாலைக் காட்சியாக இருக்கட்டும், இரவுக் காட்சியாக இருக்கட்டும் எல்லாமே அப் பொழுதுகளையே மையப்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
பாட்டியின் பாத்திரவார்ப்பு ஒரு இயற்கையின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டமையால். அவரின் மௌனம் இப் படித்திற்குப் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் வசனங்கள் ஊடாக பேசப்பட வேண்டியவை சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் மௌன மொழிகள், காட்சி மொழிகளின் பயன்பாடும் சிறப்பாக அமைந்துள்ளது.
கிராம, நகர ஒப்பீடு சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மனிதர்கள் வெவ்வேறு உணர்வு வெளிப்பாடு கொண்டவர்கள் என்பதையும் கதை மிக அழகாக சித்தரித்துள்ளது.
கமரா எடுக்கும் கோணங்கள் மிக அருமையானதாக உள்ளது. எடுத்துக்காட்டாக பாட்டி பூச்சியினைப் பிடித்து வெளியிலே போடுவதற்கு வரும் வேளை வெளிப்பக்கமாக எடுக்கப்பட்டிருக்கும். பாட்டியின் குடிசையில் இருந்து வரும் சாதாரண வெளிச்சம் அக் காட்சியை மிகைப்படுத்தி இருக்கும். அடுத்ததாக பாட்டி தனது வீட்டு குந்தில் இருந்து மலைப் பக்கம் பார்த்தபடி இருக்கும் காட்சி மிகவும் ரம்மியமான முறையில் படப்பிடிப்பு அமைந்திருக்கும்.
சில சில இடங்களில் விரிவான விளக்கத்திற்குப் பதிலாக எளிமையான குறியீடுகள் மூலமாக கதை நகர்த்தப்பட்டிருக்கும். அது சில கணப்பொழுது அமைந்தாலும் பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய புரிதலைக் கொடுத்திருக்கும். உ-ம் நிழல்கள் மூலமாக காட்சிகள் நகர்த்தப்பட்டுள்ளமை சிறப்பிற்குரிய ஓர் விடயமாகும். இவ்வாறாக பல நுண்ணிய ஆனால் பிரமிக்கத்தக்க விடயங்களை இப் படத்தின் மூலமாக கற்றுக் கொள்ளலாம், அனுபவித்துக் கொள்ளலாம்.
இப் படம் மூலமாக நான் பெற்ற அனுபவம்
தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்துப் பழகிப்போன எனக்கு, முதல் முதலாக இப்படம் பார்க்கும் போது எதுவுமே புரியவில்லை. உண்மையில் எனது மனம் தென்னிந்திய சாயலையே தேடியது. ஆனால் அவற்றில் இருந்து முற்று முழுதாக இத் திரைப்படம் மாறுபட்டது என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
இப்படத்தைப் பார்ப்பதற்கு தூண்டுதலாக இருந்த பட்டறை குழுமத்தினர் காட்டிய வழிமுறையானது மிகவும் நுணுக்கமான பார்வையை அப்படத்தில் பதியவைப்பதற்கு உதவியது. இதனால் இரண்டாவது முறையாகப் பார்த்தேன், மீண்டும் மீண்டும் பார்த்தேன் என்னையறியாமல் புரிதல் என் மனதில் குடிகொண்டது.
இப்படத்தில் வருகின்ற பாட்டியானவள் ஒரு இயற்கைக்கு ஒப்பானவள். அவளின் இயல்பான மனம், சகிப்புத்தன்மை, அரவணைக்கும் பண்பு என்பன. இயற்கை நம்மை இப் பூமியில் பொறுத்துக் கொள்வதைப் போல் பாட்டியின் பண்பும் சித்திரிக்கப்பட்டுள்ளது. இயற்கையோடு ஒன்றித்த மனிதனின் அன்பை இத் திரைப்படம் புரியவைத்தது.
சிறுவயதில் நான் என் பாட்டிக்குச் செய்த குறும்புகளை அசைபோட வைத்தது இத் திரைப்படம். பாட்டி அடிக்கடி வயிற்றைத் தடவி பேரனிடம் பேசுவார் பட ஆரம்பத்தில் அவர் பசிக்கின்றது என்பதை சைகை மூலமாக் காட்டுகின்றார் என்று நினைத்தேன். ஆனால் இறுதியில் சிறுவன் பஸ்சில் ஏறி பாட்டியைப்பார்த்து வயிற்றைத் தடவும் போதுதான் புரிந்தது. அவர் தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்பது.
நாம் பல சந்தர்ப்பங்களில் பல வாய்ப்புக்கள் கிடைத்தும் அவற்றைத் தவற விட்டவர்களாய், தன்னம்பிக்கையற்றவர்களாய் இருந்திருக்கின்றோம். காரணம் மொழி. இதனால் பல நல்ல நல்ல வாய்ப்புக்களை இழந்து சிறகுடைந்த பறவைகளாய் கிடக்கின்றோம். கலைக்கு மொழி தடையில்லை என்பதை இப் படம் எனக்கு உணர்த்தியது. ஒரு பொய்யை நாம் திரும்பத் திரும்பச் சொல்லும் போது அது உண்மையாகின்றது. அது போல்தான் மொழியும். வேற்று மொழியை பார்த்து ஒதுங்காமல் அவற்றை அணுக அணுக, அதுவும் நம்மை ஆதரிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறான பல கருத்தாழம் மிக்க படங்கள் உலகம் பூராகவும் பரவிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிப் புற்கள் நிறைந்த நம் பாதைகளை செதுக்கி நமக்கான வடிவத்தை கண்டைவோம்.
அ.ஆன் நிவேத்திகா,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
https://en.wikipedia.org/wiki/The_Way_Home_(2002_film)