Home இலக்கியம் அழுகிப்போன கால்களுடனா மீண்டும் நடக்கப்போகிறோம்? தமிழாக்கம் தேவ அபிரா..

அழுகிப்போன கால்களுடனா மீண்டும் நடக்கப்போகிறோம்? தமிழாக்கம் தேவ அபிரா..

by admin

பழமையான கால்வாயின் அடித்தளத்தில் ஒரு துவிச்சக்கர வண்டி கிடக்கிறது. நெதர்லாந்து அரச தினவிழா நிகழும்  நாளில் தொம்பௌசெஸ் (Tompouces- செம்மஞ்சள் நிறமான  ஒருவகைக் கேக் போன்ற சிற்றுண்டி)  பெருமளவில்  செய்யப்பட்டு  உண்ணப்படும். இது நெதர்லாந்தின் அடையாளம். அதுபோல இங்குள்ள கால்வாய்களினுள் துவிச்சக்கரவண்டிகள் கிடப்பதும் ஒரு வகையான  நெதர்லாந்து அடையாளம்தான். ஆனால் கால்வாயினுட் கிடக்கும் துவிச்சக்கர வண்டி கண்ணுக்குத் தெரிவதுதான்  இங்கு குறிப்பிடத்தக்கது. எப்பொழுதும் கலங்கிக் கிடக்கும் இக்கால்வாயினுட் கிடப்பவை வழமையாகக் கண்ணுக்குப்புலப்படுவதில்லை.

இந் நாட்களில் விமானங்கள்  விமான நிலையத்தில் தரித்து நிற்கின்றன. உத்திரக்ற்(Uthrecht) நகரத்தின் டொம்நகரச்சதுக்கத்தின் (Domplein) தரைக்கல்லிடுக்குகளுக்குள் புற்கள் வளர்ந்து சிலிர்த்து நிற்கின்றன. சிலி( Chili) யின் சந்தியாகோ( Santiago) நகர வீதிகளில் பூமாக்களைக் (Poema-ஒரு வகைச் சிறுத்தைப்புலி) காண்கிறோம், பார்சிலொனா( Barcelona) நகரில் காட்டுப்பன்றிகளையும் லண்டன்( London) நகரத்தில் மரைகளையும் காண்கிறோம் இத்தாலியத் துறைமுகத்தில் டொல்பின்களையும் வெனிஸ் கால்வாய்களில் மீன்களையும் இன்றைக்கு உத்திரக்ற் இல் உள்ள பழமையான கால்வாயினுட் துவிச்சக்கர வண்டியையும் காண்கிறோம். அனேகமாக அத் துவிச்சக்கர வண்டி அங்கு நெடும் காலமாக்  கிடந்திருக்க வேண்டும்.  கடந்த ஐந்து வருடங்களாக  இக்கால்வாயின் மேம்பாலத்தினூடாகச் சென்று வருகிறேன். அப்பொழுதெல்லாம் தெரியாத துவிச்சக்கர வண்டி  இப்பொழுது அமைதியாகித் தெளிந்து கிடக்கும் நீரோட்டம் காரணமாக இக்கால்வாயினுள்  கிடப்பது தெரிகிறது. இக்கணம்  எனக்குள் ஏதோ ஒன்று உணரப்படுகிறது.

நியூசிலாந்து கவிஞன் ஒருவன் இதனைத்தான் பெரும் புரிந்துணர்தல் என்கிறான். அமைதியடைந்திருக்கும் உலகில்  தன்னுணர்தலுக்கும் விழிப்புணர்வுக்கும்  நேரம் கிடைத்திருக்கிறது. கொறோனா உருவாக்கிய  இடர் நிலைக்கு முந்திய  வாழ்க்கை முறையினை நெடுங்காலம் தொடர முடியாதென்பதை மேற்குலகில் மேலும் பல மனிதர்கள் உணர ஆரம்பித்திருக்கின்றனர்.

மனிதர்கள், எல்லாமும் தமக்கே என்று வெட்டுக்கிளிகள் போலவும் கரப்பான் பூச்சிகள் போலவும் மாறிப் பூமித்தாயின்  எல்லாவற்றையும் தாமே நுகர்ந்து விட  முனைகின்றனர். இச்செயல் தொடர்ந்தால் அழிவின் தடங்களையே அடுத்த தலைமுறைக்கும் விலங்குகளுக்கும் மனிதர்கள் விட்டுச் செல்லப்போகின்றனர்.   எலிச்சக்கரத்துள்  சுற்றிச் சுற்றியோடும்  எலிகள் போலவும் அவை இடும்   சத்தமாகவும் ஆகிப்போனது அன்றாட வாழ்வு.

மேற்குலகில் செழித்திருக்கும் அமைதியான வாழ்வில் நாங்கள் திளைகின்ற போதும் எங்களுக்குப் போதுமென்ற மனம் ஏற்படவில்லை. எங்களுக்கு இன்னும் இன்னும்   உயர்ந்து சென்று நுகரும் ஆசை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எல்லாமும் சிறப்பானதாகவும் அழகானதாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

இந்த ஆண்டின் பங்குனி மாதம்வரை  விமானங்களிற் பயணித்தோம். தாய்லாந்தில் உள்ள  அமைதியான தியான நிலையங்களுக்குப் போனோம். அங்கே தூய ஆட்டுத்தயிரையும் தானியங்களையும் உண்டோம். அவகாடோப்(Avocado) பழச்சாற்றை முகங்களிற் பூசிக் கொண்டோம். அப்பொழுதும் திருப்தி உண்டாகவில்லையே! அதனால் என்ன?   கொஞ்சம் பணச் செலவு  மேலும் சுற்றுச் சூழலுக்குக் கேடு  அவ்வளவுதான். இதயத்துக்குப் பிராண வாயுவைக் கொண்டு செல்லும் குருதிக்குழாய்களைக்  கொழுப்புகளால் நிரப்பிக் கொண்டு  இதயம் உணர்ந்து வாழ்வதெப்படி  என்னும்  பயிற்சி வகுப்புக்களுக்குப் போகிறோம்.

டார்வினின் விதிகளையிட்டு யாருக்கென்ன அக்கறை? தக்கன பிழைக்கும் என்ற டாவின்னின் விதியை அவரவர் தமக்குத் தேவையான  வகையில்  கருத்துப்படுத்திக்கொள்கிறார்கள். மேற்குலகில் இன்றைக்கு நீண்ட ஆயுள் என்பது நியமமாகவும்  ஆரோக்கியம்  என்பது தனிமனித உரிமையாகவும் ஆகியுள்ளது.     மனிதர்களின் மாதாந்தச் சந்தாக்களிலேயே  பெறுமதி கூடிய சந்தாவாக நோய்க்காப்புறுதித் தொகை  மாறிவிட்டது. வைத்திய சேவை என்பது இருபத்திநான்கு மணிநேரச் சேவையாகவும் மாறி விட்டது.  வைத்திய சேவைக்கான தேவை  அதிகரித்தவுடன் அதனை வழங்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. மறுபுறத்தில் மருத்துவ சேவையை அளவுக்கதிகமாக நுகர்வதும்  நிகழத்தொடங்கி விட்டது.

மேற்குறித்த சூழ்நிலை காரணமாகச் சுகாதார அமைப்பு  தானாகவே செயலிழக்கும் நிலைக்குச் செல்லுகிறது. குறைவான சம்பளத்திற்கு கடுமையாக வேலை செய்ய  நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தாதியர்கள் தளர்ந்து போகின்றனர். சிறப்புவைத்தியர்களின் சேவையைப் பெறுவதற்கு நோயாளர்கள்  மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டியுள்ளது. குடும்ப  வைத்திய நிலையங்களில் மக்கள்  உணவங்காடிகளில் குவிவது போலக்குவிந்து நிற்கின்றனர். எதற்கெடுத்தாலும் வைத்தியர்களிடம்  செல்வது  அவர்களுக்குச் சாத்தியமாக இருக்கிறது. அவசரமாக குணப்படுத்தப்பட வேண்டிய எந்த நோய்க்குணங்குறிகள் அற்ற போதும் மக்கள்  வைத்தியரிடம் வந்து அன்றே வைத்திய சேவை கிடைக்க வேண்டும் என நிற்கிறார்கள். முறைப்பாடுகளுக்கும் சட்ட வழியான நடவடிக்கைகளுக்கும் அஞ்சி வைத்தியர்களான நாங்களும் எதுவும் சொல்வதில்லை.  நோய் நிர்ணயம் செய்வதில் ஏற்படக்கூடிய தவறுக்களுக்கு அஞ்சி நாங்களும்  விலை கூடிய  பரிசோதனைகளையும் கனதியான  நோய்த்தணிப்பு நடவடிக்கைகளையும் செய்ய முற்படுகிறோம்.

குடும்ப வைத்திய நிலையத்தில்   காலை எட்டு மணிக்கும் மாலை அய்ந்து மணிக்கும் இடையில்  ஓட்டப்பந்தயம் தான் நிகழ்கிறது. அடுத்த நாளுக்குத் தள்ளி வைக்க முடியாத  பிரச்சனைகளுடன் வருகிற நோயாளிகளை  அன்றே பார்த்து விட வேண்டும்.  ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்குப் பத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. நோயாளியை நன்கு அறிந்து  அவரின் மன நிலையை உணர்ந்து அவரைப் பரிசோதித்து நோய் நிர்ணயம் செய்வதற்கு பத்து நிமிடங்கள்!. ஒரு வைத்தியராக எனது ஈடு பாட்டுக்கும்  அதற்களிக்கப்பட்டுள்ள நேரத்துக்கும் இடையில் நிகழும் போராட்டம்  கடுமையானது. நடக்க முடியாத நோயாளியை உள்ளே அழைத்துச் சென்று தேவைப்படின் உடைகளைக்களைய உதவி செய்து நோய்ப்பரிசோதனை செய்து சம்பந்தப்பட  சிறப்பு வைத்தியருடனும்  ஆலோசித்து  நோயாளி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்குள்  மேலும் பதினைந்து நிமிடங்கள் ஓடிவிடும்.  அடுத்த நோயாளியை உள்ளே அழைக்கும் போது இழந்த 15 நிமிடங்களை எப்படி மீளக்  எப்படிக் கண்டு பிடிப்பது  என்ற சிந்தனையே மேலோங்கும்.  முதல் நோயாளியை அர்ப்பணிப்புடன் பார்த்தற்காக  கைதட்டல்  கிடைக்கும் என்று நினைக்காதீர்கள்.  ஏற்கனவே காத்திருக்கும் மற்ற  நோயாளிகளின் கடுகடுத்த முகம்தான் பரிசாகக் கிடைக்கும்.

கணுக்கால் சுளுக்கிய  ஒரு நோயாளி நாளைக்கு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் மொர்ஃபின்(Morphine) தா என்கிறார். சாதாரண தடிமன் பிடித்த பிள்ளைக்கு  அதனைக் குழந்தைகள் காப்பகத்தில் விடவேண்டும்  எனவே பக்ரிய(Bacteria) எதிர்ப்புமருந்து தா என்கிறார் பெற்றவர் . நட்ட நடுநிசியில் குடும்ப வைத்திய நிலையத்திற்கு வந்து  ஒருவர்  எனது காதுகளைச் சுத்தமாக்கிவிடு என்கிறார்.  பச்சை குத்திக் கொள்வதற்கு தோலை மரத்துப் போகச் செய்யும் மருந்து வேண்டும் என்று ஒருவர் வந்து நிற்கிறார். இன்னொருவர்  முகப்பருவினால் உண்டாகும்  மருக்களை  அகற்றி விடு,  அழகுக்கலை நிபுணரிடம் போனால் அதிக செலவாகும் என்கிறார். நானும் சரி என்று அகற்றி விட்டேன்.  அது நான் செய்த பெரும்பிழை மூன்று மாதங்கள் கழித்து புதிதாய் உருவான பருக்களின் மருக்களை அகற்றி விடு என்று மீண்டும் வந்து நிற்கிறார்.

இச்சூழ்நிலையை இப்படி விபரிக்கலாம் .உங்களுக்கு வைத்திய சேவை தேவைப்படுகிறது. நீங்கள் கேட்கிறீர்கள். நாங்களும் செய்கிறோம். நாங்கள் செய்வதால் உங்களுக்குத் தேவைகள் பெருகிவிட்டன என்று ஆகி விட்டது.

இப்பொழுது உலகம் அசையாமல் நிற்கிறது. ஒரு காலத்தில்  சிக்கு புக்கு வண்டியாக இருந்த வைத்திய சேவை அதிவேக இரயிலாகிப் பின்  தற்போழுது  கிட்டத்தட்ட அசையா நிலைக்கு வந்துள்ளது. வைத்தியர்களும் நோயாளிகளும் பல காயங்களும் நோய்களும் பொறுமை காப்பின் சில நாட்களில் தாமாகவே ஆறிவிடுகின்றன என்பதை உணரத் தலைப்பட்டுள்ளார்கள். சிறுநீர்ப்பை அழற்சி சில நாட்களில்  தன்பாட்டிலேயே ஓய்ந்து விடும்.  மூன்று மணித்தியாலங்களுக்கு மேல்  காரில் வாகன நெரிசலில் சிக்கிக் காத்துக் கொண்டிருந்தால்  முதுகு வலி வரத்தானே செய்யும். ஒவ்வொரு நாளும் கிரமமாக  நடைப்பயிற்சி செய்தால் மல அடைப்பு அகன்று விடும். ஒவ்வொரு நாளும் இது இப்படி இருக்க வேண்டும்;  அது அப்படி இருக்க வேண்டும் என்ற கட்டாயங்களுக்கு எம்மை உட்படுத்திக் கொள்ளும் போது  தலைவலியும் நெஞ்சு வலியும்  ஏற்படத்தானே செய்யும்.

எப்பொழுதும் எல்லாவற்றையும்  சரிப்படுத்தி வென்று விட முடியாதென்று  எங்களுக்குத் தெரிகிறது.   அதி தீவிர  பராமரிப்புப்பிரிவில் உள்ள நவீன இயந்திரங்களாற் கூடச் சில வேளைகளில் மனித உயிர்களைக் காப்பாற்ற முடிவதில்லை. பல சந்தர்ப்பங்களில் வயதாகிப்போன உடலையும் பிழையான பழக்க வழக்கங்களினாற் பழுதாகிப்போன உடலையும் மீட்டேடுப்பது கடினமான செயல். அனுபவங்களில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மனித உடல் என்பது சரியாகப் பேணப்பட வேண்டியது. அளவுக்கதிகமாக  இனிப்புகளை உண்கிறோம்;  மதுவகைகளை  அருந்துகிறோம்; புகைக்கிறோம். மன அழுத்தம் நிறைந்த வாழ்வு அதிக மான அதிரினலீனை(Adrenaline) உடம்புக்குள் உருவாக்குகிறது. இவையெல்லாம் பெற்றோலில் ஓடுகிற  வாகனத்தை டீசல் விட்டு ஓட்ட  முனைவதைப் போன்றவை . ஒரு கட்டத்தில் உடம்புக்கு முடியாத போது  வைத்தியரிடம் ஓடுகிறோம். வருமுன் காப்பதை விடச் சிகிஸ்சை பெற்றுக் கொள்வது  நல்லது என்பது போல. சுகாதார சேவைக்கு வழங்குகிற கைதட்டல்கள் ஓய்ந்த பின்னர்  நாங்கள் இப்போதிருக்கிற அழுகிக்கொண்டிருக்கும் கால்களுடனா மேலும் நடந்து செல்லப்போகிறோம். எங்களுக்குள் எங்கள் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?  மாற்றம் ஏற்படும்  என்பது ஒரு குருட்டு நம்பிக்கையா அல்லது மாயையா? வைத்திய சேவையைப்பெறுபவர்களுக்குள்ளும் வைத்திய சேவையை வழங்குபவர்களுக்குள்ளும் உண்மையிலும்  ஒரு மன மாற்றம் ஏற்படுமா? அதற்கு நாங்கள் தெளிவடைந்து இருக்கும் கால்வாயின் நீருட் பார்க்க வேண்டும், மீனையோ துவிச்சக்கர வண்டியையோ பார்ப்பதற்கல்ல எங்களை நாங்களே பார்ப்பதற்கு.

நன்றி: Danka Stuijfer(General practitioner)

https://www.volkskrant.nl/columns-opinie/gaan-we-straks-op-dezelfde-zorgverslindende-voet-verder~ba106ca3/

மொழி பெயர்ப்பு :தேவ அபிரா

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More