கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் கடந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை(6) பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றுள்ளனர்.
முதற் கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.-இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (6) 2 ஆம் கட்டமாக தரம் 5 , 11, மற்றும் 13ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. -இதற்கமைவாக நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு குறித்த வகுப்பகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் சென்றனர்.
5 ஆம் தர மாணவர்களுக்காக காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் தரம் 12 மற்றும் 10 மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தர மாணவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இறுதி கட்டமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தரம் 1, 2 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று ) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த 5ம்,11ம், மற்றும் 13ம் தர மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் ஆசிரியர்களினால் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். #மாணவர்கள் #கற்றல் #ஆரம்பம் #கொவிட்-19