கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி வரும் உலகத் தொற்று நோயான கொரோனா வைரஸை எதிர்கொள்ள உலக நாடுகள் போராடி வருகின்றன.சீனாவில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், சென்னை மக்களைப் பொறுத்தவரை, ‘100 ஆண்டுகளில் இல்லாத’ மற்றும் ‘பேரழிவு’ போன்ற சொற்கள் ஒன்றும் புதியவை அல்ல. ஆம், 2015ஆம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நூற்றாண்டு காணாத பெருமழையும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும் ஏற்படுத்திய சேதத்தை எதிர்கொண்ட சென்னை மக்களுக்கு அந்த சொற்களுக்கான பொருள் நன்றாகவே புரியும்.
இந்த நிலையில், சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையை விட பல மடங்கு அதிகமான மழைப் பொழிவு வரும் காலங்களில் இருக்கலாம் என்று சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தை (ஐஐடி) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘பேரழிவு ஏற்படும்’
சென்னை, மும்பை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்களில் பருவ நிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அதில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்தும் ஆராய்வதற்கான இந்திய அரசின் சிறப்பு திட்டமொன்றின் கீழ், 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் அது எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் சென்னை ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சென்னையைப் பொறுத்தவரை வரும் காலங்களில் மழைப்பொழிவு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்றும், இது 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தை விட பல மடங்கு பேரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
‘மெரினா கடற்கரை காணாமல் போகும்’
2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்த தரவுகளை அடிப்படையாக கொண்டு அதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு ஆய்வு செய்ததாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட சென்னை ஐஐடி ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் பாலாஜி.
இதன்படி, சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2035, 2055, 2075 உள்ளிட்ட ஒவ்வொரு இருபதாண்டு கால இடைவெளியிலும் சென்னையில் மழைப்பொழியின் தீவிரம் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதுபோன்ற தீவிர மழைப்பொழிவின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பேசிய பேராசிரியர் பாலாஜி, “2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் அதைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக மெரினா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரைப்பகுதிகள் பலவும் மழையின் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு கடலால் ஆட்கொள்ளப்படலாம். மேலும், சென்னை மற்றும் அதை சுற்றிலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்க வழியின்றி பெரும் பிரச்சனை ஏற்படக்கூடும்” என்று எச்சரிக்கிறார் அவர்.
காரணமும் தீர்வும்
“வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரியமில வாயு பூமியின் வளிமண்டலத்தில் எண்ணற்ற விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதாவது, பூமியின் தரைப்பகுதியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி செல்லும் கரியமில வாயு புவியின் வெப்ப நிலையையும் காற்றில் ஈரப்பதத்தையும் அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக வளிமண்டலத்தில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டு அதிதீவிர மழைப்பொழிவுக்கு வழிவகுக்கலாம்” என்று கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் பாலாஜி.
குறிப்பாக, கடலில் உருவாகி நிலத்தை நோக்கி நகரும் புயல்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உள்ளிட்ட மழை காரணிகள் இயல்பை விட அதிக காலத்துக்கு கடல்பகுதியிலேயே நிலை கொள்ளும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் அவை நிலத்தை நோக்கி வரும்போது மழைப்பொழிவின் தீவிரம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதே போன்று கரியமில வாயுவின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்துக்கொண்டே சென்றால், கடலின் வெப்பநிலை அதிகரித்து இயல்புக்கும் அதிகமாக நீர் ஆவியாகும். இதனால், ஒரு வாரகாலத்தில் பொழியும் மழை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் அபாயம் உண்டாகலாம்” என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சி குறித்த கட்டுரை ‘கரன்ட் சயின்ஸ்’ என்னும் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் சென்னையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து பேசிய பேராசிரியர் பாலாஜி, “இது இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சுமார் ஐந்தாண்டுகளுக்கு நடைபெறவுள்ள நீண்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியே. எங்களது ஆராய்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் தீவிர வானிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கான, எதிர்கொள்வதற்கான வழிகளை ஆராய உள்ளோம். ஆனால், நீர் வளங்களை சரிவர பராமரித்தல், காடழிப்பை தடுத்தல், தீவிர வானிலை குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குதல், நகரக் கட்டமைப்பை பேரிடரை எதிர்கொள்ளும் அளவுக்கு திறம்பட மேம்படுத்துதல், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்தல், அவசரக் காலத்தின்போது மக்களை அதிவேகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லும் திட்டத்தை வகுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள ஆரம்பித்தால் அது எதிர்காலத்தில் மிகுந்த பலனளிக்கும்” என்று அவர் உறுதிபட கூறுகிறார்.
நம்மிடமுள்ள சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கொண்டு இதுதொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகளை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் மேலும் கூறுகிறார். #சென்னை #பேராபத்து #பெருவெள்ளம் #கரியமிலவாயு
பிபிசி தமிழ்