Home இலங்கை அறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…

அறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…

by admin


மனிதரின் நாகரீக வளர்ச்சி பாதையில், தேடலின் விளைவாகப் பெற்றுக் ளகொண்டவை, அவர்களின் அறிவுருவாக்கச் செயன்முறைக்கு வித்திட்டது என்பது மறுதலிக்க முடியாத உண்மை நிலைப்பாடாகும். மனிதரின் அறிவியல் பிரவேசம் குறித்து சிந்திக்கின்ற அல்லது பேசுகின்ற போது, ‘ கல்லைத் தட்டி மனிதர் நெருப்பைக் கண்டறிந்தது முதற் கொண்டு ‘ அறிவியல் வளர்ச்சியில் திருப்புமுனை ஏற்படலாயிற்று என்ற அடிப்படையில், தர்க்கிப்பதும், கருத்துரைப்பதும் பரவலான அதேநேரம் பொதுவானதொரு கண்ணோட்டமாகவே விளங்குகின்றது.

தேவையுடனும், தேடலுடனும் இயைபுற்ற மனிதரின் வாழ்வியலில், ‘அறிதல்’ என்பது, இயல்பாக அதேநேரம், யதார்த்தமாக நடைபெறுகின்ற நிகழ்வு என்ற அடிப்படையில் அறிவுருவாக்கம் என்பது, இயல்பாக நடந்தேறுகிறது.

அறி அல்லது அறிதல் என்பது வெறுமனே தெரிந்துக் கொள்ளல் என்ற செயல்முறையையும் கடந்து, தேடல், தெளிதல், கண்டறிதல், ஐயந்திரிபற கற்றல் என இன்னப்பிற செயல்களோடு கூடிய செயன்முறையாக விளங்குவதுடன், ‘ அறிவுருவாக்கம்’ என்பதற்கும் அடிப்படையாகின்றது.

அறிவுருவாக்கம் என்பது பன்மைத்துவ செயற்பாடுகளின் விளைவு என்ற அடிப்படையில் நோக்கும் போது, குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போதே சொல்லுவதைக் கேட்டு பேசப்பிரயத்தனப்படுவதுடன், ‘உறவுகளை அறிந்துக் கொள்ளல்’ என்ற செயன்முறைவழி வெளித் தெரிகின்ற அறிவுருவாக்கச் செயன்முறை நிகழ்கின்றது.

அதுமட்டுமேயன்றி, சூழலை வாசித்தல் முதற் கொண்டு, வளர்ந்தோர் நிலை அடையும் வரையிலான பருவநிலை மாற்றங்களில், உடல்நிலை வளர்ச்சி மாற்றங்கள் உட்பட அனைத்துவிதமான சமுக மாற்றங்களிற்கேற்ப தம்மை இசைவாக்கஞ் செய்துக்கொண்டு வாழப்பழக்கப்படுகின்றதொரு சூழ்நிலையில், அறிவு, கேட்டல், செவிமடுத்தல், பார்த்தல், தேடல், அனுபவித்தல், மாற்றங்களை அவதானித்தல், கருத்துவெளியிடல், அனுபவபகிர்வு, கலந்துரையாடல், வாசித்தல், தர்க்கித்தல் என இன்னப்பிற செயல்களின் ஊடாக அறிவு அல்லது தேடல்வழி அறிவு விரிவாக்கம் அடைதல் பல்வேறு வழிமுறைகளிலும் முடிவிலி செயன்முறையாகத் தொடர்கின்றது.

இதனடிப்படையில் அறிவுருவாக்கம் என்பது பல்வேறு செயன்முறைகளின் வழி பன்மைத்துவ செயற்பாடுகளின் கூட்டிணைப்பினூடாக உருவாக்கம் பெறுகிறது என்பது தெளிவாகிறது. இவ்வாறு அறிவுருவாக்கம் என்பது எவ்வாறு பன்மைத்துவ செயற்பாடுகளின் விளைவாகக் கருக்கொண்டு உருக்கொள்கிறதோ, அப்படியே பன்மைத்துவ புறக்காரணிகளின் செல்வாக்குக்கு உட்பட்டு நிற்றல் என்பதும், அறிவுருவாக்கத்தின் நிதர்சனமான நிலைப்பாடாகும்.

விளக்கிச் சொல்லப்போனால், அறிவுருவாக்கம் என்பது, மனிதர் அவர்;தம் வாழ்வியலில் இயல்பாக, நடைபெறுகின்ற செயற்பாடு எனினும், அத்தகைய அறிவுருவாக்கச் செயன்முறையில் புறக்காரணிகளின் செல்வாக்கும் இன்றியமையாததாகின்றது என்ற நிலைப்பாடாகும். எடுத்துக்காட்டாக, எழுத்தறிவு, நூலறிவு, அனுபவ அறிவு என்பவற்றை அடியொட்டி அறிவுருவாக்கம் என்ற செயன்முறை நிகழ்கின்றது எனினும், அவரவர் குடும்பம், பண்பாட்டரசியல், மதம் என இன்னப்பிற விடயங்கள் அத்தகைய அறிவருவாக்கச் செயன்முறையில், செல்வாக்குச் செலுத்துகின்றமையை குறிப்பிடலாம்.

எடுத்துக்காட்டாக சொல்லப்போனால், மதப்பிரிவினையின் அடிப்படையில், குறித்த ஒருநபர் எந்த மதத்தை பின்பற்றுகிறாரோ, அந்த மதம் சார்ந்த கருத்துக்கள், குறித்த நபரின் அறிவுருவாக்கச் செயன்முறையில் செல்வாக்கு செலுத்தும் என்ற நிலைப்பாடாகும். இந்த அடிப்படையில் அறிவுருவாக்கம் என்ற செயன்முறை அதன் உருவாக்கம், நடைமுறை, விரிவான நிலைகளில் பன்மைத்துவமுடையதொரு செயலொழுங்கு என்பது தெளிவாகின்றது.

இத்தகைய அறிவுருவாக்கம் என்பதை ‘எவையெல்லாம் நிறுவனமயப்பட்டு நிற்கின்றனவோ அவற்றையே அறிவுருவாக்கம்’ என்பதான ஒற்றை குவிமையப்பார்வையில், நோக்குகின்ற போக்கையே காலனிய மனபாங்கு கட்டமைத்து நிற்கிறது. இதனடிப்படையில், அறிவுருவாக்கத்தின் ஏற்புநிலை என்பது, நிறுவனமயப்பட்டு நிற்கின்ற நிலையையும், ஏனைய அறிவுடைமைகள் அல்லது அறிவுடைமையாளர்கள் புறக்கணிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

உதாரணமாக, சமகால அசாதாரண சூழ்நிலையில், ( கொரோனா ) மடகஸ்கார் மூலிகைமருந்துகளைக் கைக்கொண்டு நோய் பரவுகையை முற்றாகத் தடுத்திருந்ததோடு அதனையே உலக சுகாதார தாபனத்திற்கு பரிந்துரை செய்திருந்த போதும், உலக சுகாதார தாபனம் விஞ்ஞான ரீதியாக நிறுபிக்கப்படாதவற்றை பரிந்துரை செய்யமுடியாது என நிராகரித்திருந்தமையையும் எடுத்துக் கூறலாம். இத்தகையதொரு மேலெழுந்தவாரியான கண்ணோட்டம் என்பது, அறிவுருவாக்கம் என்ற செயலொழுங்கு பன்மைத்துவ காரணிகளின் கூட்டு மொத்த இணைவு என்ற சிந்தை கிட்டும் நிலையில் கேள்விக்குட்படுத்தப்படலாம்.

இத்தகைய அறிவுருவாக்கச் செயலொழுங்கில், கருத்து அல்லது கருத்துருவாக்கத்திற்கான நிலை என்பது முதன்மையானது. கருத்துருவாக்கம் எனும் போது குறிப்பிட்ட ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி அல்லது வேறு எதுவாக இருப்பினும், அத்தகைய ஒரு குறிப்பிட்ட நிகழ்வில், தனிநபர் நிலைப்பாடு எதுவாக இருக்கிறதோ அதனை வெளிப்படுத்தல், கருத்துத் தெரிவித்தல் அல்லது கருத்துக் கூறல் என்ற அடிப்படையில் நோக்கப்படுகின்றது.

ஆக, கருத்து என்பது அவரவர் எண்ணத்தின் வெளிப்பாடாக அமைகின்றது என்பது தெளிவாகின்றது. இத்தகைய கருத்துருவாக்கச் செயன்முறை என்பது, அவரவர் தனிப்பட்ட எண்ணங்களின் வெளிப்பாடு என்ற போதும், இத்தகைய எண்ண வெளிப்பாட்டு நிலையில், பல்வேறு அக, புறக் காரணிகளின் செல்வாக்கு நிலையை காணமுடிவதுடன், அத்தகைய எண்ணம் என்பது, பல்வேறு சூழ்நிலைகளின் தாக்கத்திற்கும் உட்பட்டு கட்டமைக்கப்படுவதையும், வடிவமைக்கப்படுவதையும் அவதானிக்கலாம்.

குறிப்பாக, ஒரு சாதாரண நிகழ்வில் அவரவர் அனுபவத்தை வெளிப்படுத்துவது முதற்கொண்டு, விமர்சன ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஈறாக அத்துனை எண்ண வெளிப்பாட்டு செயன்முறைகளிலும், கருத்து என்பது பண்மைத்துவ காரணிகளால் வடிவமைக்கப்படுகின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, ஏற்கனவே சொல்லப்பட்டது போல அறிவுருவாக்கச் செயன்முறை, பன்மைத்துவக் கூறுகளின் விளைவாகத், தோற்றங் கொள்வதை போன்று கருத்து என்பதும், பால், வர்க்கம், அரசியல், பண்பாடு என இன்னப்பிற காரணங்களின் தாக்கத்திற்கு உட்பட்டு வெளிப்படுத்துவதை எடுத்துக் கூறலாம்.

சமகாலத்தில் இத்தகைய அறிவுருவாக்க, கருத்துருவாக்கச் செயன்முறைகளில், கல்வி நிறுவனங்கள், மதநிறுவனங்கள், வெகுசன ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றின் பங்கும் கணிசமாக உணரப்பட்டு வருகின்ற நிலையில், அறிவுருவாக்கம், கருத்துருவாக்கம் என்பன பன்மைத்துவ நிலைகளில், தம்மை அகலித்துக் கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

ஆக இத்தகையதொரு நிலைப்பாடு என்பது, மனிதரின் சிந்தனையுடன் தொடர்புபட்ட சகலவிதமான செயலொழுங்குகளிலும் ஏற்புடையது என்ற வகையில், அறிவுருவாக்கம், கருத்துருவாக்கம் ஆகியனவும், பன்மைத்துவ செயலொழுங்குகளின் விளைவு என்பது புலனாகின்றது. இந்நிலையில், அறிவுருவாக்கம், கருத்துருவாக்கம் ஆகிய பன்மைத்துவ செயன்முறைகளில், தத்தம் சுயம்சார்ந்து, தனியாள் உரிமம் கோரல் ( கருத்து – அறிவு பன்மைத்துவங்களின் விளைவு என்பதை மறுத்து, அறிவு – கருத்து திருட்டு என்பதாகக் கருதுதல்) எத்துனை பொருத்தப்பாடுடையது என்பது குறித்து சிந்திக்க வேண்டிக்கிடக்கிறது.
இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More