169
கட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் முகமாக வாக்காளர்கள் கறுப்பு அல்லது நீல நிற மை பேனாக்களை வாக்களிக்க வரும் போது கொண்டுவருவது விரும்பத்தக்கது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்நிலையில் சில கட்சியினர் அல்லது கட்சி செயற்பாட்டாளர்கள் தற்போதே கட்சி சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் , இலக்கங்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வழங்குவதாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
வாக்களிப்பு நிலையங்களுக்கு அந்த பேனாக்களை வாக்காளர்கள் கொண்டு செல்வது தேர்தல் விதிமுறை மீறலாக கருதப்படும், அதேவேளை மற்றைய கட்சி முகவர்களும் அது தொடர்பில் முறையிடுவார்கள். இதனால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட்டு நேர விரயமும் ஏற்படும்.
ஆகவே கட்சி சின்னங்கள், பெயர்கள் , விருப்பிலக்கம் உள்ளிட்டவை பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். #சின்னங்கள் #வேட்பாளர்கள் #பேனாக்கள் #சுகாதார #வாக்களிப்புநிலையங்கள்
Spread the love