இலங்கை பிரதான செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கைது செய்யுங்கள்!

பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் யோசனை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான சிறப்புக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

வட மாகாணத்தில் கழிவகற்றல் விடயம் தொடர்பில் 3 ஆண்டுகளாகப் பேசி வருகின்றோம். ஆரம்பத்தில் இருந்து இந்த விடயங்களை மீளப்பார்க்க முடியாது ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் இணைந்து தங்களுடைய பிரதேசங்களில் அதாவது உதாரணமாக யாழ்ப்பாண மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர்.

இதேபோல் நல்லூர், கோப்பாய் போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக வேண்டும். அதாவது எங்கிருந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன என்பதனை முதலில் அடையாளப்படுத்துங்கள். அதனை அடையாளம் கண்டு விட்டு உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் அவர்களை கைது செய்யுங்கள். இதனை இலகுவாக கைது செய்ய முடியும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள். அனைவருக்கும் விளங்கும் அதாவது யார் யார் குப்பை கொட்டுகிறார்கள், எந்தெந்த இடங்களில் குப்பை கொட்டப்படுகின்றன.

ஒவ்வொரு கிழமையிலும் நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். மூன்று நாள்களை இதற்காக ஒதுக்குங்கள். கட்டாயமாக இதனை கட்டுப்படுத்த முடியும். பொலித்தீன் மற்றும் இதரக் கழிவுகளில் மட்டும்தான் இந்த டெங்கு பரவக் கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.

ஒவ்வொரு கிழமையும் இந்த வேலைத் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலமே டெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

இவ் வருடம் நாங்கள் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். எமது யாழ்ப்பாணம் மாவட்டம் டெங்கு சிவப்பு எச்சரிக்கையில் உள்வாங்கப்படவில்லை. அந்த நிலமையை தொடர்ச்சியாக பேணுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த மாதங்களில் எமக்கு சிவப்பு எச்சரிக்கை வந்துவிடும். எனினும் இவ் வருடம் நமது மாவட்டம் அதற்குள் உள்வாங்கப்படவில்லை.

அதற்கு கோரோனா தாக்கம் இருந்ததுதான் காரணம். கடந்த வருடம் சில பல்லாயிரக்கணக்கான தொற்று நுளம்புகள் பரவியதன் காரணமாக அதிக அளவில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கோரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் நாங்கள் இரண்டு விதமான கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றினோம். சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினர் மூலம் எமது கட்டுப்பாட்டு நடவடிக்கையினை மேற்கொண்டோம். அதில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு சட்டம் நமக்கு முழுமையாக வெற்றியை தந்தது.

சுகாதாரப் பிரிவினரால் முகக் கவசங்களை அணியுங்கள் சமூக இடைவெளியினை பேணுங்கள் என நடை முறைப்படுத்தினோம். ஆனால் மக்கள் மத்தியில் நீங்கள் பார்த்தால் விளங்கிக்கொள்ள முடியும். எங்கேயாவது சமூக இடைவெளி பேணப்படுகின்றதா? அல்லது எங்கேயாவது மக்கள் முகக் கவசம் அணிந்து வருகிறார்களா?

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் இணைந்து எதிர்வரும் காலத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap