மட்டக்களப்பு தும்பங்கேணி பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டிட பகுதியில் உள்ளூர் தயாரிப்பு சொட்கண் துப்பாக்கி ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கி இன்று(17) மாலை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய களுவாஞ்சிக்குடி களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி காவல்துறைப் பரிசோதகர் தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி இரும்பு மூலப்பொருளினால் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக இயங்கு நிலையில் காணப்படுகின்றது.
இயங்கு நிலையில் மீட்கப்பட்ட குறித்த துப்பாக்கி காணப்பட்ட பகுதி கடந்த காலங்களில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக காணப்பட்டதாகவும் துப்பாக்கி மீட்கப்பட்ட பகுதி புலிகளின் விமலன் பயிற்சி முகாம் அமைந்திருந்ததாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.
தற்போது மீட்கப்பட்ட துப்பாக்கி வெல்லாவெளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #மட்டக்களப்பு #தும்பங்கேணி #துப்பாக்கி #அதிரடிப்படையினர் #விடுதலைபுலிகள் #விமலன்பயிற்சிமுகாம்