இலங்கையின் விமான நிலையங்களை திறப்பதற்கான எண்ணம் தற்போதைய சூழ்நிலையில் கிடையாது என இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித் துள்ளார
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இலங்கையிலுள்ள சுமார் 2.20 கோடி மக்களின் சுகாதார பாதுகாப்பு, 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிக்கையை வழங்கும் வரை விமான நிலையங்கள் திறக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகம், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடல் மார்க்கமாக வருபவர்கள் தொடர்பாக கடற்படையினர் மிகவும் கவனமாக கண்காணித்து வருவதாகவும், இந்தப் பணியில் கடற்படையைச் சேர்ந்த பெரும்பாலான கடற்படை சிப்பாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்படை, கடந்த ஜூன் மாதம், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக ஒரு பிரிவினர், இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்திருந்ததாகவும், அதன் பின்னர் இந்தியாவிலிருந்து எவரும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.
குறிப்பாக 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் சுற்றுலா துறை வீழ்ச்சி அடைந்திருந்தது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், இலங்கையின் சுற்றுலாத்துறையை பாரிய வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிருந்தது.
இவ்வாறான நிலையில், 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி நகர்ந்து, நவம்பர் மாதமளவில் வழமைக்கு திரும்பியிருந்ததாக இலங்கை சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
இது தவிர, உலகத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், கடந்த மார்ச் மாதம் இலங்கையையும் தாக்கியது.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடு முடக்கப்பட்டதுடன், விமான நிலையங்கள் மூடப்பட்டன.
சுமார் ஒரு மாத காலம் தொடர்ந்த முடக்க நிலைமை, சரியாக ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் படிப்படியாக வழமைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவுவது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும், வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படும் இலங்கையர்களுக்கு, தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றமை நாளாந்தம் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், வீழ்ச்சி கண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இலங்கை மக்களின் சுகாதார பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்படும் வரை விமான நிலையங்களை திறக்க முடியாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 328 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததுடன், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 71 ஆயிரத்து 370 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகைத் தந்திருந்தனர்.
அதன்பின்னர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 975 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஒரு சுற்றுலா பயணி கூட நாட்டிற்கு வருகைத் தரவில்லை என இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
இலங்கையில் எந்தவித பாரதூரமான பிரச்சினைகளும் இல்லாத வருடமான 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 11 லட்சத்து 8 ஆயிரத்து 293 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்திருந்தனர்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட 2019ஆம் ஆண்டு அதே காலப் பகுதியில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 465 ஆகும்.
எனினும், கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் 2020ஆம் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை இலங்கைக்கு 71 ஆயிரத்து 370 சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா துறைக்கு பெயர் பெற்ற நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ள நிலையில், இலங்கையில் இன்று சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தரவுகளுக்கு அமைய, 1971ஆம் ஆண்டு இலங்கைக்கு 39 ஆயிரத்து 654 சுற்றுலா பயணிகளே வருகைத் தந்துள்ளனர்.
அந்த ஆண்டில் மாத்திரம் சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கைக்கு 3.4 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆரம்பமான இலங்கையின் சுற்றுலா துறை ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்ற பாதையில் சென்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது.
இதன்படி, கொரோனா அச்சுறுத்தலை இலங்கை எதிர்நோக்குவதற்கான முன்னர் 2019ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை 19 லட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு சுற்றுலா துறையின் மூலம் இலங்கைக்கு 3,606.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்தது.
இலங்கை வரலாற்றில் சுற்றுலாத்துறை மூலம் அதிக அளவிலான வருமானம் கிடைத்த ஆண்டாக 2018ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
2018ஆம் ஆண்டில், 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்ததுடன், அவர்களின் ஊடாக அந்த ஆண்டு 4,380.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்திருந்தது.
இவ்வாறு வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்த இலங்கையின் சுற்றுலா துறை, மீண்டும் பாரிய பின்னடைவை நோக்கி நகர்ந்துள்ளமை, இலங்கை சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது.