அமெரிக்க பூர்வகுடி மக்களின் ஆன்மீக கலாச்சாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அமெரிக்காவின் 15-க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய உள்ளார்.
‘Of Motorcycles and a Mystic’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்தை அவர் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மஹாளய அமாவாசை தினமான செப்.17-ம் தேதி தொடங்கினார். டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் (Isha Institute of Inner Science) இருந்து புறப்பட்ட சத்குரு செருக்கி லேண்ட்ஸ், கொமான்ச்சி, மிஸிஸிபி, இல்லினாய்ஸ், மிசவ்ரி, நியூ மெக்ஸிகோ, கொலோரடோ உள்ளிட்ட மாகாணங்கள் வழியாக சுமார் 6,000 மைல்கள் பயணித்து மீண்டும் டென்னிஸி வந்தடைய உள்ளார்.
சுமார் ஒரு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம் 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆய்வாளர்களின் வருகைக்கு முன்பான அமெரிக்காவின் பூர்வ மரபினை பற்றிய ஆய்வு பயணமாக அமைய இருக்கிறது. குறிப்பாக அமெரிக்க பூர்வ இனக்குழுக்களின் கலவைகளையும், அது நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் உருவாக்கி இருக்கும் கற்பனைகளையும் மிக ஆழமாக ஆராய்ந்து அறிந்து கொள்ளும் முயற்சியாகவும் அமைய இருக்கிறது.
அமெரிக்க பூர்வகுடிகள் இயற்கையின் அடிப்படை கூறுகளுடன் கொண்டிருந்த ஆழமான தொடர்பிற்காக அறியப்பட்டவர்கள். அவர்களின் உள்ளுணர்வின் மூலமே புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலும், மிக உயர்ந்த உள்வாங்கிக் கொள்ளும் திறனும் அவர்களின் தனித்துவமான கலாசாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் இருக்கிறது. மேலும் அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான ஆன்மீகரீதியான ஒற்றுமைகள் குறித்து அறிந்து கொள்ளவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.
அமெரிக்காவில் 45 லட்சம் பேர் அமெரிக்க மற்றும் அலாஸ்கா பூர்வகுடியின மக்களாக உள்ளனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 1.5 சதவீதம் ஆகும். #அமெரிக்க #பூர்வகுடி #கலாச்சாரம் #சத்குரு #மோட்டார்சைக்கிள் #பயணம் #ஈஷா