இலங்கை பிரதான செய்திகள்

மணியும், முன்னணியும் கடிதமும்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கட்சியின் தலைமையினால் அவருக்கு அனுப்பிவைத்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன்,
27.09.2020
ஐயனார் கோயிலடி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமை நீக்கம்

எமது அரசியல் இயக்கத்தின் மத்திய குழுவின் 13.08.2020 தீர்மானத்துக்கமைவாக, உடனடியாக செயற்படும் வண்ணம் தாங்கள் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் 14.08.2020 ஆந் திகதியிடப்பட்ட எமது கடிதத்தின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எமது அரசியல் இயக்கத்தின் கட்டுக்கோப்பைப் பேணும் முகமாக தங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு 18.04.2020 அன்று தலைவருடன் நடந்த சந்திப்பின்போது – தவறை ஏற்றுக்கொண்டு தாங்களாகவே கோரியிருந்தீர்கள். ஆயினும், அந்தத் தவறைத் திருத்திக்கொள்ள பல மாதகால அவகாசம் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தும் கூட, மத்திய குழுவின் முடிவுகளை மீறிய வகையில் எமது அரசியல் இயக்கத்தை சிதைக்கும் போக்கிலேயே தங்களின் தொடர் செயற்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன.

அரசியல் இயக்கத்தின் பதவிநிலை அணுகுமுறைகள் தொடர்பாக – தாங்கள் தெளிவாக அறிந்திருந்த நிலையிலும், மத்திய குழுவின் அனுமதியுடன்; தலைமைத்துவமே தகுதிவாய்ந்தவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கும் நடைமுறைகளே எமது அரசியல் இயக்கத்தின் மரபாக உள்ள நிலையிலும், தங்களுக்கு இதே தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்ட தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர்; பதவிகளிலிருந்து நீக்குவதென, எமது இயக்கத்தின் மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலான நடவடிக்கையையே மேற்கொண்டிருந்தோம்.

கட்சியின் உறுப்பினராக இருந்து அதற்கு மேன்முறையீடு செய்து, தங்களின் தகுதிநிலையினை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் எமது அரசியல் இயக்கத்தினூடாக வழங்கப்பட்டிருந்த நிலையிலும், இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க நெறிமுறைகளுக்கு கட்டுப்படாத முறையில்; மத்திய குழுவின் தீர்மானங்கள் சட்டவலுவற்றதும், சனநாயகத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் எனத் தாங்கள் குறிப்பிட்டுள்ளதுடன் மத்திய குழுவின் தீர்மானத்தை தான்தோன்றித்தனமாக மீறியும், இயக்கத்தின் ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்படாமலும், எமது அரசியல் இயக்கத்தின் நற்பெயரைச் சிதைக்கத் திட்டமிட்ட வகையிலேயே செயற்பட்டு வருகின்றீர்கள்.

எமது அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கு நாம் வழங்கிய சந்தர்ப்பங்கள் அனைத்திலும் எவ்வித நல்லிணக்கத்தையும் தாங்கள் காட்டியிருக்கவில்லை.மாறாக – தேசிய அமைப்பாளராகவும், ஊடகப் பேச்சாளராகவும் தொடர்ந்தும் செயற்படுவேன் எனவும், மத்தியகுழு தீர்மானம் தங்களைக் கட்டுப்படுத்தாது எனவும், எமது அரசியல் இயக்கத்தின் கட்டமைப்பையும், ஒழுக்க நெறிமுறைகளையும் சவாலுக்கு உட்படுத்தி, சிதைக்கும் வகையிலேயே தங்கள் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

இதனடிப்படையில் 26.08.2020 அன்று நடைபெற்ற எமது அரசியல் இயக்கத்தின் மத்தியகுழுத் தீர்மானத்தின் அடிப்படையில் தாங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளீர்கள் என்பதைத் தெரிவித்து, மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைவாக தங்களுக்கு குற்றப்பத்திரமும் வழங்கப்பட்டிருந்தது.

அக் குற்றப்பத்திரத்தில் ஆறு (6) ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து, எமது அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான ஒழுக்க மற்றும் செயற்பாட்டுக் கோவையின் 3, 6, 7, 10, 14, 28 ஆகிய விதிகளை தாங்கள் மீறியுள்ளமையையும் குறிப்பிட்டு – தங்கள் பக்க நியாயமேதுமிருப்பின் 14 நாட்களுக்குள் எழுத்துமூலம் காரண விளக்கத்தினைத் தெரிவிக்குமாறும் எம்மால் கேட்கப்பட்டிருந்தது.

தாங்கள் குற்றங்கள் புரிந்தமை சந்தேகத்துக்கிடமின்றி மத்தியகுழுவினால் அறியப்பட்டிருந்தும், தங்கள் பக்க காரண விளக்கமேதும் இருப்பின்; அவற்றைப் பரிசீலிப்பதற்காகவும், தங்களுக்கு மன்னிப்பளிக்கக்கூடிய ஏதாவது அடிப்படைகள், தங்களின் காரண விளக்கத்தில் உள்ளதா என்பதனை ஆராய்வதற்கும், காரண விளக்கத்தில் மத்தியகுழுவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படைகள் ஏதேனும் இருப்பின், விசாரணைக்குழுவை அமைத்து பரிசீலிப்பதற்குமாக தங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

ஆயினும், தாங்கள் 20.08.2020 என முற்திகதியிட்டு தங்களின் பதில் கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், அக்கடிதத்தில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், ஒழுக்க விதிகள் மீறப்பட்டமை தொடர்பாகவும், தங்களின் காரண விளக்கங்கள் எவற்றையும் குறிப்பிட்டிருக்கவில்லை. மாறாக, எமது அரசியல் இயக்கத்தின் மத்தியகுழுவின் 13.08.2020 மற்றும் 26.08.2020 திகதிகளின் தீர்மானங்களை வேண்டுமென்றே மீறும் வகையில், தாங்கள் தங்களின் அக்கடிதத்தில் ‘‘தேசிய அமைப்பாளர், ஊடகப்பேச்சாளர்’’ என்ற அதே பதவிநிலைச் சொற்பதங்களைக் குறிப்பிட்டுள்ளமையானது, எமது அரசியல் இயக்கத்தின் கட்டுப்கோப்புக்களை அனுசரித்து பயணிக்கத் தாங்கள் தயாரில்லை என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

எமது அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிப்பதற்குரிய எந்தவிதமான நல்லிணக்கத்தையும், ஒழுக்கத்தையும், கட்டுக்கோப்பையும், கூட்டுப்பொறுப்புணர்வையும், தாங்கள் கடைப்பிடிக்கத் தயாரற்ற நிலையில், தங்களை இனிமேலும் எமது அரசியல் இயக்கத்துடன் இணைத்துப் பயணிப்பதற்குரிய அனைத்து வாய்ப்புக்களையும் தாங்கள் இழந்துள்ளதாக 27.09.2020 ஆம் திகதிய மத்திய குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

எனவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் 27.09.2020 ஆம் திகதி ஒன்று கூடிய மத்திய குழு உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில். எமது அரசியல் இயக்கத்தின் மத்திய குழுவின் தீர்மானங்களைத் தொடர்ச்சியாக மீறிவரும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகிய தாங்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறியத்தருகின்றோம். மத்திய குழுவின் ஆணையின் பிரகாரம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்.

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link