தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளனரென தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இவ்விருவரும் அங்குள்ள 80 வர்த்தக நிலையங்களுக்கு சென்று வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, தம்புள்ள பொருளாதார மத்திய நிலையமானது, நேற்று (10.10.20) இரவு முழுமையாக கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா?
களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளாரென, களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொற்றுக்குள்ளான இந்த மாணவியுடன் தொடர்பிலிருந்த, மேலும் 2 மாணவிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை, இந்த மாணவியின் தந்தை மினுவாங்கொட பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் தொழில்புரிவதுடன், இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மினுவங்கொட கொவிட் கொத்தணியும் கொரோனாவும்…
மினுவங்கொட கொவிட் கொத்தணியின் முதலாவது முதல் இரண்டாவது தொற்றாளர் வரையில் பரவிய விதம் தொடர்பில் கண்காணிக்கப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றை தினம் (10.10.20)இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 26 பேர் மினுவங்கொட பகுதியையும், 23 பேர் கம்பஹா பகுதியையும் மற்றும் 22 பேர் திவுலுபிட்டிய பகுதியையும் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பில் இருவர், பொலன்னறுவையில் இருவர், மாத்தளையில் ஒருவர் மற்றும் பானந்துறையில் ஒருவர் என பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்தது ஒருவரேனும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் 522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் எனவும் வைரஸ் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் சமூகமயப்படுவது மக்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது கொரோனா தொற்றாளர் தொடர்பில் இதுவரையில் மேலதிக தகவல்கள் இல்லை எனவும் தற்போதைய தகவல்களுக்கு அமைய கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் குறித்த கைத்தொழிற்சாலையில் இருந்து சிலர் சுகவீனமுற்று இருந்ததாக தெரிவித்துள்ளார்.
குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குப் பூட்டு.
குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை மேலும் ஒரு வாரத்துக்கு மூடி வைக்க தூதரகம் தீர்மானித்துள்ளது.
குவைத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால், தூதரகத்தை மேலும் ஒரு வாரத்துக்கு மூடி வைக்க தீர்மானித்துள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இந்த மாதம் 18ஆம் திகதி வரை குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த காலப்பகுதிக்குள் குவைத்திலுள்ள இலங்கையர்களின் அவசர சேவைக்காக, [email protected] என்ற இணைய முகவரி ஊடாகத் தொடர்புகொள்ளுமாறும் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.