Home இலங்கை ‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்…

‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்…

by admin

பேராசிரியர் தந்தை சி. மணி வளன் சே.ச. புனித ஜெர்மேனம்மாள் சிறுமணி என்னும் அம்மணி எனும் நாடகத்தைப் பதிப்பித்துள்ளார். தந்தை சி.மணி வளன் அவர்களால் நிறுவப்பட்டு, அவர்களே இயக்குநராக இருந்து செயல்படும் கிறித்தவ ஆய்வு மையத்தின் வழியாக, அழியக்கூடிய நிலையிலிருந்தவைகளை மீட்டு, பல நாடகச் சுவடிகளையும் கையெழுத்துப்பிரதிகளையும்  நூலாக்கம் செய்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. அந்தவகையில் கீழ்க்காணும் நாடகங்கள் அவரால் வெளியிடப்பட்டுள்ளன. ஞானசவுந்தரி அம்மாள் நாடக அலங்கார சபா (2010), புனித கனுகொந்தம்மாள் கீர்த்தனை நாடகம்( 2013), புனித அலேசியார் நாடகம்(2014),  ஸ்ரீ பகார்த்த விலாசம் (2015) முதலிய நாடகங்களை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ‘புனித ஜெர்மேனம்மாள்  சிறுமணி எனும் அம்மணி (2017) நாடகத்தைப் பதிப்பு செய்துள்ளார்.

 கிறித்தவ இலக்கிய வகைகளில் வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்திக் கிறித்துவக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவைகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம். கதைவழி முன்மொழிதல், மறையுரையாற்றுதல், திரைப்படங்களில் காட்சிப்படுத்துல், நன்னெறிப் படைப்பாக்கங்களை உருவாக்குதலும் வெளியீடுலும், இலக்கியங்கள் படைத்தல், நாடகங்கள் அரங்கேற்றம் செய்தல் இவ்வாறு கிறித்தவ இலக்கிய வகையை வகைப்படுத்தலாம். நாடக நிகழ்த்துக்கலை வழியாக கிறித்தவ இறையியலை நம்பிக்கையாக மக்களிடம் எடுத்து முன்வைப்பதைக் கிராமங்களில் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு கிறித்தவ ஆலய விழாக்களிலும் இயேசு உயிர்ப்பு திருநாளிலும் இன்னபிற நன்னாளிலும் கிறித்தவ சமயப் புனிதர்களின் வரலாற்றையும் கிறித்தவ சமயக் கருத்துக்களைப் பகிரக்கூடிய ஊடகமாக நாடகம் எனும் நிகழ்த்துக்கலை வழி நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இன்றளவில் பல ஊர்களில் நிகழ்த்தப்பட்டு வந்தாலும் இவ்வகையான  நிகழ்த்துதல் அரிதாகிக் கொண்டு வருகிறது.

புனித ஜெர்மேனம்மாளின் நாடகம் இலக்கிய வழி இறைமொழி பகர்தல் எனும் நிலையில், இது நாடகமாக நடிக்கவும் ஏற்புடையது என இந்நாடகத்தைப் பதிப்பித்த முனைவர் சி. மணி வளன் கூறியுள்ளார். புனித ஜெர்மேனம்மாளின் புகழ்பாடும் முயற்சிகள் வரலாற்றில் நிலைபெற வேண்டும் என்ற வேட்கை என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. இதற்கிடையே, அழிந்து போகும் நிலையில், அரைகுறையாகக் கிடைத்த புனித ஜெர்மேன் நாடக எழுத்துப் படிவத்தைப் பார்த்தேன். சுருளாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த இந்தப் படிவம் தெளிவு இன்றியும் முழுமையாக இல்லாமலும் இருந்தது, ஏமாற்றத்தைத் தந்தது என இதன் பதிப்பாசிரியர் கூறுகிறார்.

கிடைத்த அரிய பொக்கிஷத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவா எழுந்ததன் விளைவாக, செல்லரித்த பிரதியை சி.மணி வளன் அவர்களிடம் கொடுத்து அவர் கிடைத்த நாடக வடிவினை விரிவாக, சரிசெய்து முழுமையாக ஒரு நாடக வடிவமாக உருவாக்கி வெளியிட்டுள்ளார் என இந்நாடக உருவாக்கம் குறித்து அருட்பணியாளர்  எம். எலியாஸ் அவா்கள் கூறியுள்ளதை நாடக நூலின் வழியாக அறியமுடிகிறது.  

இந்நாடகத்தின் மையப்பொருள் புனித ஜெர்மேனம்மாள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள பிராக் எனும் சிற்றூரில் 1579 ஆம் ஆண்டில் பிறந்து, 1601 ஆம் ஆண்டு இறந்த புனித ஜெர்மேனம்மாள் மனித சமுதாயத்தினைப் பாவத்திலிருந்து விடுவிக்க மனித உருவெடுத்து, இயேசு மாட்டு தொழுவத்தில் கிடைத்ததைப் போல ஜெர்மேனம்மாள் ஆடுகள் அடையும் தொழுவத்தில் உயிர் நீத்தார். இன்றளவிலும் ஜெர்மேனம்மாளின் உடல் அவரின் சொந்த ஊரான ‘பிராக்’கில் அமைந்துள்ள கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்நாடகம் அமைந்துள்ளது. இந் நாடகத்தில் மொத்தம் பதினோரு காட்சிகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் மிக நீண்டதாக அமையாமல் சிறுசிறு நிகழ்வுகளைப் பாத்திர உரையாடல்கள் வழியாகக் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நாடகம் பதினைந்து மணித்துளி அளவிற்குள் அல்லது இருபது மணித்துளி அளவுக்குள் நடித்து விடக் கூடியதாக அமைந்துள்ளது. 

முதல் காட்சி பின்னரங்கக் குரலாக, ‘கிபி 1644 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு’ என்று ஒலிக்கிறது. முதல் காட்சியில் நிக்கலாஸ், கையார்ட் ப்ரூ எனும் இரு பாத்திர உரையாடல் மூலமாக முதல் காட்சி அமைந்திருக்கிறது. முதல் காட்சியில் ஜெர்மேனம்மாள் அடக்கம் செய்த பிராக் ஊரில் அமைந்துள்ள கோவிலில் 50 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு பொட்டு கூட உடல் அழியாமல் இருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டு, இரண்டு பெரியவர்கள் பேசிக்கொள்கிறார்கள். தான் கண்டதை எல்லோரிடமும் எடுத்துக் கூறுவதாக இரண்டு பாத்திரங்களும் பேசிக்கொள்கிறார்கள்.

இரண்டாவது காட்சியாக  ஆலயம் தொழுவதற்காக செல்வச் சீமான் பெர்டினான்ட் அவர் மனைவி மேரி ஆகிய இருவரும் ஆலய நுழைவாயிலில் வருவதாகக் காட்சி அமைகிறது. இதில் ஜெர்மேனம்மாள் அடக்கம் செய்யப்பட்ட  இடத்திற்கு வந்ததும், “இது கோயிலா?, இல்ல. கல்லறையா?” என்று வினவ, பாதிரியார் அவர்கள் சொல்படி ஜெர்மேனம்மாள் நினைவிடத்தை  வேறு இடத்திற்கு மாற்றுகிறார். இதன் பின்னர் செல்வந்தரின் மனைவி மேரிக்கு தீராத நோய் ஏற்படுகிறது. தன் சிறு குழந்தையும் தன்னிடம் பால் அருந்த வர மறுக்கின்றது. மேலும் இவளுக்கு நெஞ்சு பிளவை நோய் ஏற்படுகிறது. இதைக்குணப்படுத்த  எந்த மருத்துவரைப் பார்த்தாலும் சரியாகவில்லை. பின்பு தான் செய்த காரியத்தை நினைத்து வருந்துகிறாள். ஜெர்மேனம்மாள் கோவிலில் இருக்கும் சடலத்தை எடுக்கச் சொன்னதால் தான்  இவ்வாறு நிகழ்ந்தது என வருந்தி மீண்டும் அதே இடத்தில் ஜோ்மேனம்மாளின் சடலத்தை வைக்கும்படி கூறிய பின்னரே அப்பெண்ணிற்கு ஏற்பட்ட நோய் குணமடைகின்றது. இச்செய்தியை மையப்படுத்தியே இரண்டாவது, மூன்றாவது காட்சியும் அமைந்திருக்கிறது

நான்காவது காட்சி பின்னரங்கிலிருந்து “1793 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பெரும் புரட்சி துவங்குகிறது. புரட்சிக்காரர்கள் ஜெர்மேனம்மாளின் உடலுக்கு குறி வைத்தார்கள். துலீசர் என்ற புரட்சிக்காரர் நான்கு கூலி ஆட்களுடன் ஜெர்னேம்மாளின் உடலுக்கு அருகில் வந்தான்”. என்று குரல் ஒலிக்க, இக் காட்சியில் கூலித்தொழிலாளி, துலீசர் ஆகிய கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. பின்னர் ஜெர்மேனம்மாளின் உடலை சுண்ணாம்புகள் போடப்பட்டு வேறு இடத்தில் புதைத்து விடுகின்றனர். பிரெஞ்சுப் புரட்சி முடிந்த பின்னர் மக்கள் ஒன்று கூடி மீண்டும் ஜெர்மேனம்மாள் உடலைத் தோண்டிப் பார்க்க, சடலம் சிதைவில்லாமல் அப்படியே இருப்பதைப் பார்த்து வியக்கிறார்கள். இவ்வாறு இக்காட்சி அமைந்துள்ளது.

ஐந்தாவது காட்சியின் பின்குரலாக, “திருத்தந்தை பதினாறாம் கிரகோரியார் ஜெர்மேன் குசென் வணக்கத்துக்கு உரியவர் என்று அறிவித்து அறிக்கையில் கையொப்பமிட்டார்.” இவ்வாறு நாடகத்தின் பின்குரல் குரல்ஒலிக்கிறது. வாழ்க்கையில் தன் சித்தி ஏற்படுத்திய துன்பத்திற்கு ஒரு போதும் வருந்தவில்லை ஜெர்மேனம்மாள். பல துன்பங்கள் விளைவித்த  பழைய நிகழ்வுகளை சொல்லி ஜெர்மேனம்மாள் சித்தியைச் சொல்லி காட்டவில்லை. துன்பம் விளைவித்த சிற்றன்னையை மன்னிக்கிறார்.மேலும், ஐந்தாவது காட்சியில் துறவிகள் இரண்டுபேர் வழிப்போக்கர்களாகச் செல்லும்போது ஜெர்மேனம்மாள் வாழ்வில் நடந்த கதைகளைப் பற்றி பேசுகிறார்கள்.

ஆறாவது காட்சியில்   மூன்று சிறுவர்கள் ஜெர்மேன்னம்மாள் ஆடு மேய்க்க கூடிய சூழலை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. ஜெர்மேனம்மாள் தான் கொண்டு சென்ற குச்சியைச் சிலுவை செய்து வைத்து விட்டு ஆடுகளை மலைப்பகுதியில் விட்டு விட்டு வந்தாலும் ஓநாய்க்கு அகப்படாமல் ஆடுகள் அனைத்தும் பத்திரமாக வீடு வந்து சேரும். இதனை, சிறுவர்களும் ஊர்மக்களும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.அடுத்ததாக,   நற்கருணை, பக்தி விசுவாச உணர்வு, ஜெப வாழ்க்கை, ஜெபமாலை சொல்லுதல் ஜெர்மேனம்மாவுக்கு நிகர் அவரே. அடுத்து, மக்கள் கதாபாத்திரங்கள் ஆகின்றனர். ஒன்பதாவது காட்சியில் தன்னிடம் இருக்கக்கூடிய கயிறை 50 முடிச்சுகளாக போட்டு ஜெபமாலை செய்து ஜெபம் செய்வதுபோல காட்சி அமைந்திருக்கிறது. இவ்வாறு ஜெர்மேனம்மாள் வரலாற்றினை  “சிறுமணி என்னும் அம்மணி ”நாடகம் முன்மொழிகிறது.

1579 ஆம் ஆண்டு ஜெர்மேன் உசேன் என்னும் பெண் குழந்தை பிறந்து பிறக்கும் பொழுதே வலது கை சூம்பியும் கழுத்தில் கண்டமாலை நோயோடு (புற்றுநோய்)  பிறக்கின்றார். தன் சிற்றன்னை தன் தாய் இறப்பிற்குப்பின் தன் சிற்றன்னை இவளை கொடுமைப்படுத்துகிறார் ஒரு வயதிற்கு பின்னர் ஆடு மேய்க்க அனுப்புவதும் வீட்டிற்கு வெளியே அமைந்துள்ள மாட்டுத்தொழுவத்தில் தங்க செய்வதுமான செயலால் எல்லாவித துன்பத்தையும் வேதனையையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். இவருடைய தோற்றத்தைப் பார்த்து இவளுக்கு ஏற்பட்டுள்ள நோய் தன் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுவிடும் என்று நினைத்து தன் பிள்ளைகளுக்கு அருகாமையில் அண்டவிடாமல் துன்புறுத்தி வந்தாள். ஆனால் ஜோ்மேனம்மாளோ தனக்கு நேர்ந்த துன்பத்தை ஒருபோதும் பொருட்படுத்தாமல் ஆடு மேய்க்கச்செல்வது, இறைவனை வேண்டுவது என இறைவன் மீது விசுவாசமாக வாழ்ந்துவந்தார். இவர் சிறு குழந்தைகள் மீது அன்போடு இருப்பதால் அக்குழந்தைகள்  அக்காள் என அன்போடு அழைப்பதுண்டு. மக்கள்  எல்லோரும் ஒதுக்கக்கூடிய சூழலிலும் கூட ஒருபோதும் மனம் தளராமல் இறைவனை நாள்தோறும் தொழுது வந்தார். இதன் பயனாக இறையருள் பெற்று பல புதுமைகளை நிகழ்த்தினார். ஆற்று வெள்ளம் கரை புரண்டு ஓட எவராலும் ஆற்றைக் கடக்க முடியாத சூழலில் தான் கடந்தது, அவ்வூர் மக்களுக்குப் புதுமையாக இருந்தது. இவர் மீது திருட்டு பட்டம் சுமத்தி ஊரார் முன் பழிதீர்க்க இவள் மடி நிறைய ரொட்டித் துண்டுகளைத் திருடிச் செல்கிறாள் என்று கூற அவ்வூர் மக்கள் மடியைப்பார்க்க ஜெர்மேனம்மாள் மடியிலிருந்து பூக்கள் உதிர்வதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இப் புதுமைகள் மக்கள் மத்தியில் இவர் மீது அளவு கடந்த அன்பை ஏற்படுத்தின. இவ்வாறு வாழ்ந்து இறந்த நேர்மையினால் தான் புனிதராகப் போற்றப்படுகிறார். இப்புனிதரின் வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட “புனித ஜெர்மேன்னம்மாள் சிறுமணி எனும் அம்மணி” எனும் நாடகம் அமைந்துள்ளது.

ஆதார நூல் :

  1. முனைவர் சி. மணி வளன் சே.ச.  – புனித ஜெர்மேனம்மாள் சிறுமணி என்னும்    அம்மணி நாடகம்,

கிறித்தவ ஆய்வு மையம்,

புனித வளனார் தன்னாட்சிக் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி.- 620 002.

2017.

– ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்மொழி  இலக்கியத்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.- 625 514. #சிறுமணி #அம்மணி #புனிதஜெர்மேனம்மாள் #வாழ்க்கைவரலாறு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More