இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலியாகியுள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேட் ஒப் குளோபல் எயர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர் எனவும் இந்தியாவில் மட்டும் சுமார் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாகப் பலியாகி உள்ளனர் எனவும் அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் நிறை குறைந்த குழந்தைகளாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காற்று மாசுபாடு காரணமாகப் பலியாகி உள்ளனர் எனவும் உயர் ரத்த அழுத்தம், புகையிலைப் பயன்பாட்டுக்கு அடுத்து அதிக அளவிலான பலி காற்று மாசுபாட்டால் ஏற்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து ஆபிரிக்கா, தெற்காசியா போன்ற நாடுகளிலும் காற்று மாசு காரணமாக குழந்தைகள் பலி எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் குறித்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது. #இந்தியா #குழந்தைகள் #காற்றுமாசுபாடு #பலி