ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு நாலாக விக்க சொல்லி
கடிதம் போட்டான் சீமதுரை
காலனிய அதிகாரம் தொழிற்பட்ட முறைமையினை மிகவும் எளிமையாகவும், நகைச்சுவையாகவும் வெளிப்படுத்தப்பட்டு இருக்கும் தன்மையை மேற்படி வாய்மொழி பாடலில் காணமுடிகிறது.
பொதுமக்கள் மத்தியிலான அறிவையும், அதன் முக்கியத்துவத்தையும்; உணர்ந்து காலாகாலமாக புழங்கிவரும் வாய்மொழி மரபுகளின் அறிவார்ந்த நிலைமையினை விளங்கிக் கொள்வது அவசியமாகும். காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான சிந்தனைகள், செயற்பாடுகள் பலவகையிலும் மக்கள் மத்தியிலிருந்து நிகழ்ந்து வந்திருக்கின்றன. வாய்மொழி மரபுகளில்; இவற்றை நிறையவே காண முடியும்.
ஆயினும் நவீனமயமாக்கம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டிருக்கின்ற காலனியமயமாக்கம், இந்த விடயங்களை எல்லாம் படிப்பறிவற்ற மக்களின் வெளிப்பாடுகளாக; கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லாத விடயங்களாகவே கற்றுத்தந்து கொண்டிருக்கின்றது.
பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல
எழுதிவச்சி பழக்கமில்ல..
எனும் வாய்மொழிப் பாடல் வழியாக, பள்ளிக்கூடம், எழுத்தறிவு ஆகியவற்றின் அதிகாரக்கொழுவிருப்பு சூழலிலும், ஏடு எழுத்தற்ற வாய்மொழி வழியிலான செயல்மைய கல்வியின் இருப்பையும் அது பற்றிய அறிவையும் அறிந்துக் கொள்ள முடிகிறது. அறிவும்திறனும் நினைவில் நின்று புத்தி வழியும், உடல் வழியும் இயங்குகின்ற இந்த அறிதல் முறைமை என்பது நிராகரிக்கப்பட்ட ஒன்றாகவே காலனியக் கல்வி முறையான நவீன கல்விமுறையில் இருந்து வருகின்றது.
கறிபுனா (Garifuna) மக்களது புழக்கத்தில் வழங்குகின்ற பென்சிலின்( Pencil) அதிகாரம் பற்றிய கருத்தை கவனத்தில் கொள்வது இங்கு பொருத்தமாக இருக்கும். பென்சில் வைத்திருப்பவர்கள்; பென்சில் வைத்திராதவர்கள்; அல்லது பென்சில் அற்றவர்கள் என்ற கூற்று எழுத்தின் அதிகாரத்தை சுட்டுவதாக இருக்கிறது. அதாவது மேற்படி மக்கள் மத்தியில் பென்சில் அதிகாரத்தின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. நவீனவாதத்தின் அதிகாரத்துவ பண்பாக அமைந்த “ இங்கு எழுதப்படுவது மட்டுமே வாசித்து புரிந்துக் கொள்ளப்படும்” என்ற நிலைப்பாடு பல்வகைப்பட்ட அறிவு முறைகளை அழிப்பதற்கும், அருகிவிடச் செய்வதற்கும் காரணமாக இருந்திருக்கிறது. அதுவே நவீனமயம் என்ற காலனிய நோக்கமாகும்.
21ம் நூற்றாண்டில் எழுத்தின் ஆதிக்கம் குன்றி படிமங்களின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ள நிலையில் எழுத்துத்தான் அறிவின் வெளிப்பாட்டு வடிவம் என்ற ஆதிக்க நிலை கேள்விக்குள்ளாக அல்லது தளர்வடையத்தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் ஆய்வுகள் என்பவை புகைப்படங்கள், திரைப்படங்கள், ஆற்றுகைகள், இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இலத்திரனியல்கலைகள் என முன்வைக்கப்படுகின்றன.
இலத்திரனியல் தொடர்பூடகங்களின் வருகை வாய்மொழி மரபுகளிற்கும் புதிய பரிமாணங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. குறித்தவொரு பகுதியில் அல்லது ஒரு நபரால் அல்லது குழுவால் அல்லது சமூகத்தால் நிகழ்த்தப்படும் ஆற்றுகைகள் எல்லைகள் கடந்தும் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உரியவையாகி இருக்கின்றன. இதன் பாதகமான பக்கங்களும் உண்டு. பாதக நிலைமைகள் பற்றிய புரிதல் அடிப்படையானவை. இது தொழிநுட்ப காலனியத்தை எதிர்க்கொள்ள வைப்பதாக இருக்கும்.
எனவே எழுத்து மரபுக்கு சமாந்தரமானதாகக் கொள்ளப்பட வேண்டிய உள்ளுர் அறிவு திறன்களின் காவியாகிய வாய்மொழி மரபுகள் புறக்கணிப்பு என்பது, காலனிய சக்திகளின் வெற்றிகளேயன்றி உள்ளுர் சமூகங்கள் நாகரீகமடைதலோ அல்லது அபிவிருத்தியடைதலோ அல்ல. மாறாக வேரும் விழுதுகளுமான கடந்த காலங்களை அறுத்துக்கொண்டு தொங்கு வாழ்க்கைக்கு தகவமைக்கும் காலனியத்தின் வெற்றியாகும்.
இந்த விடயங்கள் சார்ந்து காலனித்துவ நீக்க நோக்கில் உரையாடல்களை மேற்கொள்வதும், செயற்பாடுகளை முன்னெடுப்பதும் விடுதலைக்கான வாழ்வின் முன்னோடியாக இருக்கின்றன. வாய்மொழி மரபுகள் என்பவை விடுதலைக்கான சமூகங்களது உருவாக்க நோக்கில் அறியப்பட வேண்டியவை; ஆராயப்பட வேண்டியவை; தேவையான சந்தர்ப்பங்களில் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டியவை. இந்த மீளுருவாக்கம் என்பது குறித்த சந்தர்ப்பங்களில் அதனுடன் சம்பந்தப்படுகின்ற மக்கள் குழுமங்களுடனான உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட செயல் முன்னெடுப்புகளாகும். இந்த பின்னணியில் எழுத்துமரபு, இலத்திரனியல் ஊடகங்கள் கொண்டு வந்திருக்கின்ற கட்புலமரபு என்பவற்றிற்கு சமாந்தரமாக கொள்ளப்பட்டு வாய்மொழி மரபுகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
இந்த இடத்தில்தான் ஈழத்து அறிவு உருவாக்க சூழலில் நாட்டார் வழக்காறு (folklore), கட்புலமானிடவியல் ( visual anthropology) , அழகியல்கணினியம் ( aesthetic computing ) , கணினிய அழகியல் ( Computational aesthetic) , வாய்மொழிக் கலைகள் (oral art) போன்ற அறிவுத்துறைகளின் தேவையை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆதிக்க நீக்கங்களுக்கு முனைகின்ற சமூகங்கள் சமகால நிலவரங்களையும், முற்போக்கான கருத்தியல்களின் நிலைநின்று அணுகுகின்ற தேவைப்பாடு உணரப்பட வேண்டியது. அது விளிம்புநிலை – மையநிலை, மேல் – கீழ், உயர்ந்தது – தாழ்ந்தது என்ற பாரபட்ச நிலமைகளை நீக்குவதற்கு அவசியமானது. இந்த வகையில் வாய்மொழி மரபுகளினை முக்கியத்துவப்படுத்தல் என்பது பன்மை தன்மையின் யதார்த்தத்தை நிலைபெறச் செய்வதற்கே ஆகும்.
சி.ஜெயசங்கர்.