இந்தியா இலக்கியம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

திருநெல்வேலி பல்கலைக்கழக பாடத் திட்டத்திலிருந்து, அருந்ததி ராயின் நூல் நீக்கம்…

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் ஒன்று பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அளித்த புகாருக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் ” Walking With The Comrades” என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கில மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் 2017ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த சிலர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பிச்சுமணியை நேரில் சந்தித்து இந்த புத்தகத்தைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து அவர்கள் துணைவேந்தரிடம் அளித்த மனுவில் ‘கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பாடம் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் மீது நேரடியாக நக்சல் மற்றும் மாவோயிச கருத்துக்கள் திணிக்கப்பட்டு வந்துள்ளன. தேச விரோத கருத்துகளைத் தெரிவிக்கும் இந்த புத்தகத்தை பாடத் திட்டமாகச் சேர்த்த பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏபிவிபி மாணவர் அமைப்பு வண்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகம் மன்னிப்பு கேட்பதோடு மட்டுமில்லாமல் பாடத் திட்டத்திலிருந்து உடனடியாக புத்தகத்தை நீக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் தற்போது அந்தப் புத்தகம் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்துக்குப் பதிலாக மா. கிருஷ்ணன் எழுதியிருக்கும் My Native Land: Essays on Nature என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய ஏபிவிபியின் மாநில இணை செயலாளர் விக்னேஷ் “மூன்று வருடங்களாகப் புத்தகம் இருந்தாலும் எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது அங்கே படித்து வரும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர்தான் இப்படி ஒரு புத்தகம் பாடத் திட்டத்தில் இருப்பதை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இது மாணவர்களுக்குத் தவறான கருத்தைப் பரப்பும் விதமாக இருக்கும் என்பதால் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் பின்னர் உடனடியாக விசாரித்த துணைவேந்தர் தற்போது அந்தப் புத்தகத்தை நீக்கியிருக்கிறார்,” என்றார்.

இந்தப் புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதை பாரதிய ஜனதா கட்சி வரவேற்றிருக்கும் நிலையில், தி.மு.க., சி.பி.எம். போன்ற கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஆனால், ஏபிவிபி இது தொடர்பாக கோரிக்கை எழுப்பிய பிறகுதான் இந்தப் புத்தகம் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகச் சொல்வது தவறு என்கிறார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பிச்சுமணி.

“கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்தாலும் தேர்வு செய்பவர்கள் மட்டும் படிக்கக்கூடிய பாடம் (எலெக்டிவ் சப்ஜெக்ட்) என்பதால் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. M.A. ஆங்கில இலக்கியம் மூன்றாவது செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் வைக்கப்பட்டிருந்தது. ஏபிவிபி அமைப்பினர் மனு கொடுத்த பின்னர்தான் புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல, அதற்கு முன்னர் எங்கள் பல்கலைக்கழக உறுப்பினர்களிடம் இருந்தே இந்தப் புத்தகத்தை நீக்கச் சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆகவேதான் எங்கள் கல்லூரியின் மூன்று டீன்கள், தற்போதைய பாடத் திட்ட வாரிய தலைவர், இதற்கு முந்தைய தலைவர் எனப் பல தரப்பினர் அடங்கிய கமிட்டியை அமைத்தோம். கமிட்டியில் இருந்த அனைவரிடமும் ஆலோசனை செய்த பின்னர்தான் புத்தகத்தை நீக்க முடிவு செய்தோம். கல்லூரிக்கு மாணவர்கள் கல்வி கற்கவே வருகிறார்கள். அவர்களுக்கு வேறு எந்த சிக்கலும் வந்து விடக்கூடாது. மாணவர்களின் நலனே முக்கியம் என்பதால் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது ” என்கிறார் கே. பிச்சுமணி.

புத்தகம்

இதற்கிடையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பாடத் திட்டங்களில் இது போன்ற புத்தகங்கள் இருக்கிறதா என ஆராய முடிவுசெய்திருப்பதாக ஏபிவிபியினர் தெரிவிக்கின்றனர்.

“தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் இது போன்ற புத்தகங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடிவு செய்திருக்கிறோம். அதற்காக அந்தந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள், எங்கள் இயக்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் போன்றவர்களை வைத்து குழுக்களை அமைக்க முடிவெடுத்துள்ளோம். இவர்கள் அந்த கல்லூரியின் பாடத் திட்டத்தைக் கண்காணிப்பார்கள்,” என பிபிசியிடம் தெரிவித்தார் ஏபிவிபியின் விக்னேஷ்.

‘ Walking With The Comrades ‘ எதைப் பற்றிப் பேசுகிறது ?

இந்தியாவின் மத்திய மாநிலங்களின் அடர்ந்த வனப் பகுதிகளில் மவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அப்பகுதிகளுக்குச் சென்ற அருந்ததி ராய், மாவோயிஸ்டுகளின் அனுபவத்தையும் ஆயுதம் ஏந்துவதற்கு அவர்கள் சொன்ன காரணங்களையும் தொகுத்து ‘Walking With The Comrades” என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் 2011ல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #அருந்ததிராய் #WalkingWithTheComrades #மாவோயிஸ்டு #பாடத்திட்டம்

  • ராஜேஷ் முருகன்
  • பிபிசி தமிழுக்காக

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.