இலங்கை பிரதான செய்திகள்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மறியலில்

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.


யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்க தொலைபேசியும் பறித்து சென்றது.


கொரோனோ தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது தமிழ்க் கொடி எனும் அமைப்பு உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முகநூலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பதிவொன்றினை இட்டிருந்தார்.


பதிவினை நீக்க கோரி தமிழ்க் கொடி எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தத்தை கொடுத்ததுடன் மிரட்டலும் விடுத்திருந்தனர். அதற்கு ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளனர்.


தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண ம் காவல் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் விமல் , கிஷோகுமார் மற்றும் ஜீவமயூரன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், வீட்டோன்றினுள் அத்துமீறி நுழைந்து நபர் ஒருவரை தாக்கியமை  மற்றும் அவரது உடமையிலிருந்த 38ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தொலைபேசியை கொள்ளையடித்தமை ஆகிய குற்றசாட்டின் கீழ் யாழ். நீதவான் நீதிமன்றில் மூவரையும் முற்படுத்தினர்.


அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளையடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.–#ஊடகவியலாளர் #தாக்குதல் #விளக்கமறியல் #முகுந்தன்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.