Home இலங்கை வழக்கு தாமதம் – டிஜிட்டல் முறையில் தீர்க்க பரிந்துரை

வழக்கு தாமதம் – டிஜிட்டல் முறையில் தீர்க்க பரிந்துரை

by admin

நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் குவிந்துள்ள வழக்குகள் குறித்த தகவல்களைப் பெற நீதிச் சேவை ஆணைக்குழு, டிஜிட்டல் இணையவழி தகவல் சேகரிப்பு முறையை உருவாக்கியுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் குறித்த குழு நிலை விவாதத்தின்  ஒன்பதாவது நாளான இன்றைய தினம்  நாடாளுமன்றத்தில் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையில், நீதியமைச்சர் அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 231,506 வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றில் 4,620 வழக்குகள் 20 வருடங்கள் பழமையானவை என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற வழக்குகள் குறித்த தகவல்களை மாவட்ட நீதிமன்றங்களில் நீதிச் சேவை ஆணைக்குழு சேகரித்து வருவதாகவும், டிஜிட்டல் தரவுத்தளத்தை நிறுவாமல் ஒவ்வொரு வழக்கின் தகவல்களையும் வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மஹர தகவல் இல்லை

மஹர சிறைச்சாலையில் நடந்த போராட்டங்களுக்கு எதிரான தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர்.  இந்நிலையில், உறவினர்கள் போராட்டம் நடத்தியபோதிலும், இறந்த கைதிகளை அடையாளம் காண முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களின் உடல்கள் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் அடையாள ஆவணங்கள் தீவிபத்தால் அழிவடைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பது கடினமென ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஷெல்டன் பெரேரா  தெரிவித்துள்ளார்.

ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள்

இலங்கையின் அனைத்து நீதிமன்றங்களிலும், ஏழு இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குள் நிலுவையில் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.  

2019 ஆம் ஆண்டின் இறுதியில் அனைத்து நீதிமன்றங்களிலும் 766,784 வழக்குகள் நிலுவையில் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

அந்தச் சூழலில், நீதி நிர்வாகத்தை வலுப்படுத்த நீதி அமைச்சின் கீழ் ஒரு சிறப்புப் பிரிவை நிறுவுறதக்கு, கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி 2020 செப்டெம்பரில் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

2016 ஆம் ஆண்டின், தேசிய சட்ட மாநாட்டுக் குழு வழக்குகளில் தாமதத்தை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சினைகள், பாதகமான விளைவுகள் மற்றும் முன்மொழியப்பட்ட தீர்வுகள் குறித்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக, அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

வழக்குகளில் தாமதத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உட்கட்டமைப்பு மேம்பாடு, சட்ட சீர்திருத்தம், நீதித்துறை சுயாதீனத் தன்மை மற்றும் திறன் மேம்பாடு மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நீதி அமைச்சரின் முன்மொழிவை கருத்தில் கொண்டு, சட்டத்துறையில் நிபுணர்களின் உதவியுடன் 3 வருடங்களுக்குள் நீதி சீர்திருத்த திட்டத்தை செயற்படுத்த நீதி அமைச்சின் கீழ் ஒரு சிறப்பு பிரிவை அமைக்க அமைச்சரவை செப்டெம்பர் மாதம் அனுமதி அளித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #வழக்கு #தாமதம் #டிஜிட்டல்முறை #பரிந்துரை #அலிசப்ரி #மஹரசிறைச்சாலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More