ஆனந்தனின் 25 ஆவது ஆண்டு நினைவு என்பது பல விடயங்களைச் சிந்திப்பதற்கான தேவையையும் சந்தர்ப்பத்தையும் வழங்கியிருக்கின்றது.
ஆனந்தன் எப்படியான மனிதர்? அவர் எப்படி மரணித்தார்?
சொந்த முயற்சியினூடாக பொதுசனப் புலமையாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் தன்னை இயங்க வைத்த ஆளுமைதான் ஆனந்தன் அவர்கள்.
அடிப்படையில், அறிவு என்பது மனிதர் வாழவும்; எல்லா உயிர்களும் அவற்றின் இயல்புகளுடன் வாழவும், உலக இயக்கத்தினதும், இயற்கையினதும் அம்சமான மனிதர்கள் அதையுணர்ந்து வாழ்வதற்கும் உரியது.
ஆனந்தன் அவர்களது அறிவுத் தேடல் என்பது அவர் வாழவும்; எல்லோரும் வாழவும்; எல்லாமும் வாழவும் உரியதான உலகத்திற்குரியது.
வாழ்வதற்காகவும் வாழ்விப்பதற்காகவும் தேடினார், அறிந்தார், பகிர்ந்தார். அறிவு, அவரிடம் அதிகாரத்திற்குரியதாக இருக்கவில்லை. அடையாளத்திற்குரியதாகவும் இருக்கவில்லை. அறிவு அவரிடம் வாழ்விற்குரியதாக இருந்தது. அறிவின் அடிப்படையான நோக்கை அறிந்துணர்ந்து இயங்கியவர் ஆனந்தன்.
அவரது வாழ்வு அடிநிலை மக்களது வாழ்வு மாற்றம் பற்றியதாக இருந்தது. அதேநேரம் எவரது அழிவின் மூலமாகவும் அடிநிலை மக்களது வாழ்வில் முற்போக்கான மாற்றம் சாத்தியப்படுவது பற்றிய சிந்தனை உடையவரல்லர் ஆனந்தன்.
அறிவார்ந்த தேடலின் மூலமாகத் தங்களுக்குரிய வாழ்வை தாங்கள் தீர்மானிக்கும் வலுவுடையவர்களின் உருவாக்கம் ஆனந்தன் அவர்களது வாழ்வாக இருந்தது.
ஊரிலிருந்து உலகங்களை நோக்கிப் பரந்து விரிந்து செல்லும் அறிவுத்தேடல் அவருக்குரியதாக இருந்தது. உலகில் எங்களது இடம் எதுவாக இருக்கிறது? எப்படி இருக்கிறது? எதுவாக இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? அதில் தான் எவ்வாறு இயங்குவது? தன்னுடன் இருப்பவர்கள், தனக்கு அறிமுகமானவர்கள் எவ்வாறு இயங்குவது? இதையொத்த மனிதர்களுடன் எவ்வாறு அறிமுகப்பட்டுக் கொள்வது? என்ற தேடலுக்குரிய வாழ்வு ஆனந்தனது.
வாசிப்பின் பல பரிணாமங்களிலும் அவரது திறன் எப்பொழுதும் கூர்மை உடையதாகவே இருந்தது. நூல்களை வாசிப்பது, சூழலை வாசிப்பது, மனிதர்களுடன் உரையாடுவது, குழுவாக இயங்குவது எந்த நிலைமைகளிலும் இயங்கும் தன்மையை ஏற்படுத்திக் கொள்வது, வளர்த்தெடுப்பது என்பதில் சலியாத இயல்பு அவரிற்குரியதாக இருந்தது.
ஆனந்தன், அவர் போன்ற மனிதர்களது இருப்பும் பெருக்கமும் இன்றைய கால கட்டத்தினதும், மிகவும் முக்கியமாக இனிவரும் கால கடடங்களினதும் அவசியத் தேவையாகி இருக்கின்றன.
அறிவு, கல்வி ஆகியதன் பின்னணியில் அந்தக் கல்வி பரீட்சைக்கானதும் அதன் மூலம் பெறும் பட்டம் மூலம் ஏதோவொரு தொழிலைப் பெற்று விடுவதும் யதார்த்தமான சூழலாக இருக்கின்றது. உயர்கல்வி, ஆய்வு, எழுத்து என்பது அதிகாரத்திற்கும், அடையாளத்திற்கும் மட்டுமே என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமூகங்களின் குரல்களாக அல்லாமல் அதிகாரங்களின் தூதுவர்களாக இயங்குவதே கல்விப்புலத்தின் பணியாகி இருக்கிறது. சொல்வதைச் செய்யும் பணியாளர்களாகவும்;, மௌனப் பண்பாட்டு உருவாக்கத்தின் முகவர்களாகவும் இருத்தலும் இயங்குதலும் புலமைத்துவப் பண்பாகப் பேருருவம் கொண்டு நிற்கிறது.
ஆனந்தன் போன்ற பொதுமக்கள் புலமையாளர்களிடம் இருந்து பெறுவதைப் பெற்றுக் கொள்ளும் உயர்கல்விப் புலமைப் பரம்பரை இந்த மனிதர்களை அவைகளுக்கு அடுப்பதில்லை. தங்களைப் போன்று பட்டங்கள் பெற்று தராதரங்கள் கொண்டவர்களாக இவர்கள் இல்லை என்பதே முன்வைக்கப்படும் வாதமாகவும் இருந்து வருகிறது. இந்த ஆபத்தும் அபத்தமும் உரத்த உரையாடலுக்கு கொண்டுவரப்பட வேண்டிய முக்கியமான விடயம்.
அதிகாரபூர்வமான கல்விப்புலங்களில் தராதரப்பத்திரங்கள் மட்டுமே மதிப்பிடப்படுகின்றன. அறிவின் தராதரங்கள் மதிப்பிடப்படுவதற்கான சூழல் மாசடைந்திருப்பது அனைவரும் அறிந்ததாக இருப்பினும் எவரும் பேசமுன்வராத விடயமாகி இருக்கிறது. ஏனிந்த நிலைமை என்பது உரத்து உரையாடப்பட வேண்டியது. கல்வி, உயர்கல்வி, உயர்கல்வி நிலையங்கள் காலனித்துவ நீக்கம் பெற்று மீளுருவாக்கம் பெறவேண்டுமென்ற உலகு தழுவிய உரையாடல்கள் எமது சூழலிலும் பரவ வேண்டும்.
இத்தகையதொரு பின்னணியில்தான் ஆனந்தனின் வாழ்வின் பொருள் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. அவரது மறைவின் பொருளும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. #ஆனந்தன் #நினைவு #யாதும்ஊரேயாவரும்கேளிர் #ஜெயசங்கர்