கடந்த ஐந்து வருடங்களில் பதினைந்து காவல்துறை அதிகாரிகள் குற்றங்களை தடுக்கும் சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஜூன் முதல் ஒக்டோபர் வரையிலான நான்கு மாதங்களில் காவல்துறைக் காவலில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாமன்றத்தில் உரையாற்றுகையில், 2015 முதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 15 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கைது செய்யப்போகும் போதும், போக்குவரத்து கடமைகளின் போது அவர்கள் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களின் நலனுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
மேலும், பேருந்து ஒன்றில் கிளைமோர் குண்டு ஒன்றை எடுத்தச் சென்றதை கண்டுபிடித்த பாதுகாப்பு அதிகாரிகளை பாராட்டும் விதமாக பதவி உயர்வு மற்றும் விஷேட சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமிந்த விஜேசிரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“அவர்களை பாராட்டும் வகையில் பெருந்தொகை பணத்தை வழங்குகின்றோம். இவ்வாறு செயற்படும் எந்தவொரு இராணுவத்திற்கும் இதுபோன்ற ஒரு திட்டம் உள்ளது, குறிப்பாக காவல்துறையினா் செய்த செயலை கௌரவிக்கின்றோம்.”
யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஒரு பழைய குண்டே அதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கிளைமோர் அல்ல, பழைய ஒரு குண்டே இது” என லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊனமுற்ற இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், பணி நடவடிக்கையின் போது ஊனமுற்ற மற்றும் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“அவர்கள் 55 வயதாகும் வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும், அதன் பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களின் கோரிக்கை சார்புடையவர்களுக்கானதாக இருந்தது. குறிப்பாக அவர்களது மனைவி உயிரிழக்கும் வரை அந்தப் பணத்தை வழங்க வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கை. அந்த திட்டம் காவல்துறையினருக்கும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில், அதிகபட்சமாக 355 பில்லியன் ரூபாய் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த செலவில் 13.2% ஆகும். #கடமைநேரத்தில் #காவல்துறையினா் #கொலை #மனிதஉரிமைகள்ஆணைக்குழு #சரத்வீரசேகர