இலங்கை பிரதான செய்திகள்

எனது சகோதரருக்கு சூடு படவில்லை – அவர் சுடப்பட்டுள்ளார்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது தனது சகோதரர் வேண்டுமென சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, உயிரிழந்த கைதி ஒருவரின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.

நவம்பர் 29ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களின் உறவினர்கள் சிலர், காயமடைந்தவர்களுக்கு இறந்தவர்களுக்கும் நீதி கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் (07) முறைப்பாடு ஒன்றை  பதிவு செய்துள்ளனர்.  

கைதிகள் உரிமைகளை பாதுகாப்புக் குழுவின் உதவியுடன் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அவருக்கு துப்பாக்கிச் சூடு படவில்லை, அவர் சுடப்பட்டார். நான் அவருக்கு துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ள இடத்தை காண்பிக்குமாறு கேட்டபோது பிரேத பரிசோதனையின்போதுதான் இதுத் தொடர்பில் தெரிவிக்க முடியுமென, அவர்கள் கூறினார்கள். எனது சகோதரர் உயிரிழக்கவில்லை, கொல்லப்பட்டுள்ளார்.” என  மஹர சிறைச்சாலை மோதலில் கொல்லப்பட்ட நாஹென அமித் சுபசிங்கவின், சகோதரி லக்மாலி திலுஷானி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட தனது சகோதரனின் சடலத்தை டிசம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காண முடிந்ததாகவும், சுமார் ஏழு அடி தூரத்தில் இருந்தே சடலத்தை  அடையாளம் காண வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், லக்மாலி திலுஷானி தெரிவித்துள்ளார.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் 25 கைதிகள் வெலிக்கட சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், தனது மகன் குறித்து எவ்வி தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என முறைப்பாட்டை செய்த தாயான சந்தியா சுமங்கலி  ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

“என் மகனுக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவருடன் பேச வேண்டும். என் மகன் எங்கே இருக்கிறான்” என மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சபீத தினேஷ் குமாரவின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தனது மகன் மஹர மோதலில் ஈடுபட்டதாக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீதி கிடைப்பதற்கு முன்னதாக மஹர மோதலில் உயிரிழந்த  11 கைதிகளின் உடல்களை எரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தனது அமைப்பு இந்த விடயத்தில் தலையீடு செய்யுமென, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சட்டத்தரணி, சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

மோதல்களில் காயமடைந்த கைதிகளுக்கான உணவு மற்றும் பிற சுகாதார வசதிகளில் பற்றாக்குறை காணப்படுவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக மனித உரிமை சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

மஹர மோதல் தொடர்பான குற்றவியல் விசாரணை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை என்றாலும், இறப்புக்கு தவறான காரணங்களைத் தெரிவிக்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதை கண்டிப்பதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

“ஏனெனில் இந்த விடயத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றதாக  இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகிறார். நாங்கள் அதனை எதிர்கின்றோம்”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் உண்மையை மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதோடு, மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியை வழங்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் இறந்த 11 கைதிகளில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. #சகோதரருக்கு #சூடு #சுடப்பட்டுள்ளார் #மஹரசிறைச்சாலை #கைதி #மனிதஉரிமைகள்ஆணைக்குழு #சேனகபெரேரா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link