தனங்கிளப்பு பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததுடன் , மாணவியின் தாயார் மீதும் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அயலவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் அயல் வீட்டில் வசிக்கும் நபர் , வெள்ள நீர் தனது வீட்டு வளவுக்குள் வராத வகையில் அயல் வீட்டு வாசலில் இருந்த மண்ணை வெட்டி , தனது வீட்டு வேலிக்கு போட்டுள்ளார்.
அதனை அவதானித்த வீட்டுப்பெண் , எதற்காக எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் மண்ணை வெட்டுறீங்க , இப்படி என்றால் , எங்கள் வீட்டு வாசலில் வெள்ளம் தேங்கும் , என சொல்லி இருக்கிறார்.
அதற்கு மண்ணை வெட்டிக்கொண்டு இருந்த நபர் , கையில் இருந்த மண் வெட்டியால் அப்பெண்ணை தாக்கியுள்ளார். அதனால் அவர் மயக்கமுற்று விழுந்துள்ளார். அதனை அவதானித்த வீட்டிலிருந்த தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் மகளான பாடசாலையில் கற்கும் மாணவி , ஓடி வந்த போது , குறித்த நபர் தன்னுடைய சாரத்தை கழட்டி விட்டு மாணவியை நோக்கி “வா .. ” என அழைத்துள்ளார்.
அந்நபரின் குறித்த செயலால் அருவறுப்படைந்த மாணவி பயத்தினால் வீட்டினுள் ஓடி சென்று கதவினை பூட்டி விட்டு கூக்குரல் இட்டத்துடன் , கிராம சேவையாளர் மற்றும் காவல்துறையினருக்கும் அறிவித்துள்ளார்.
அதேவேளை மாணவியின் கூக்குரலை அடுத்து அயலவர்களும் கூடியதை அடுத்து மயக்கமுற்ற பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தாக்கிய நபரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது அந்நபர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் , அவர் தான் தாக்கியதற்காக 2 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளதாகவும் , அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை எனவும் அயலவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை கணவர் இல்லாது தனது மகளுடன் தனித்து வாழும் குடும்ப பெண் மீது தாக்குதல் நடாத்தி , மாணவியுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆதரவற்று நிற்கும் அந்த குடும்பம் , அந்நபரினால் தமக்கு மீண்டும் ஏதேனும் ஆபத்து நடந்து விடுமோ எனும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி , பாதிக்கப்படட குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதுடன் , தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஊரவர்கள் கோரியுள்ளனர். #மாணவி #அநாகரிகமாக #கோரிக்கை #தனங்கிளப்பு