மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் – சுனில் ஹந்துன்னெத்தி!
இன்றைய தினத்தில் இந்த ஊடக சந்திப்பு நடாத்தப்படுவது நேற்று (14) அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை தனியார்மயப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரம் சம்பந்தமாக நாட்டுக்கு விடயங்களை எடுத்துரைப்பதற்காகவே.
நவ லிபரல் முதலாளித்துவமானது எமது நாட்டையும் சமூகத்தையும் மிகவும் பாரதூரமான வகையில் தோல்விகண்ட நிலைக்கு உள்ளாக்கிய சுற்றுச்சூழலே நிலவுகின்றது. இன்று இந்த ஊடக சந்திப்பு நடாத்தப்படுகிறது. நேற்று முழுநாட்டையும் பிரமாண்டமான கடன் மேட்டுக்கு இரையாக்கி விட்டார்கள். பாரியளவில் டொலர் பற்றாக்குறையில் இறுக்கிவிட்டார்கள். 2019 இறுதியளவில் கடன் சுமை ஏறக்குறைய 14,000 பில்லியன் ஆகின்றது. அதில் பெரும்பங்கு வெளிநாட்டுக் கடனாக மாறிவிட்டது. இதனால் கடனைச் செலுத்துவதற்காக கடன்பெறவேண்டிய நெருக்கடியில் அரசாங்கம் மாறியுள்ளது.
பல்வேறு சர்வதேச தரப்படுத்தல்களில் இலங்கை கடன் செலுத்தும் இயலுமை அற்ற நாடாக பெயர் குறிக்கப்பட்டுள்ளது. டொலர் கடனைச் செலுத்த கடன் வாங்குவதற்காக நிலவிய அனைத்துப் பிரிவுகளும் இன்றளவில் சர்வதேசரீதியாக அற்றுப்போய்விட்டது. இந்த நிலைமைக்குள் குறிப்பாக நாட்டை இரையாக்குவதற்கான ஏகாதியத்தியவாதிகளின் தலையீடு பலம்பொருந்தியதாகி உள்ளது. நாட்டின் வளங்களை கைப்பற்றுவதற்கான உபாயமுறை என்றவகையில் சொச்சத்தொகைக்கு அவற்றை விற்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. வெளிநாட்டுச் சொத்துக்கள் பாரியளவில் குறைவடைந்தமை, பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்க்கணியமாக மாறியமை, வெளிநாட்டு உழைப்பாளிகளின் ஈட்டல்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைத்த வருமானம் பெரும்பாலும் குறைவடைந்து விட்டது. இதன் காரணமாக நாடு பிரமாண்டமான கடன் நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளது.
நிகழ்கால ராஜபக்ஷ ஆட்சியில் 2011 – 2012 காலத்தில் பெறப்பட்ட பன்னாட்டு முறிக் கடன்கள் பருவமுதிர்வடைவது தற்போதுதான். 2020 ஒற்றோபர் 04 இல் 1000 மில்லியன் டொலர் பருவமுதிர்வடைந்த முறிகள் கடன் வெளிநாட்டு ஒதுக்கங்களிலிருந்தே செலுத்துப்பட்டது. 2021 யூலை 27 ஆந் திகதி மேலும் 1000 மில்லியன் டொலர் பன்னாட்டு முறியொன்று பருவமுதிர்வு அடைகின்றது. அதனைச் செலுத்த இலங்கையிடம் டொலர் கிடையாது. அத்தியாவசியமான எரிபொருள், அத்தியாசிய உணவுகள் மற்றும் ஔடதங்களை இறக்குமதிசெய்ய வெளிநாட்டு ஒதுக்கத்தில் டொலர் தேவைப்படுகின்றது. எனவே இற்றைவரை விற்கமுடியாமல்போன தேசிய வளங்களை விற்கும் செயற்பாங்கிலேயே அரசாங்கம் தற்போது கைவைக்கின்றது. அவை மத்தியில் மிகவும் பாரதூரமானவையாக விளங்குவது துறைமுகமும் விமானநிலையமுமே ஆகும்.
உலகளாவிய புவிஅரசியலில் இலங்கை மிகவும் முக்கியமான இடத்திலேயே உள்ளது. பொருளாதார உயிர்நிலையிலாகும். இதற்கிணங்க மிகவும் முக்கியமானவையாக விளங்குபவை எமது நாட்டின் துறைமுகமும் விமான நிலையங்களுமே. அம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக சீனாவுடன் மேற்கொண்ட கொடுக்கல் – வாங்கலின்போது எமது நாடு சர்வதேசரீதியாக மிகுந்த அபகீர்த்தி அடைந்தது. கடன் வாங்குவதன் மூலமாக ஒரு நாடு தோல்வியடைவது பற்றிய உதாரணமாக கொள்ளப்படுவது இந்த கொடுக்கல் – வாங்கலாகும். சீனாவிடம் இருந்து கடன்பெற்று துறைமுகத்தை அமைத்து மீண்டும் சீனாவுக்கே கொடுத்தார்கள். இப்போது கடனையும் மீள்அறவீடு செய்கின்ற அதேவேளையில் துறைமுகத்தையும் இழந்துவிட்டோம். ஒருசில ஆபிரிக்க நாடுகளின் பாராளுமன்றத்தில்கூட இது பற்றி பேசப்பட்டிருந்தது. தோல்விகரமான கடன் பொறியில் சிக்கியமைக்கான உதாரணமாக இலங்கையை பல நாடுகள் உதாரணமாக காட்டுகின்றன.
ஒரு நாடு என்றவகையில் அத்தகைய பின்னணி நிலவுகையில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை விற்பதற்கான தயார்நிலைக்காக அரசாங்கம் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றது. இது தேசிய வளங்களை விற்பதற்கான முன்னைய உடன்படிக்கைகளை இல்லாதொழிப்பதாக கூறி ஆட்சிக்குவந்த அரசாங்கம். சீன துறைமுக உடன்படிக்கையை இல்லாதொழிப்பதாக அன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கூறினார்கள். தமக்கு வாக்களித்த மக்களின், தொழிற்சங்கங்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் செயலாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். துறைமுக அதிகாரசபையின் வருமானம் போதாது என்பதால் கிழக்கு இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்கான இயலுமை கிடையாதெனவே அரசாங்கம் கூறுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகம் என்றவகையில் கொள்கலன்களை கையாண்டு பாரியளவிலான வருமானம் பெற்ற இந்த துறைமுகம் இந்த நிலைமைக்கு வந்தமைக்கான காரணம் ஊழியர்களின் தவறு அல்ல. அந்த முழுமையான பொறுப்பினை நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்களே ஏற்கவேண்டும். சீனாவுக்கு ஏற்கெனவே ஒரு பங்கு வழங்கப்பட்டு விட்டது. மேலும் பல பங்குகளை இதற்கு முன்னர் தனியார்மயமாக்கினார்கள். சீனாவுக்கு ஒரு பகுதியை வழங்கும்போதும் நாங்கள் ஒரு கட்சி என்றவகையில் எதிர்த்தமைககான காரணம் கொழும்புத் துறைமுகத்தின் வருமானம் பாரதூரமானவகையில் சீரழியும் என்பதாலேயே. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததன் மூலமாக அவர்களே செய்த தவறினை ஏற்றுக்கொண்டார். கொழும்புத் துறைமுகத்தின் கடன் செலுத்தும் இயலுமை இனிமேலும் கிடையாதென்பது அதன் மூலமாக கூறப்படுகின்றது. துறைமுக அதிகாரசபையின் வருடாந்த ஈட்டல்களிலிருந்து 24.8% கடன் பங்கினை செலுத்துவதாக அவர்களே கூறுகிறார்கள். அண்ணளவாக 11 பில்லியன் ரூபா உள்ளூர்ரீதியாக கடன் செலுத்தப்படுகின்றது. இந்த கடன்சுமை சுமத்தப்பட்டவிதத்தை வருடாந்த அறிக்கைகளில் தெளிவாகக் காண இயலும்.
துறைமுகத்திற்கு மேலும் போட்டித்தன்மைமிக்க நிறுவனங்கள் கிடையாது. இலங்கை அரசாங்கத்திற்கு ஏகபோக உரிமையாக இருந்த துறைமுக அதிகார சபையின் பங்குகள் தற்போது விற்கப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு விற்ற முனையம் காரணமாக வருமானம் இழக்கப்பட்டிருக்குமாயின் கிழக்கு முனையம் விற்கப்பட்ட பின்னர் எஞ்சியவையும் அற்றுப்போகும்.
ஜப்பான் – இந்தியா கூட்டுக் கம்பெனியொன்றை நிறுவி இலங்கை அரசாங்கத்திற்கு 51% உரிமையுடன் கொடுப்பதாகக் கூறியே இதற்கு முன்னர் கிழக்கு இறங்குதுறை சம்பந்தமான முன்மொழிவு கொண்டுவரப்பட்டது. முகாமைத்துவத்தை அந்த புதிய கம்பெனி நெறிப்படுத்துகின்ற நிபந்தனைகளே இருந்தன. உரிமையை இலங்கையிடம் வைத்துக்கொண்டு கம்பெனிக்கு இந்த கடனை செலுத்துதல் பற்றிய திட்டங்கள் இருந்தன. கடனையேனும் பெற்று பிறென்டி பாரந்தூக்கிகளை பொருத்தி தொழிற்பாடுகளை பரவலாக அரசாங்கத்தின்கீழ் பேணிவருமாறே நாங்கள் அந்த சந்தர்ப்பத்திலும் சுட்டிக்காட்டினோம்.
ஆனால் அந்த வருமானத்தையும் இழந்து முன்னர் கூறிய ஜப்பான் – இந்திய கூட்டுக் கம்பெனியொன்றுக்குப் பதிலாக இந்தியாவினால் பெயர்குறிக்கப்பட்ட ‘அதானி’ கம்பெனிக்கு கிழக்கு இறங்குதுறையை விற்க இந்த அமைச்சரவைப் பத்திரம் மூலமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இன்றி இந்தியாவின் ‘அதானி போர்ட் லொஜிஸ்ரிக் குறூப்’ கம்பனியை பெயர்குறித்தே உள்ளார்கள். அதைப்போலவே ‘அதானி’ கம்பெனி பற்றி மிகப்பெரிய வீம்புவார்த்தைகள் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளன. இந்த கம்பெனி இந்திய கொள்கலன்களை கையாள்வதில் 30% நிறைவு செய்வதாகவும், 06 கொள்கலன் முனையங்கள் இருப்பதாகவும், ஆகவே அவர்களுக்கு கொடுக்கவேண்டுமெனவும் அமைச்சரவைப் பத்திரத்தில் காட்டப்பட்டுள்ளது.
இந்தியக் கம்பெனியொன்றின் இந்த தகைமைகள் எமது கிழக்கு இறங்குதுறையை கொடுப்பதற்கான தகைமையாக எவ்வாறு அமையும்? இந்தியாவும் இலங்கையும் ஒரு நாடு அல்ல. இலங்கை தன்னாதிக்கமுள்ள ஒரு நாடு. எமது நாட்டின் துறைமுகம் தொடர்பான அமைச்சரவை அமைச்சர் இந்தியாவின் துறைமுகம் தொடர்பான அமைச்சரவை அமைச்சரல்ல. ஆனால் ரோஹித அபேகுணவர்தன அமைச்சர் ‘அதானி’ கம்பெனியை பிரதிநிதித்துவம்செய்து இந்த கொடுக்கல் – வாங்கலில் ஏன் வருகிறார் என்பதை நாங்கள் விசாரித்துப் பார்க்க வேண்டும். இலங்கையின் புவி அரசியல் காரணமாக எமது நாட்டை அடிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது.
இதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு வந்தார். அதன் பின்னர் இந்திய பாதுகாப்பு பிரதானிகள் வந்தார்கள். இங்கு இருப்பது துறைமுக தொடர்புகளுக்கு அப்பால் சென்ற நாட்டை இரையாக மாற்றுகின்ற இயலுமையாகும். நாங்கள் வலியுறுத்துவது தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு அப்பால் சென்ற நாட்டின் பாதுகாப்பு பற்றியும் ஒரு பிரச்சினையாக மாறுமென்பதாகும். துறைமுக தொழிற்சங்கங்களும் ஊழியர்களும் துறைமுகத்தை விருத்தி செய்வதற்கான அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்று அதிகாரிகளின் சங்கத்தின் மூலமாக சமர்ப்பித்துள்ளார்கள். எமது உரிமையின் கீழ் பெருமளவு வருமானத்தை ஈட்டக்கூடிய இயலுமை இருக்கையில் விற்றுத்தீர்க்க தீர்மானிப்பது மிகவும் பாரதூரமான ஒரு நிலைமையாகும். கொறோனா பெருந்தொற்றின் கீழும் மக்கள் இதனை பொருட்படுத்தாமல் விடப்பட இயலாத ஒன்றாக ஏற்றுக்கொள்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் விற்பனை செயற்பாங்கிளை ஆரம்பிக்கின்ற முதலாவது படிமுறை இந்த துறைமுகத்தை விற்பனை செய்வதாகும். அதன் பின்னர் திருகோணமலையின் எண்ணெய்க் குதங்கள், புல்மோட்டை கனிப்பொருள் படிவு, எப்பாவல பொஸ்பேற் படிவு மற்றும் தற்போது எஞ்சியுள்ள பொருளாதாரரீதியில் முக்கியமான அனைத்து வளங்களையும் விற்பனை செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் கைவைக்கின்றது. இதற்கு எதிராக ஒன்றுசேரக்கூடிய முற்போக்குவாத சக்திகள் அனைத்தும் மௌனமாக இருத்தலாகாது.
கிழக்கு இறங்குதுறையைப்போன்றே காலி துறைமுகத்திற்குச் சொந்தமான காணிகளை விற்பனை செய்யவும் தற்போது தயார்நிலை காணப்படுகின்றது. அதனாலேயே தேசப்பற்றுள்ள மக்கள் இந்த தீர்மானத்தை வாரிச்சுருட்டிக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு கட்சியென்றவகையில் எம்மால் செய்யக்கூடிய அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்வோம். இந்த வழிப்பறிக் கொள்ளைக்கு எதிராக, சர்வதேச புவி அரசியலில் நாட்டை பாதுகாப்பு அற்றதாக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிக்கு எதிராக அணிதிரளுமாறு நாங்கள் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.