விக்டர் ஐவன்…
போதுமான அளவு கவனம் செலுத்தப்படாவிட்டாலும் இலங்கையில் 1948 இல் சுதந்திரத்துடன் ஆரம்பித்த யுகம் 2020 உடன் முடிவடைந்ததாகவே நான் கருதுகிறேன். நீண்ட கால காலனித்துவ ஆட்சியின் பின்னரான சுதந்திரத்தின் பின்னர் பிரித்தானியாவிடமிருந்து எங்களுக்கு வாரிசாகக் கிடைத்த அரசும் அதனுடன் தொடர்பான சமூக அரசியல் முறைமைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்து காலாவதியாகிப் போயுள்ளன என இதனைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லலாம்.
எமது எல்லைகள்
எமக்குச் சுதந்திரம் தந்து விட்டுச் செல்லும் போது இலங்கைக்கு மரபுரிமையாகக் கிடைத்த முறைமைகளில் குறைபாடுகள் இருந்திருக்கலாம். இருந்தாலும் அதற்கு முன்னர் எம்மிடமிருந்த மன்னராட்சி முறையை விட தாராளமயமானதாக கட்டியெழுப்பப்பட்டு மிகவும் நவீனமயமானதும் சிறந்ததுமான முறையாக அது காணப்பட்டது. எங்களை விட வித்தியாசமாக இந்தியா இங்கிலாந்திடமிருந்து தனக்குக் கிடைத்த முறைமைகளை சுதந்திரத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு சீரமைத்துக் கொண்டது. அதைவிடவும் அந்தப் பொறிமுறைகளை ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் அளவுக்கு அதனை மாற்றியமைத்தது.
இலங்கை தனக்குக் கிடைத்த முறைமைகளை சுதந்திரம் பெற்று 24 வருடங்களின் பின்னரே மறுசீரமைத்தது. அந்த மறுசீரமைப்புக்களும் கூட இந்தியாவைப் போல ஜனநாயக இயல்புகளைப் பலப்படுத்துவதாக அல்லாமல் அவற்றைப் பலவீனப்படுத்துவதாகவே அமைந்தன. லிபரல் சிற்பிகளினால் செதுக்கப்பட்ட சிற்பமொன்று மாக்ஸ்வாதத்தினாலோ அல்லது தர்மபாலவாதத்தினாலோ அல்லது எந்தக் கோட்பாடுகளுமில்லாத சிற்பிகளினாலோ புனரமைக்கப்படும் போது அந்தச் சிற்பத்துக்கு ஏற்படும் சேதம் கொஞ்சநஞ்சமல்ல.
உண்மையிலேயே சுதந்திரம் கிடைக்கும் போது வெற்றிகரமான சுய ஆட்சியை நடத்திச் செல்வதற்கான ஜனநாயகப் பார்வையோ நெறிமுறைகளோ எங்களுக்கு இருக்கவில்லை. அது தொடர்பான பார்வையும் நெறிகளும் இந்தியாவுக்கு இருந்தது. சுதந்திரப் போராட்டம் இந்தியாவுக்கு அவசியமான முதிர்ச்சியடைந்த தலைவர்களை உருவாக்கும் பல்கலைக்கழகமாகத் தொழிற்பட்டது. எமது சுதந்திரம் போராட்டத்தின் விளைவாக வந்ததன்றி அன்பளிப்பாகவே வழங்கப்பட்டது. இதனால் முதிர்ச்சியடைந்த தலைவர்களை நாங்கள் உருவாக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை.
நீதித்துறை
மொத்த முறைமையும் அவற்றுக்கு அடிப்படையான அரசியல் யாப்பையும் பாதுகாக்கும் பொறுப்பை உயர்நீதிமன்றத்துக்கு வழங்கும் வகையிலேயே இந்தியா தனது அரசு மற்றும் சமூக அரசியல் முறைமைகளைக் கட்டியெழுப்பியிருந்தது. இந்திய நீதித்துறை அந்தப் பொறுப்பை அச்சொட்டாக நிறைவேற்றியது. குறுகிய இலாபங்களுக்காக அரசியல் முறையை மாற்றியமைப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு இடமளிக்காத வகையில் இறுக்கமான கொள்கையை அது கொண்டிருந்தது.
சோல்பரி யாப்பிலும் அரசியல் முறைமையையும் அரசியல்யாப்பையும் பாதுகாக்கும் பொறுப்பு உயர்நீதிமன்றத்துக்கே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னர் நீதிமன்றச் சேவையில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷாரும் பறங்கியர்களும் சேவையிலிருந்து நீங்கியதால் எஞ்சியிருந்த உள்நாட்டு நீதித்துறை அதிகாரிகளின் சித்தாந்தரீதியான அறிவியல், முன்னேற்றகரமானதாக இருக்கவில்லை. உயர்நீதிமன்றம் 1948 இல் பிரதமர் டிஎஸ் சேனாநாயக்கவுக்கும் 1956 ல் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கும் அரசியலமைப்பை மீறுவதற்கு இடமளித்தது. பின்னர் 1972 இல் நீதிமன்றத்துக்கிருந்த விசாரணை அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டது. அதன் பின்னர் 1978 இல் நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரம் மிகவும் குறுகியதொரு சட்டகத்தில் அடக்கப்பட்டது.
அரசையும் அதனுடைய சமூக அரசியல் முறைமைகளையும் விகாரமடையச் செய்வதில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. இலங்கையின் நீதித்துறை அதனைத் தடுப்பதற்காக பெரும் பலத்துடன் பணியாற்றுவதற்குப் பதிலாக அவற்றுக்குத் துணை போகின்ற வேலையையே அதிகளவில் செய்திருக்கின்றது.
பொருளாதாரப் பாதிப்பு
இந்த மோதல்கள் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்தது. கிளர்ச்சிகளும் யுத்தங்களும் காரணமாக பொருளாதாரத்துக்கும் சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் விளைந்தன. இவற்றுக்கு மேலதிகமாக அடிக்கடி ஏற்பட்ட மோதல்களும் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கச் செய்தன. அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உச்ச அளவில் வீழ்ச்சியடையச் செய்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட இவ்வாறான மோதல்களினால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு முன்னூறு நானூறு பில்லியன் டொலர் அளவு பாரியதாக இருக்க முடியும்.
வர்க்கம், குலம், மதம்
வர்க்க, குல, மத அடிப்படையிலான பேதங்கள் பாரியளவில் இரத்தம் சிந்தக் கூடிய வன்முறைகளாக மாறியமை, அரசினதும் அதன் சமூக அரசியல் முறைமைகளினதும் பாரிய வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களாகக் கருத முடியும். நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இதற்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றன. ஒவ்வொரு இனக் குழுமத்துக்கும் இடையில் வைராக்கியத்தையும் குரோதத்தையும் நம்பிக்கையீனத்தையும் வளர்க்கும் வகையிலேயே நாட்டின் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
இவற்றின் காரணமாக ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் பாரிய அளவிலானவை. இலட்சக் கணக்கானவர்கள் மரணித்து விட்டார்கள். மரணிக்காமல் துன்பம் அனுபவித்து வருகின்ற மக்களின் எண்ணிக்கை அரை மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம். இந்த வன்முறைக் கிளர்ச்சிகள் நடந்த காலப்பகுதியில் கிளர்ச்சியாளர்களும் கிளர்ச்சியை அடக்கிய இராணுவத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு சமூகத்தில் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் ஏராளம். அதிகமானோர் உடலளவில் மரணித்துப் போயிருக்க எஞ்சியிருந்தவர்கள் நடைப்பிணமாக மாறினார்கள்.
1978 இலிருந்து பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது அரச நிர்வாகத்தின் நிரந்தர அடையாளமாகிப் போனமை அரசினதும் அதனுடைய சமூக அரசியல் முறைமையினதும் சரிவிலும் வீழ்ச்சியிலும் தாக்கம் செலுத்திய மற்றுமொரு முக்கியமான காரணமாகக் குறிப்பிட முடியும். ஜனாதிபதி முறையொன்றை உருவாக்கியதன் பின்னர் ஜனாதிபதியே பொதுச் சொத்துக்களின் பொறுப்பாளராகச் செயற்பட்டார். பொதுச் சொத்துக்களை விற்றல், குத்தகைக்குக் கொடுத்தல் மற்றும் சுவீகரிக்கும் அதிகாரங்களெல்லாம் ஜனாதிபதியிடமே இருந்தது. அந்த அதிகாரம் பாவிக்கப்படும் விதத்தை தொடராகக் கண்காணிக்கின்ற, அவை துஷ்பிரயோகம் செய்யப்படாமல் பாதுகாக்கின்ற பலமான ஒழுங்கொன்று காணப்படவில்லை. அத்தோடு 1978 இன் பின்னர் அதிகாரத்துக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமது கவசத்தைப் பயன்படுத்தி முறைகேடாக செல்வம் திரட்டியதோடு, அதற்கு மேலதிகமாக தமக்கு நெருங்கிய சகாக்களுக்கும் பொதுச் சொத்துக்களில் இருந்து முறையற்ற விதத்தில் செல்வம் திரட்டவும் இடமளித்தனர்.
திரவியங்களின் கொள்ளை
இதற்கும் அப்பால் ஜனாதிபதிகள் தமது மந்திரிகளைக் குஷிப்படுத்துவதற்காக சட்டத்துக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக வரம்புகளுக்கும் மாற்றமாக அரசுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் உரிமையை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தனர். இதனூடாகவும் அரசாங்கத்துக்கு தவிர்க்கவியலாத பாரிய நட்டம் ஏற்பட்டது. 1978 இன் பின்னர் இடைவிடாது தொடர்ந்த இந்த மோசடி முறைமை, அரசையும் அரசின் மொத்த நிறுவன முறைகளையும் மோசடியால் அழுகச் செய்வதற்குக் காரணமாகியது. இவ்வாறு தொடர்ந்த திரவியங்களின் கொள்ளையை நியாயப்படுத்தும் வகையில் இதனால் முறைகேடான முறையில் பயன்பெற்றுக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை காலத்துக்குக் காலம் அதிகரிக்கப்பட்டது. இறுதியில் அது நாட்டுக்குச் சுமக்க முடியாத சுமையாக மாறிவிட்டது.
இந்த மோசமான முறை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துக் கட்சிகளும் தெரிந்துகொண்டே அவற்றின் அங்கீகாரத்துடனேயே நடத்திய திருட்டு முறையாகும். ஆய்ந்தோய்ந்து பார்க்கும் பொழுது காலத்துக்குக் காலம் தேர்தல் நடைபெற்றிருப்பதெல்லாம் நாட்டை ஆட்சி செய்வதற்கு அப்பால் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கான குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காகவே. இந்த மோசமான கொள்ளைக்கார முறைமை, அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருமான வழிகளை உச்ச அளவில் இழக்கச் செய்தது. நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை சிக்கலாக்கியது. நாட்டின் வெளிநாட்டுக் கடன்களை உச்ச அளவில் அதிகரிக்கச் செய்தது. இறுதியில் நாட்டை வங்குரோத்துத்தனத்தின் விளிம்புக்கே இட்டுச் சென்றது.
திறனாய்வை இழந்து விடல்.
நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற அழிவுகள், சமூகத்தின் ஆதரவற்ற தன்மையை அதிகரித்து, திறனாய்வையும் பலவீனப்படுத்துவதற்கான காரணங்களாக அமைந்தன. நாட்டு மக்களை ஒரு மொழிக்குள் குறுக்குகின்ற கொள்கையும் திறனாய்வு குறைவதற்கான மற்றுமொரு காரணியாக அமைந்தது. கல்வியை மனப்பாடம் செய்யும் ஒன்றாக மாற்றியதனாலும் கல்வியால் நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய முக்கியத்துவம் முழுமையாகக் கைவிடப்பட்டமையினாலும் சமூகத்தின் திறனாய்வில் பின்னடைவையும் பாதிப்பையும் வேகமாக்கியது. இலங்கை திறனாய்வு அறிவை பெருமளவு இழந்த படுமுட்டாள்தனமான நாடாக மாறியதும் அரசிலும் அதன் சமூக அரசியல் முறைகளிலும் ஏற்பட்ட பாதிப்புக்களையும் பின்னடைவுகளையும் உக்கிரமடையச் செய்வதற்கு காரணமாயமைந்தது எனலாம்.
சமூகத்தில் உருவாகியிருந்த இந்தப் படுமுட்டாள்தனமான நிலைமை, அரச தலைவர்களில் மட்டுமன்றி அதிகாரிகளிலும் தாக்கம் செலுத்தியது. செல்வம் திரட்டுவதில் காட்டிய பேராசையைத் தவிர கூர்ந்து முன்னோக்குவதற்கான இயலுமையை அவர்கள் அனைவரும் இழந்திருந்தார்கள். 2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போது இலங்கையின் அரசும் அதன் சமூக அரசியல் முறைமைகளும் உச்ச அளவில் பின்னடைந்து அழுகிப் போயிருந்தது. அரசையும் அதன் சமூக அரசியல் முறைமைகளையும் புனரமைப்பதற்கு வழிவகுக்கும் மூலோபாய மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வது சிறந்ததொரு முன்னோக்கிய பயணத்துக்கான முன்நிபந்தனையாக முன்வைக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த உண்மையைப் புரிந்து கொள்வதற்கான ஞானம் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. இதன் விளைவாக பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தையும் விட நெருக்கடி நிலை உக்கிரமடைந்தது. அதனுடைய விளைவுகளில் ஒன்றாகவே ராஜபக்ஷ ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
என்னநடக்கவேண்டும் ?
அதனுடைய விளைவாக உருவாகிய நல்லாட்சி அரசாங்கம் நோயாளியை உண்மையான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தாமல் போலியாக அறுவைச் சிகிச்சை செய்தது. அதனுடைய விளைவு பாரிய அழிவாக அமைந்தது. இதன் பின்னர் கோதாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றி நல்லாட்சியின் சந்தர்ப்பவாதத்தின் தர்க்கரீதியான விளைவு என்றே கருத வேண்டியிருக்கிறது.
கோதாபய ஆட்சிக்கு வந்தது, நெருக்கடியை ஆராய்ந்து அதனைத் தீர்க்க முடியுமான மறுசீரமைப்புப் பொதியொன்றுடன் அல்ல. எதேச்சாதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என்ற விசுவாசத்திலேயே அவர் ஆட்சிக்கு வந்தார். இந்த வகையில் நாட்டின் பிரச்சினைகளை வெற்றி கொள்வதற்கு இருந்த சிறிய அவகாசமும் இல்லாமல் செய்யப்பட்டு ஒரு யுகமொன்றே முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றது.
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுகாலவரையான அரசினதும் அதனுடைய சமூக அரசியல் முறைமைகளினதும் இருப்பு முழுமையாக இல்லாதொழிந்தது என்பதே அதன் அர்த்தமாகும்.
நாட்டின் எதிர்காலம் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது. நாடு கையாலாகாத்தனத்தின் உச்சத்துக்குச் சென்றுள்ளது. நாடு வங்குரோத்தடையும் என்பதோடு அராஜகத்தையும் நோக்கிச் செல்லும். தம்மால் நடந்த தவறுகளுக்கு சமூகத்துக்கு பாரிய நஷ்டஈடு கொடுக்க நேரிடும். முன்னாள் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி பழைய அரசியல் கட்சிகளினதும் இருப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்து அவை மக்களுக்கு நகைச்சுவை வழங்கும் நபர்களாகவும் நிறுவனங்களாகவும் மாறும். பழைய யுகத்தின் முறைமைகளும் மக்களால் கட்டியெழுப்பப்பட்டவைகள் அல்ல. புதிய யுகத்தை நடத்திச் செல்வதற்கான முறைமை மக்களாலேயே கட்டியெழுப்பப்பட வேண்டும்.#victor_ivan #விக்டர்_ஐவன் #Sri_Lanka
நன்றி
-Meelparvai Media Centre + Fauzer Mahroof – FB