Home இந்தியா நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

by admin

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளை 300 மாடுபிடி வீரர்களுக்கு மேற்படாமல் கலந்து கொண்டு நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், சிலஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மெரினா போராட்டத்தின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசின் வழிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிகழ்வுகளுக்கும் அனுமதி மறுக்கப்படுவதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு இன்றையதினம் அனுமதி வழங்கி யுள்ள தமிழக அரசு , ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மேற்படாமல் கலந்து கொண்டு நடத்த வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மேற்படாமல் கலந்து கொண்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மேற்படாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. #நிபந்தனைகளுடன் #ஜல்லிக்கட்டு #அனுமதி #மஞ்சுவிரட்டு #மெரினா_போராட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More