Home இலக்கியம் இரங்கலை எழுதும் கலை அ ராமசாமி.

இரங்கலை எழுதும் கலை அ ராமசாமி.

by admin

இரங்கலை எழுதும் கலை – அ ராமசாமி எழுத்துகள்…

திருவண்ணாமலையின் ஆன்மீக அடையாளத்திற்கு மாற்றாக மக்கள் பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கிய எஸ். கருணாவின் மரணம் தமிழ்கூறும் நல்லுலகைக் குலுக்கிய மரணங்களுள் ஒன்றாகிவிட்டது. கருப்பு கருணா தீவிரமாகத் தனது 22-12-2020 நண்பகல் தொடங்கி சமூக ஊடகமான முகநூலில் அவரது படங்களும் அவருக்கு எழுதிய இரங்கல் குறிப்புகளும் வந்துகொண்டே இருந்தன. அவரது இயக்கத்தோழர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் திருவண்ணாமலை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அடுத்த நாள் காலையிலும் அஞ்சலிக்குறிப்புகளும் கட்டுரைகளும் இரங்கல் கவிதைகளும் முகநூல் பக்கங்களை நிரப்பிக் கொண்டேயிருந்தன. அவற்றுள் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதிக் கொண்டே இருக்கும் இருவரின் கவிதைகளும் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டின. 

பகுதி -1 
எல்லா மரணங்களும் ஒரே மாதிரியான மரணங்கள் அல்ல. வாழுங்காலத்தில் அவரது செயல்பாடுகளின் நீட்சியை மரணத்தின்போது கிடைக்கும் துயரப்பகிர்வுகளிலும் கொண்டாட்ட மனநிலையிலும் பார்க்க முடியும். தமிழ் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் அவரது இன்மையைத் துயரத்தின் வலியாகவும் கொண்டாடி அனுப்பி வைக்க வேண்டிய நிகழ்வாகவும் மாற்றிக் காட்டியது அதை உறுதி செய்கிறது. 


எல்லா மரணங்களும் பொதுத்தளத்தில்- எல்லோரிடத்திலும் ஒரேமாதிரியான உணர்வுகளை வெளிப்படச் செய்வதில்லை. ஒருவரின் பொதுத்தள இருப்பு எப்படிப்பட்ட து என்பதைப் பொதுத்தளத்தை நுட்பமாக கவனித்துப் பனுவலாக்கும் எழுத்தாளர்கள் பதிவுசெய்து வைப்பார்கள். கருணாவின் இருப்பு எப்படிப்பட்ட து; அவரது இன்மை என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொதுத்தளத்தைத் தனது அகத்திற்குள் உள்வாங்கிக் கவிதையாக்கும் இரு தமிழ்க்கவிகள் தங்களின் கவிதைகளின் பதிவுசெய்து வைத்து விட்டார்கள். கருணாவின் உடல் மருத்துவமனைக்கு அளிக்கப்படுவதற்கு முன்பு அஞ்சலிக்காக இருந்த அடுத்த நாள் காலையில் முதலில் வாசித்த கவிதை, கவி மனுஷ்யபுத்திரனின் கவிதை; தலைப்பு: ஒரு பெரிய பிரச்சினை. அடுத்து கவி நேசமித்திரனின் கவிதை. தலைப்பு: துப்பாக்கிகள் தயாரிப்பவன் இவ்விரண்டு கவிதைகளையும் அடுத்தடுத்து வாசித்துக் கொள்ளலாம்: 

ஒரு பெரிய பிரச்சினை 

நாங்க ஒரு ஃபுட்பால் டீம் சார் 
எங்க ஆள் ஒருத்தன் 
நேற்று தீடீர்னு செத்துட்டான் 
நாளைக்கு ஃபைனல் மேட்ச் 
நாங்கதான் ஜெயிக்கணும் 
ஒரு கை குறையுது 
செத்தவன் முன் வரிசை 
ஆட்டக்காரன் 
ஒரு உதிரி ஆட்டக்காரனை 
அவனோட இடத்தில் 
கொண்டுவர முடியாது 
ஒரு ஆள் கம்மியா 
விளையாடுவதில் 
பெரிய பிரச்சினைகள் இல்லை 
தில்லா விளையாடுவோம் 
ஒரே சங்கடம் என்னவென்றால் 
மைதானத்தில் 
எந்தப்பக்கம் ஓடினாலும் 
செத்தவன் கூடவே ஓடிவந்துகொண்டிருக்கிறான் 
அவன் நிழலாக இருப்பதால் 
அவனால் பந்தை 
உதைக்க முடியவில்லை 
அதை முத்தமிடமட்டுமே 
அவனால் முடிகிறது 
இது எங்களை 
அமைதியிழக்க வைக்கிறது 
எங்கள் கவனம் சிதறுகிறது 
ஒவ்வொரு ஆட்டத்திலும் 
யாரோ முக்கியமான ஒருத்தன் இல்லாமல் 
ஒரு கை குறைவாக 
ஓடிக்கொண்டே இருக்கிறோம் 
ரொம்ப நாள் 
இப்படியே ஆடமுடியாது சார் 
முன் வரிசை ஆட்டக்காரர்கள் 
சாகக்கூடாது என தடை விதியுங்கள் 
23.12.2020 
காலை 8.06 
மனுஷ்ய புத்திரன் 
(கருப்பு கருணாவுக்கு) 

துப்பாக்கிகள் தயாரிப்பவன் 

இலக்குகள் வெகுதொலைவிலிருக்கும் 
ஒரு போர்க்களத்திற்கு 
துப்பாக்கிகள் தயாரித்தபடி 
இருந்தவன் அவன் 
நிலவிருந்த இடத்தில் 
ஒரு கதிர்அரிவாளை 
பொருத்த இரவுகளை வடிவமைத்தவன் 
ஒரு சமத்துவத்திற்கான 
கையேடு 
அதிலிருந்து பெற்ற கந்தகச் சொற்களால் 
ஒலித்துக் கொண்டே இருந்த 
ஈரம் குன்றாத குரல்வளை 
சுவரெழுத்துக்குரிய தூரிகைகள் 
கொஞ்சம் படச்சுருள்கள் 
ஒரு அழுக்கேறிய பறை 
இவை கொண்டுதான் அவன் 
துப்பாக்கிகள் தயாரித்தபடி 
இருந்தான் 

பொன்னுலகென்பது 
அதிகாரக் கிருமி தின்றபடி 
இருக்கும் உரிமைகளை 
இழக்காதிருத்தல் 
அதற்கு ஒரு அணையாச் சுடரை 
கைமாற்றியபடி காத்தல் 
இதற்குத் தன் வாழ்நாளெல்லாம் 
செரிக்க கொடுத்தல் 
ஒரு நம்பிக்கையின் பற்சக்கரம் 
தொடர்ந்து உருள தன் உதிரத்தை 
உயவாக்கி உழைத்தல் 
இப்படித்தான் அவன் 
ஒரு ஆயுதச் சாலையை 
உருவாக்கினான் 

இன்று 
அவனது பறை சுவற்றில் 
தொங்குகிறது 
அவனது உடல் கொடி போர்த்தப்பட்டிருக்கிறது 
அவனது துப்பாக்கிகள் 
நிரம்பி இருக்கின்றன 
இதோ 
அவனது பிள்ளைகள் அதே 
ஒலிப்பெருக்கியின் முன் நிற்கிறார்கள் 
இதுவரை சொற்களால் 
இருதயங்களை திறந்து கொண்டிருந்த 
உடல் இப்போது 
தன்னைத் திறந்து கொள்ள 
அனுமதித்துக் கிடத்தப்பட்டிருக்கிறது 
அது ஒரு துப்பாக்கியைப் போலவே இருக்கிறது 

கவி. நேசமித்திரன் கருணாவின் இயக்கம் சார்ந்த அர்ப்பணிப்பு வாழ்க்கையை அடுக்கிக் காட்டி, பொன்னுலகக் கற்பனையைக் காதலித்த அந்த மனிதன் தொடர்ச்சியாக இன்னும் பலபேருக்கு அந்தக் கற்பனையைக் கடத்திவிட்டுச் சென்றிருக்கிறார்; அவர் செய்த ஆயுதங்களைத் தயாரிக்க- பண்பாட்டுச் செயல்பாடுகளைத் தொடர இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் முன்வைக்கிறார். அதன் தொடர்ச்சியில் மரணத்திற்குப் பின்னும் அவரது உடல் அந்த அர்ப்பணிப்பை நீட்டித்துக்கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கருணாவின் வாழ்க்கையாக மாறிய இயக்க வாழ்க்கையைச் சாகசங்களும் இலக்குகளும் கொண்ட விளையாட்டாக உருவகித்து முன்வைக்கும் கவி மனுஷ்யபுத்திரன், அவரது இன்மைக்குப் பின்னும் நிழலாகத் தொடரப்போகிறது என எழுதிக் காட்டுகிறது. இருவரது கவிதைகளுமே பொதுத்தள ஆளுமையின் மரணத்தை – இன்மையைக் கவிதையாக்கும் கலைக்கு நவீன உதாரணங்களாக நிற்கின்றன. இந்த உதாரணங்களுக்கு முன் மாதிரிகள் தமிழில் ஒரு மரபு இருக்கிறது அதனையும் இங்கே சுட்டிக்காட்டலாம் .


பகுதி -2 
உலக இலக்கியத்தின் பெரும்தொகையான பனுவல்கள் துன்பியல் உணர்வுகளையே விதம்விதமாகப் பேசுகின்றன. துன்பியலில் பிரிவுகளைப் பேசுவதற்கு இலக்கிய வடிவங்கள் மூன்றும் – கவிதை, கதை, நாடகம் என்ற மூன்றும் ஏற்றன என்றாலும் இருந்த ஒன்று இல்லாமல் போகும்போது ஏற்படும் துயரத்தைச் சொல்லக் கவிதையைப் போல மற்ற இரண்டும் ஏற்றன அல்ல. எல்லா உயிர்களிடத்திலும் நானே இருக்கிறேன் என்ற கடவுள் கோட்பாட்டை நம்பும் மனிதர்கள் தங்களோடு உறவுடைய யாதொன்றின் இழப்பையும் இன்மையையும் மிகுந்த வலியோடும் துயரோடுமே எதிர்கொள்கின்றனர். ஒருநாளின் பெரும் நேரத்தையும் செல்ல நாய்க்குட்டியோடு கழித்த இளம்பெண் ஒருத்தி மூன்று நாள் துக்கம் அனுபவித்து உண்ணாநிலையில் வாடிப்போனதைப் பார்த்திருக்கிறேன். இதற்கு இணையாகவே யாதுமூரே யாவருங்கேளிர் என்ற மனிதநேயச் சிந்தனையைக் கைக்கொண்டவர்கள் மனிதர்களின் மரணம் ஒவ்வொன்றையும் எண்ணித் துயருறுகின்றனர். 


உலக எழுத்தின் பொதுப்போக்கிற்குத் தமிழ்ப் பனுவல் மரபும் விலக்கானதில்லை. தமிழ்ச் செவ்வியல் கவிதைகளுக்குள் பாலைக்கவிதைகளே பரப்பிலும் அதிகம். பிரிவும் பிரிவின் நிமித்தங்களும் விதம்விதமாய் ஒருவரின் எழுத்துகளில் விரிக்கப்படுகின்றன என்றால் அந்த நபரின் வாழ்க்கையில் உண்மையான நிகழ்வுகள் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த உண்மை நிகழ்வுகள் நேரடி வாழ்வு தொடர்புடையதாகவும் இருக்கலாம். பொதுத்தள நிகழ்வுகளாகவும் இருக்கலாம். 
இலக்கிய உருவாக்கம் என்பது மனிதர்களின் ஆதாரப்பிரச்சினையின் வெளிப்பாடு என்பதில் வெவ்வேறு கருத்தியல் நிலைபாட்டாளர்களும் ஒன்றுபடுகின்றனர். அதனைக் கண்டறிவதற்கு இலக்கியப்பிரதி மட்டுமே போதுமானவையல்ல; அவை உருவாகக் காரணமான கருத்தியலைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற நிலைபாடே திறனாய்வு அணுகுமுறைகளாக முன்மொழியப்பட்டுள்ளன. 


மரணத்தைக் கண்டு பயப்படுதல் மனிதர்களின் ஆதாரப் பிரச்சினைகளில் முதன்மையானது நிரந்தரமானது என்பது ஒருவகைக் கருத்தியல். இக்கருத்தியலின் தோற்றுவாய்களாகவும் காரணிகளாகவும் இருப்பன சமயங்களும், அவற்றின் பரப்புரைகளும், அவை முன்மொழியும் தீர்வுகளும் ஆகும். இமானுவேல் காண்ட் என்ற நவீன அறிஞர் இதனை விரிவாகப் பேசியுள்ளார். மனித அனுபவங்களுக்குப் பின் இருக்கும் காரணிகள் பற்றிப் பேசும்போது மரணபயம், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைத் தேடுதல் என்பதே மனிதனை இயக்குகிறது என விவரிப்பார். இதன் விரிவாக மன்றாட்டு, குற்றத்தை முன்வைத்துவிட்டுத் தண்டனையை ஏற்கத்தயாராகும் கழிவிரக்கம் போன்றன தன்னிலைக்கவிதைகளின் வடிவங்களாகின்றன. ஆனால் மரணத்தை எதிர்கொள்வதை இயல்பான ஒன்றாக ஆக்கிக் கொண்டு நடப்பு வாழ்க்கையை அச்சமின்றி நடத்தியவர்களின் மரணத்தின்போது எழுதப்படும் இரங்கல் கவிதைகள் அகத்திணைப் பிரிவுக்கவிதைகள் போலில்லாமல் புறத்திணையியலில் கையறுநிலைத்துறையில் எழுதப்பட்டுள்ளன. 


அகத்தில் காதல் பிரிவுகள் பேசப்பட்ட நிலையில் புறத்தில் பெரும்பாலும் கையறுநிலைத் துறைப்பாடல்கள், பொதுவியல் திணையில் உயிரிழப்புகளையும் நாடிழப்புகளையும் நில இழப்புகளையும் நட்பிழப்புகளையும் எழுதிக்காட்டியுள்ளன. தமிழில் எழுதப்பெற்ற இரங்கல் பாடல்களில் உச்சமான இரண்டு கவிதைகளை உலகக் கவிதை வரிசைக்குள் சேர்க்கவேண்டுமென்றால் பாரிமகளிரின் கவிதையையும் ஔவையாரின் இந்தக் கவிதையையுமே பரிந்துரைக்கலாம். அளவில் சிறியதான பாரி மகளிரின் அந்த ஐந்து வரிகள் எந்த மொழியிலும் துயரத்தைக் கொண்டுவந்து சேர்க்கத் தக்க கவிதை. 

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார் இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில், வென்று எறி முரசின் வேந்தர் எம்குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (புறம்:112 )
இதற்கிணையாகவே அதியமான் நெடுமானஞ்சியை ஔவை பாடிய பாடலையும் சொல்ல முடியும். 

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!பெரிய கட் பெறினே,யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே! நரந்தம் நாறும் தன் கையால்,புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னேஅருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,இரப்போர் புன்கண் பாவை சோர,அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்சென்றுவீழ்ந் தன்று, அவன்அருநிறத்து இயங்கிய வேலே!ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்றுஈயாது வீயும் உயிர்தவப் பலவே!( புறம்: 235. )


இப்பாடல்களுக்கிணையான பாடல்களாகப் பாரியின் மீது அவனது நண்பர் கபிலர் பாடிய புறநானூற்றுப்பாடல்களையும், பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் மீது பாடிய பாடல்களையும் பொத்தியாரின் பாடல்களையும் பார்க்கலாம். அவர்களின் பாடல்கள் வழியேதான் நாம் அக்காலகட்டத்து மன்னர்களின் வரலாற்றையே அறிகிறோம். அரிசில் கிழார், ஆலத்தூர் கிழார், ஆடுதுறை மாசாத்தனார், ஆவூர் மூலங்கிழார், இளம்பொன் வணிகனார்,கழாத்தலையார்,கூடலூர் கிழார், கருங்குழல் ஆதனார், கண்ணகனார் நத்தத்தனார், குட்டுவன் கீரனார், குடவாயிற்தீரத்தனார் , குடவாயில் நல்லாதனார் பெருஞ்சித்திரனார், தொடித்தலை விழுத்தண்டினார் மாறோக்கத்து நப்பசலையார், முடமோசியார், முகையலூர் சிறு கருந்தும்பியார் பெருங்கருவூர்ச் சதுக்கத்துப் பூதநாதனார். பேரெயின் முறுவலார்,வடமோதங்கிழார், வெள்ளெருக்கிலையார் எனப்பலரும் பலவிதமான இழப்புகளை இரங்கல் பாடல்களாகத் தந்துள்ளனர். தன்னுடைய இளமைப் பருவம் தொலைந்துபோனது எனப் பாடும் தொடித்தலை விழுத்தண்டினாரின், இந்தக் கவிதையும்கூட ஒருவித இரங்கல் கவிதைதான். 


இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடுஉயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,கரையவர் மருளத், திரையகம் பிதிர,நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,குளித்துமணற் கொண்ட கல்லா இளமைஅளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,இருமிடை மிடைந்த சிலசொல்பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே? . ( புறம்.243. )


செவ்வியல் கவிதைகளை அடுத்து இரங்கலையும் கையறுநிலையையும் பாடியவர்கள் காப்பியக்கவிஞர்களே எனலாம். ஐம்பெருங்காப்பியங்களிலும் சிறுகாப்பியங்களிலும் துயரம் மிக்க நிகழ்வுகளின் போது இரங்கல் உணர்வு வெளிப்படும் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவ்விரங்கல்கள் பாத்திரங்களின் வெளிப்பாடாகவே வந்துள்ளன. குறிப்பாகச் சிலம்பில் தன் கணவனை இழந்த கண்ணகி ஆவேசம் கொண்டவளாயும் இழப்பை ஈடுசெய்ய முடியாதவளாயும் மதுரைத் தெருக்களில் நடந்து வந்து சாபமிட்டதைச் சிலம்பில் வாசித்திருக்கிறோம். அதேபோல் தன் அன்புமகன் வீரத்தில் தனக்கிணையான இந்திரஜித் இறந்தபோது இராவணனின் சோகம் உச்சத்தைத் தொடும் அவலமாக வெளிப்பட்டுள்ளது. 


இருபதாம் நூற்றாண்டுக் கவிகள் தங்கள் தலைவர்களின் இறப்பையொட்டிப் பாடிய அஞ்சலிக்கவிதைகளில் வெளிப்படும் ஓலமும் துயரமும் இரங்கல் பாக்களின் வடிவத்தையும் உணர்வுவெளிப்பாட்டையும் கொண்டுள்ளன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மகாத்மா காந்திக்கு எழுதிய அஞ்சலியும் கண்ணதாசன் நேருவுக்கு எழுதிய அஞ்சலியும் புகழ்பெற்ற அஞ்சலிக் கவிதைகள். நாட்டார் பாடல்களில் இடம்பெறும் ஒப்பாரிகள் மட்டுமே பெருந்தொகுப்பாக உள்ளன. எடுத்துக்காட்டாக இலங்கைப் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் தொகுப்பிலிருக்கும் ஒருபாடல் : ஆலமரபோல அன்னாந்து நிப்பேனுநான் ஒய்யாரமா வந்தேனேஇப்ப நீ பட்ட மரம்போலபட்டு போயிட்டையே.
பொட்டு இல்ல பூவில்லை பூச மஞ்சலும் இல்லநான் கட்டன ராசாவேஎன்ன விட்டுத்தான் போனிங்க.

பட்டு இல்லை தங்கம் இல்லை பரிமார பந்தல் இல்லபடையெடுது வந்த ராசாபாதியியில போரிங்க்கலே
நான் முன்னே போரேன் நீங்க பின்னே வாருங்கோஎன சொல்லிட்டுஇடம்பிடிக்கப் போயிதங்களா.
நான் காக்காவாட்டும் கத்தரனே, உங்க காதுக்கு கேக்கலையாகொண்டுவந்த ராசாவேஉங்களுக்கு காதும் கேக்கலையா.


இசைத்தன்மைக்கு முதன்மைத்துவம் கொடுத்து வெளிப்பட்ட மரபுக் கவிதைகளை அடுத்துவந்த நவீனக்கவிதைகள் இரங்கலைப் பொதுநிலைக்கும் தன் அகத்தை முன்வைக்கவும் பயன்படுத்துகின்றன. குறிப்பாக இலங்கைப் போராட்டப் பின்னணியில் எழுதப்பெற்ற கவிதைகளில் போர் நிகழ்ச்சிகளும் உயிரிழப்புகளும் அடுக்கப்பட்டுத் தனிநபர் துயரம் சமூகத்தின் துயரமாக மாற்றப்பட்டுள்ளன. 
இரங்கல் பா எனத் தலைப்பிட்டுச் சேரன் எழுதிய: 

வசந்தத்தைச் சொன்ன முதற்பறவையை நான் கண்டதில்லை (யார் கண்டார்கள்?)
இலையுதிர்காலத்தைக் கூட்டி வந்தமுதல் இலையையும் கண்டதில்லை(காற்றோடு போயிற்றா?ஆற்றோடு போயிற்றா?)
என்றாலும்சொல்லாமல் வருகிறது இளங்குளிர்பகல் குறுகப்பொழுதுபடும் நேரம் விரைவில் இறங்குகிறது
அலைகள் உறங்க இலைகள் நிறம் மாறபறவைகள் அற்ற வாவிக் கரையில்திடீரென வீசிய ஒரு பெருங்காற்றுமரங்களை அம்மணமாக்குகிறது.
நீருக்கு முகம் திருப்பிஎதிர்ப்புறம் சாய்ந்துதன் நீண்ட விரல்களால்நிலத்தை வருடிக்கொண்டிருக்கும்ஒரு மரத்தைக் கேட்டேன்
நீரிடம் என்ன வெறுப்பு? 
இந்த நன்னீர் முன்பு போல் அல்லஇதன் முகத்தில் எனது நிழலைப் பார்க்கவேஅச்சம் எழுகிறது
ஆழ்ந்த நீலமும் அடர்ந்த பச்சையும்எனமாறிமாறித் துலங்கிய நாட்கள்தொலைந்து விட்டன
பெருங்குளிரில் காற்று உறைந்தாலும்உறைய மறுக்கிறது நீர்அதன் உயிரில் நஞ்சு கலந்து கிடக்கின்றது
பறவைகள் நடந்து செல்ல எனப்பெரிய இலை விரித்துப்படர்ந்து கிடந்த கடல் தாமரைகள்அழிந்து விட்டன
பொன் மீனையும் நட்சத்திரப் பூவையும்நீலக்கால் ஆமையையும்உப்புத் தின்றொழித்துவிட்ட து
இக்கரையிலிருந்து அக்கரை வரையும்நீண்டு நீண்டு வெப்பக் குழாய்கள்அடியில் ஓடுகின்றனநீரின் உடலைக் கிழித்துப்பனிப்பாறைகளைப் பிளந்துஅவை செய்து தருகின்ற பாதையில்இரவு பகலற்றுப் பயணிக்கின்றனபெருங்கப்பல்கள்அவை பதிக்கும் எண்ணெய்த் தடங்களில்வாவியின் உயிர் துடிக்கிறது
எல்லாம் முன்பு போல் அல்ல 
நிச்சயமற்று, அச்சத்துடன்நிலம் நோக்கித் திரும்புகிறேன்அங்கேயும் பனிப்பாறையின் பயங்கரம்என்கிறது மரம்
ஆற்றாமையுடன் தோல்வியுறும்இயற்கைக்கு நான் எழுது இரங்கல் பா:பெருமரம்: ஒரு மரம்; தனி மரம்======================== மீண்டும் கடலுக்கு /24-25

என்ற கவிதையோடு, நுஃமான், வில்வரத்தினம், தீபச்செல்வன், தமிழ்நதி, கருணாகரன் ஆகியோரின் கவிதைகளில் வாசித்திருக்கிறேன். 
தமிழ்நாட்டின் நவீன கவிகளுக்கு இப்படியொரு பெரும் சோக நிகழ்வுகள் இல்லாத நிலையில் தன்னகம் சார்ந்து துயரங்களையே வெளிப்படுத்தினார்கள். ஆத்மநாம், யவனிகா ஸ்ரீராம் கலாப்ரியா, கல்யாண்ஜி , சுகுமாறன், தேவதச்சன், ராஜசுந்தர ராஜன்,ஹெச்.ஜி.ரஜூல், இந்திரன், பிரான்சிஸ் கிருபா,மு.மேத்தா போன்றவர்களில் சிலர் சமூக நடப்பையும் கையறுநிலைக் கவிதைகளாக மாற்றியதுண்டு. 


ஆண்கவிகளின் தன்னிலை நவீனத்துவ நெருக்கடியின் சோகத்தை -இருப்பின் நெருக்கடியாகக் காட்டி எழுதிய சில நூறுகவிதைகள் நாம் தேடித்தொகுக்க முடியும். இதன் தொடர்ச்சியாகப் பெண்களின் கவிகளின் கவிதைகளில் பெண்ணின் இருப்பு எப்படி இருக்கிறது எனத்தேடும்போது ஆண்களை நோக்கிப் புலம்பும் ஓர் அவல வீச்சைத் அவர்கள் திருப்பிவிடுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. 

வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக 
பூமிக்கு புதிய வஸ்திரம் தைத்துக் கொண்டிருப்பதாக 
பூக்களுக்கு சாயமேற்றும் நீராக 
இரத்தத்தில் வழுக்கி விழுவதாக 
தனது பிள்ளைகளின் நாமங்களைப் பாடும் 
உடலற்ற குரலாக 
வார்த்தைகளைப் பாறைகளிலிருந்து எடுப்பவளாக 
சூரியனின் பற்களுக்கு தைலம் கொண்டு செல்வதாக 
வீட்டுக்கு மலையூற்று நீர் தெளிப்பதாக 
வீழும் மரங்களை தாங்கிப் பிடிப்பதாக 
மின்மினியின் வயிற்றில் ஒளியாய் கசங்குவதாக 
விதைகளாகிச் சிதறுவதாக 
சிலையாக 
பசிகளைச் சிலுவையாக வரைபவளாக 
வெளியை கைத்தடியாய் சுருட்டுவதாக 
வெற்றிலைக் கொடியின் குருத்தாக 
மரணத்தை ஒடிப்பதாக 
வாசல்படியில் கண்களாக 
உச்சி வகிடில் முத்தங்களாக 
பட்டாம்பூச்சியின் அமைதியாக 
முத்திரைகளில் நிற்பதாக 
நட்சத்திரங்களை ஒழுங்கு செய்வதாக 
அக்கினிக் காட்டை வலக்கரத்தில் ஏந்தியவளாக 
இடக்கரத்தில் குளிர்காலத்தை தாங்குவதாக 
அம்மா கனவில் வருகிறாள் 

தேன்மொழிதாஸின் சித்திரிப்பை ஒத்த சித்திரிப்புக் காட்சிகளை அனார், கனிமொழி, சுகிர்தராணி, புதிய மாதவி, பரமேஸ்வரி, உமாமகேஸ்வரி, உமாமோகன் எனப் பலரின் கவிதைகளை வாசிக்கும்போது உணர்ந்திருக்கிறேன்.

நன்றி – அ ராமசாமி எழுத்துகள்…

https://ramasamywritings.blogspot.com/2020/12/blog-post_24.html?fbclid=IwAR3t21nLpnbJTc3qZ1DZ2-82qIc8QhCk2DZlYBnhtiGIpSvybANJtfCEups

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More