இலங்கை பிரதான செய்திகள்

வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதி!

வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் கொரோனாத் தொற்று பல கொத்தணிகளாக உருவெடுத்து மிக வேகமாகப் பரவி பாதிப்புக்களை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில், சிறைச்சாலை கோவிட் கொத்தணி மூலம் இதுவரை 3111 கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஐந்து கைதிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் அரசியற் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் 810 கைதிகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஏனைய சிறைச்சாலைகளுடன் ஒப்பிடுகையில் மகசின் சிறைச்சாலையிலேயே தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில், மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இவர்களில், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடங்கலாக, வைத்தியர் சிவரூபன், இந்து மதகுருவான இரகுபதி சர்மா உட்பட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்.போதனா வைத்திய சாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியும் , பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரியுமான வைத்தியர் சி. சிவரூபன் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் எனும் குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு , சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான வழக்கில் நீதிமன்றில் குற்றவாளியாக காணப்பட்டு 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்து மத குருவான சி.ஐ. இரகுபதி குருக்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.


இவர்கள் இருவரும் உள்ளிட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயர் விபரம்

 1. சின்னையா சிவரூபன்
 2. சி.ஐ. இரகுபதி சர்மா
 3. எட்வேட் சாம் சிவலிங்கம்
 4. தங்கவேல் சிவகுமார்
 5. நாகலிங்கம் மதனசேகர்
 6. தேவசகாயம் உதயகுமார்
 7. குலசிங்கம் குலேந்திரன்
 8. றுபட்ஷன் யதுஷன்
 9. சேவியர் ஜோண்ஷன் டட்லி
 10. தாவீது நிமல்ராஜ் பிரான்சிஸ்
 11. விநாயகமூர்த்தி நெஜிலன்
 12. இரத்தினம் கிருஷ்ணராஜ்
 13. சின்னமணி தனேஸ்வரன்
 14. ஞானசேகரம் ராசமதன்
  ஆகியோரே சிறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை குறைக்கும் முகமாக சில பொறிமுறைகளுக்கூடாக அரசாங்கம் 6000 கைதிகளை விடுவித்துள்ளது. ஆன போதிலும். அதில் ஒரு தமிழ் அரசியற்கைதியேனும் உள்வாங்கப்படவில்லை. இதனால், அரசியற் கைதிகளின் பெற்றோர், உறிவினர் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி நோயாளிகளை விடுவிக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.