Home இலங்கை ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறி முறை? நிலாந்தன்…

ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறி முறை? நிலாந்தன்…

by admin

அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு நொதிப்புண்டாகும்.ஆனால் இம்முறை சற்று முன்னதாகவே அது தொடங்கிவிட்டது. அதற்கு காரணங்களில் ஒன்று கடந்த மாதம் அமெரிக்க தமிழ் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் சந்திப்பில் சுமந்திரன் கூறிய “ரோல் ஓவர் பிரேரணை” என்ற சொற்பிரயோகம்தான். அச்சந்திப்பில் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டிக் கருத்துக் கூறும்போது அவர் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார்.அதன்படி ஏற்கனவே உள்ள தீர்மானத்தை கூட்டமைப்பு மாற்றமின்றி கொண்டு வர முயற்சிக்கிறதா? என்ற சந்தேகம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மத்தியில்  தோன்றியது.

அச்சந்தேகத்தை பலப்படுத்துவதுபோல சுமந்திரன் ஒரு கொன்செப்ற் பேப்பரை விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் வழங்கினார். ஐநா கூட்டத்தொடரை தமிழ்த் தரப்பு ஒற்றுமையாக அணுக வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த கொன்செப்ற் பேப்பர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கொன்செப்ற் பேப்பரை கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் நிராகரித்து விட்டார்கள். இது ஜெனிவாவை முன்னோக்கி தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் இருக்கக்கூடிய சவால்களை உணர்த்துகிறது.

அண்மை வாரங்களில் சுமந்திரன் கொழும்பில் இருக்கும் பிரித்தானிய தூதரையும் அமெரிக்கத் தூதுவரையும் சந்திப்பதும் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகைகளில் வரும் செய்திகளும் இந்த பரபரப்புக்கு மேலும் ஒரு காரணம். தமிழ்த் தரப்பில் ஜெனிவாவைக் கையாள்வது சுமந்திரன்தான் என்ற ஒரு மயக்கத்தை இது உருவாக்குகிறது.அது காரணமாக வழமைபோல சுமந்திரன் தனியோட்டம் ஓட முயற்சிக்கிறார் என்ற கருத்து பரவலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்ல சுமந்திரன் ஒரு இரகசிய நிகழ்ச்சி நிரலின் கருவியா என்ற சந்தேகத்தையும் பரவலாக ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் வழமைபோல சுமந்திரனுக்கு எதிராக பரவலான ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இது விடயத்தில் மனித உரிமைப் பேரவையை அதாவது ஜெனிவாவை சரியாக விளங்கிக் கொள்ளும்போது இதில் சுமந்திரன் ஒரு கருவி மட்டுமே என்பது தெரியவரும். அவர் ஓர் அரச தரப்பின் பிரதிநிதி அல்ல. ஒரு அரசற்ற தரப்பின் பிரதிநிதி.அவர் விரும்பி ஒரு  தீர்மானத்தைக்  கொண்டு வர முடியாது. அல்லது தீர்மானத்தில் பெரிய மாற்றங்களைச் செய்யவும் முடியாது. தீர்மானத்துக்கு கால அவகாசத்தை வழங்கவும் முடியாது. ஏனெனில் ஜெனிவா எனப்படுவது அரசுகளின் அரங்கம். அங்கே முடிவுகளை அரசுகள்தான் எடுக்கின்றன. இதில் அந்த முடிவுக்கு எதிராக தமிழ் மக்கள் திரள்வதைத் தடுக்க அல்லது அந்த முடிவுகள் தொடர்பில் தமிழ் மக்களின் கருத்துக்களைத் திரட்டும் விதத்தில் சுமந்திரனை இணை அனுசரணை நாடுகள் ஒரு கருவியாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். ஆனால் தனி ஒரு சுமந்திரனால் தீர்மானத்தில் அல்லது ஐநாவின் நடவடிக்கைகளில் திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

எனவே ஜெனிவாவைக் கையாள்வது என்பதில் சுமந்திரனைக் கையாள்வது என்பது ஒரு சிறிய பகுதி மட்டுமே.அவர் தனியோட்டம் ஓடாமல் தடுத்தால் போதும். அதற்கும் அப்பால் ஜெனிவாவை கையாள்வது என்பது பல்பரிமாணங்களைக் கொண்டது.

ஐநா மனித உரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நீதிமன்றம் அல்ல. வேண்டுமானால் இணக்கசபை என்று சொல்லலாம். அது நாடுகளை தண்டிக்கும் அதிகாரம் அற்றது. குறைந்தபட்சம் நாடுகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் விதத்தில் தடை விதிக்கவும் அதனால் முடியாது. எனவே தமிழ்த் தரப்பு ஜெனிவாவில் தமக்கிருக்கும் வரையறைகளை விளங்கிக் கொள்ளவேண்டும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1  தீர்மானம் எனப்படுவது நிலைமாறுகால நீதிக்குரியது. நிலைமாறுகால நீதி எனப்படுவது உலக சமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய நீதி. நிலைமாறுகால நீதியின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நூரேம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி அண்மைக்கால கம்பூச்சிய விசேஷ தீர்ப்பாயம் வரையிலும் நிலைமாறுகால நீதி எனப்படுவது தோற்றவர்களைத்தான் விசாரித்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களை விசாரிக்கவில்லை.இலங்கைதீவில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றில் போரில்  வென்றவர்கள் அல்லது அவர்களைப் பாதுகாக்கும் ரணிலைப் போன்றவர்கள். எனவே அவர்களை விசாரிக்க இந்த உலகம் தயாரில்லை.எனவே நிலைமாறுகால நீதி எனப்படுவது அனைத்துலக சமூகத்தின் இயலாமையின் விளைவு என்றும் கூறலாம்.

அந்த நிலைமாறுகால நீதியைக்கூட ராஜபக்சக்கள் ஐநா பரிந்துரைக்கும் படிவத்தில் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அவர்கள் ஐநாவின் தீர்மானத்துக்கு வழங்கிய அனுசரணையிலிருந்து விலகப்போவதாகக் கூறிவிட்டார்கள். எனினும் கடந்த ஓராண்டு கால ராஜபக்சவின் ஆட்சியில் அவர்கள் ஐநாவுக்கு துலக்கமான ஒரு சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்கள். அது என்னவெனில் ஐநா பரிந்துரைத்த வடிவத்தில் நல்லிணக்கப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஆனால் ராஜபக்சக்கள் பாணியிலான ஒரு நல்லிணக்க பொறிமுறைக்கு தயார் என்பதே அந்த செய்தி.

ஏனெனில் நிலைமாறுகால நீதியின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களுக்கான அலுவலகம்;இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம்;சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான அலுவலகம் போன்றவற்றை அரசாங்கம் தொடர்ந்தும் பேணுகிறது. அதோடு நிலைமாறுகால நீதியின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் மீள நிகழாமைக்குக் கீழ்  கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதற்குத்தான் அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பி வருகிறது. எனவே பொறுப்புக்கூறலுக்கான ராஜபக்ச பாணியிலான உள்நாட்டுப் பொறிமுறையை இணைஅனுசரணை நாடுகள் எப்படிப்  பார்க்கின்றன என்பது இங்கு முக்கியம்.

சீனசார்பு ராஜபக்சக்கள் முற்றாக தங்கள் பிடிக்குள்ளிருந்து வெளியேறுவதை விடவும் அவர்களை எப்படியாவது தமது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் சிந்தித்தால் மஹிந்தவின் காலத்தில் செய்ததைப் போல அரசாங்கத்துக்கு நோகாத எதிர்த் தீர்மானங்களை நிறைவேற்றலாம். அல்லது இருக்கின்ற தீர்மானங்களை மாற்றலாம் அல்லது கால அவகாசத்தை வழங்கலாம். எதைச் செய்தாலும் அரசாங்கத்தை முற்றாக எதிர் நிலைக்குத் தள்ளினால் அது சீனாவுக்கு வாய்ப்பாக அமையலாம் என்ற முன்னெச்சரிக்கையோடுதான்  இணை அனுசரணை நாடுகள்  சித்திக்கும். இது தான் ஜெனிவா.

எனினும் இந்த முறை அரசாங்கத்துக்கு பாதகமான ஒரு போக்கு இணை அனுசரணை நாடுகளின் மத்தியில் காணப்படுவதாக ஒரு அவதானிப்பு உண்டு. எப்படியென்றால் அமெரிக்காவின் மிலேனியம் சலேன்ச்  நிதி உதவி திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.அண்மையில் அமெரிக்கா அத்திட்டத்திலிருந்து பின்வாங்கி விட்டது.அதுபோலவே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிக்கும் பணிகளை இந்தியாவிடம் தரப்போவதாக முதலில் ராஜபக்சக்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் இன்றுவரையிலும் அது செயலுருப்பெறவில்லை.துறைமுக ஊழியர் தொழிற்சங்கங்கள் அதற்கு எதிர்ப்பு காட்டுவதாக ஒரு சாட்டை அரசாங்கம் கூறி வருகிறது.எனவே அரசாங்கத்தின் மீது ஏதோ ஒரு விதத்தில் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் உண்டு;இந்தியாவுக்கும் உண்டு.இதைச் சாதகமாகக் கையாள்வதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானங்களைக் கொண்டு வரலாம் என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் ஒரு பகுதி நம்புகின்றது.இந்த நம்பிக்கைகளைப் பலப்படுத்துவது போல கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதுவரும் பிரிட்டிஷ் தூதுவரும்   சுமந்திரனுக்குத் தெரிவிக்கும் கருத்துக்கள் காணப்படுகின்றன.

இப்படிப்பட்டதொரு பின்னணியில் ஜெனிவாவுக்கு வெளியே தமிழர்களின் விவகாரத்தை ஐநாவின் ஏனைய பெரிய சபைகளான பொதுச்சபை பாதுகாப்புச் சபை போன்றவற்றுக்கு கொண்டுபோவது என்று சொன்னால் அங்கேயும் பிரச்சினைகள் உண்டு.மனித உரிமைப் பேரவைக்குள் இருக்கும் நாடுகள் வாக்களிப்பதன் மூலம் அதைச் செய்யலாமா என்ற கேள்வி இங்கு முக்கியம்.ஏனெனில் இம்முறை மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்துக்கு பலமான நண்பர்கள் உண்டு. சீனா ரஷ்யா கியூபா போன்ற நாடுகளே அவை.எனவே விவகாரத்தை ஐநாவின் ஏனைய சபைகளுக்குக் கொண்டுபோவது என்று சொன்னால் ஒரு பலமான நாடு தமிழர்களுக்குச் சார்பாக விவகாரத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும். அல்லது உலகப்பொது நிறுவனங்களான அரசு சார்பற்ற நிறுவனங்களும் ஐநாவின் உப நிறுவனங்களாகக் காணப்படும் உலகப் பொது நிறுவனங்களும் உலக பொது நிதி உதவி நிறுவனங்களாகிய உலக வங்கி; அனைத்துலக நாணய நிதியம் போன்ற அமைப்புகளும் இணைந்து விவகாரத்தை பொதுச்சபை அல்லது பாதுகாப்புச் சபைக்கு கொண்டு போகவேண்டும் என்று கேட்க வேண்டும்.

இவ்வாறான வாய்ப்புகளுக்கூடாகத்தான் விவகாரத்தை பொதுச்சபைக்கோ பாதுகாப்புச்சபைக்கோ கொண்டு போகலாம். அங்கேயும் பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரம் மிக்க சீனாவும் ரஷ்யாவும் அரசாங்கத்தின் பக்கம் உண்டு. இது தான் ஐநா யதார்த்தம்.

ஜெனிவாவை  கடந்து சிறப்புத் தீர்ப்பாயங்கள் அல்லது உலக நீதிமன்றங்களை நோக்கி செல்வது என்று சொன்னால் அங்கேயும் அரசுகளின் செல்வாக்கும் அழுத்தமும் அவசியம்.

முதலாவதாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் (International Criminal Court- ICC)செல்வதென்றால் அதற்கு இலங்கைத்தீவு ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ரணில் விக்ரமசிங்க அவ்வாறு கையெழுத்திட மறுத்து விட்டார். அதை ஒரு பெருமைக்குரிய சாதனையாகவும் அவர் கூறுவதுண்டு. எனவே ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திடாத ஒரு நாட்டை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு போவதென்றால் அதற்கு பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அங்கு வீட்டோ அதிகாரம் மிக்க நாடுகளை வெற்றிகரமாக கையாளவேண்டும்.

அடுத்த வாய்ப்பு அனைத்துலக நீதிமன்றத்துக்குப் போவது (International Court of Justice-ICJ)அதைத்தான் பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்காக காம்பியா நாடு செய்தது. அனைத்துலக நீதிமன்றத்துக்கு விவகாரத்தை கொண்டு போவதற்கு  ஒரு நட்பு நாடு வேண்டும்.அதிலும் குறிப்பாக இது விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியமானது.இந்தியாவை மீறி இந்த விடயத்தில் ஒரு வெளி நாடு தலையிடக்கூடிய ராஜீயச் சூழல் உண்டா?  

எனவே ஜெனிவாவைக் கடந்து போவதற்கு தமிழ் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதை இரண்டு தளங்களில் தமிழ் மக்கள் செய்ய வேண்டியிருக்கும். முதலாவது தாயகத்தில் மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையில் ஜெனிவாவைக் கையாள்வதற்குரிய ஒரு பொதுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும். எந்த ஒரு தனி ஆளும் தனியோட்டம் ஓடாதபடிக்கு எல்லாரையும் ஒரு கூட்டுப் பொறிமுறைக்குப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும். இது மிக அவசியம். இதுதான் முக்கியமான அடிப்படையான முன் நிபந்தனையும்.

இதைப் பூர்த்தி செய்தபின் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தமிழகத்தில் உள்ள அமைப்புகளும் பலமாக லொபி செய்ய வேண்டும். தமிழகத்தை அழுத்தப் பிரயோக சக்தியாக பயன்படுத்தி இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் தமிழ் மக்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாமா என்று முதலில் சிந்திக்க வேண்டும். இந்தியாவை மீறி எந்த ஒரு வெளி நாடும் தமிழர்களின் விவகாரத்தில் தலையிடுவதிலிருக்கும் வரையறைகளை கடந்த மூன்று தசாப்த காலங்கள் நிரூபித்திருக்கின்றன. எனவே வெளியில் லோபி செய்வது என்பது முதலில் இந்தியாவிலிருந்தே தொடங்க வேண்டும். அடுத்த கட்டமாக ஏனைய உலக நகரங்களை நோக்கிப் போகவேண்டும். தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது பெருமளவுக்கு ஒரு பொதுக்கருத்தாக உருவாகியிருக்கிறது. உலகப்பொது மனிதஉரிமை நிறுவனங்கள்;குடிமக்கள் சமூகங்கள்;மத அமைப்புக்கள் போன்றவற்றின் மத்தியில் இக்கருத்து படிப்படியாக பரவலாகி வருகிறது.

ஆனால் இந்த மனிதாபிமான அபிப்பிராயத்தை அரசுகளின் தீர்மானமாக மாற்ற வேண்டும்.அதற்கு லொபி செய்ய வேண்டும்.ஈழத் தமிழர்களுக்காக லொபி செய்யக்கூடிய நாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது ஈழத்தமிழர்கள் இனி அதிகம் அரசுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் தங்களுக்கு ஆதரவான அரசுகளை நட்பு சக்திகளாக வென்றெடுக்க வேண்டும். ஆனால் நாட்டில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டோடு காணப்படும் மூன்று கட்சிகளுமே தங்களுக்கிடையில் ஆகக்குறைந்தபட்ச அடிப்படையிலாவது ஐக்கியத்தைக் கட்டி எழுப்ப முடியாத ஒரு துர்ப்பாக்கிய சூழலில் உலக சமூகத்தில் அவ்வாறு நட்பு நாடுகளைச் சம்பாதிப்பார்கள் என்று எப்படி நம்புவது ?

#கூட்டுப்_பொறிமுறை #ஜெனிவாக்_கூட்டத்_தொடர் #விக்னேஸ்வரன் #கஜேந்திரகுமார்

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran December 27, 2020 - 9:02 pm

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பாக சுமந்திரன் ஊடாக சம்பந்தன் சில பரிந்துரைகளை செய்திருக்கின்றார் போல் தோன்றுகிறது. அதன் பிரதிகளை விக்னேஸ்வரனுக்கும் மற்றும் கஜேந்திரகுமாரருக்கும் அனுப்பி உள்ளார். இவர்கள் இருவரும் இந்த பரிந்துரையை நிராகரித்துள்ளார்கள். இதை உணர்ந்து, சம்பந்தனும் விக்னேஸ்வரனும் மற்றும் கஜேந்திரகுமாரும் தங்கள் ஆணவத்தை அடக்கி, சுயநலத்தைக் குறைத்து அடிக்கடி சந்தித்து ஒரு சமரசத்திற்கு வந்து தமிழ் மக்கள் சார்பாக பொதுவான தீர்மானத்தை பரிந்துரைக்க வேண்டும். இது உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க மற்றும் பல வழிகளில் தமிழர்களின் உரிமைகளை எடுக்க உதவும்.

Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More