“த இந்து” நாளேட்டுக்காக ஊடகர் மீரா சிறினிவாசன் என்பவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கண்ட, நேர்காணலின் முதன்மையான சில பக்கங்களை, காலத்தின் தேவை கருதி, குளோபல் தமிழ்ச் செய்திகள் மொழியாக்கம் செய்கிறது.
“கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது பாரிய அநீதிக்கு முகங்கொடுத்ததாகவும், அதனால் மாகாணபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடப்போவது போன்று நீங்கள் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்திருந்தீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வீர்களா?” என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்…….
“2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலின் வேட்பாளார்கள் தெரிவின் போது நாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோம். களுத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் எங்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. கம்பகாவில் ஒரு இடமும் குருணாகலில் இரண்டு இடங்களும் மட்டுமே எமக்கு ஒதுக்கப்பட்டன. நாங்கள் வலுவாக இருக்கும் மாவட்டங்களில் எங்களுக்கு நியாயமான எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கப்படவில்லை. எங்களது 30 வேட்பாளர்களுக்கு இடமொதுக்கும் படி கேட்டிருந்தோம். அப்படி 30 இடங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், குறைந்தது 25 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். எங்களால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது அரசியல் தாக்குதல்களை அவர்கள் (ஆளுங்கட்சி) மேற்கொண்டார்கள். நாங்கள் ஒரு கூட்டணியாக மாகாணசபைத் தேர்தல்களை எதிர்கொள்ளுவதென இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கையில், எங்களுக்கு நியாயமான இடங்களை ஒதுக்கும் படி நாங்கள் வலியுறுத்துகிறோம். அது எங்களுக்குக் கிடைத்தால், அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. நாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லையென்றால், நாங்கள் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ள முடிவுசெய்வோம். நாங்கள் இரண்டு தெரிவுகளுக்கும் தயாராகவே உள்ளோம்”, என முன்னாள் சனாதிபதி மைத்திரிபால கூறினார்.
“மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் போது உங்களிடம் இரண்டு தெரிவுகள் உண்டு எனச் சொல்கிறீர்கள். அரசாங்கத்தில் உள்ள சிலர் மாகாணசபைகளை இல்லாதொழிக்க வேண்டுமென்று சொல்கின்ற அதேநேரத்தில் மாகாணசபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளைப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய அரசியலமைப்பு வெளியாகிய பின்பாக தேர்தல்களை நடத்த வேண்டுமென வேறு சிலர் விரும்புகிறார்கள். இந்த முரண்பாடான நிலைப்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது,……….
“முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாகாண சபைகள் முறைமை உள்ளது. எதிர்பார்க்கப்பட்ட சேவைகளை வழங்குவதில் மாகாண சபைகள் வெற்றிகரமானவையாக இருந்தனவா என நாங்கள் சிரத்தையுடன் மதிப்பீடு செய்யவில்லை. மாகாணசபைகள் முறையில் சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன என நான் நம்புகிறேன். இதிலுள்ள முதன்மையான சிக்கலென்னவெனில், ஆண்டுதோறும் மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்படும் மொத்த ஒதுக்கீட்டில் வெறும் 25% ஆனவை மட்டுமே மாகாணங்களின் உண்மையான வளார்ச்சிக்குப் பயன்படுகின்றன. ஒதுக்கீட்டில் 75% ஆனவை சம்பளங்கள், வாகனச் செலவு, தொலைபேசி மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்காகச் செலவிடப்படுகிறது. மாகாண சபைகளில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளார்கள்.
மத்திய அரசானது மாகாணசபைகளுக்குப் பணத்தினை இறைக்கும் போது, நாட்டின் அபிவிருத்திக்கான முதலீடாகவே அதைச் செய்கிறது. இருந்தபோதும், இவ்வாறான முதலீடுகளுக்கான வருமானம் குறைவாகவே உள்ளது. எனவே, முதலீட்டுக்கான வருமானத்தை அதிகரிப்பதற்காக நாங்கள் மாகாண சபை உறுப்பினர்களினதும் ஊழியர்களினதும் எண்ணிக்கைகளைக் குறைப்பதன் மூலம் தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்திற்குள் வேறுபட்ட கருத்துகள் உள்ளன. சரியான நடவடிக்கையினைத் தீர்மானிப்பது அரசாங்கத்தினைப் பொறுத்ததாகும்.
நாங்கள் ஒரு சிறிய நாடு என்ற உண்மையைக் கருத்திற்கொண்டு, ஒரு அபிவிருத்திக் கண்ணோட்டத்திலிருந்து, மாவட்ட அபிவிருத்தி சபை போன்ற மாவட்ட மட்ட அமைப்பானது மாகாண சபையிலும் பார்க்க சிறப்பாகச் செயற்படும் என நான் நினைக்கிறேன். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி அதிகாரங்களின் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் ஆகியோர் அடங்கிய அபிவிருத்தி சபைகளை மாவட்ட மட்டத்தில் அமைக்கலாம். மாகாணசபைகள் முறைமையானது இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு உகந்தது. ஆனால் நாங்கள் 21 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிறிய நாடு” என்றார்.
“இந்த ஏற்பாடு எப்படி அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும்? நீங்கள் அதிகாரப் பகிர்விற்கு ஆதரவாக இருந்தீர்கள். ஆனால், மாகாண சபைகளை இல்லாதொழிக்கக் கோரும் சிலர் அதிகாரப் பகிர்வினை எதிர்க்கிறார்கள்” எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது, ……….
“மாவட்ட அபிவிருத்தி சபைக்கு நாம் கட்டாயம் அதிகாரமளிக்க வேண்டும். அதுவே தீர்வாக அமையும். வீண் செலவுகளை நாம் குறைக்க வேண்டியிருக்கின்ற அதே நேரத்தில், நாம் உள்ளூர் நிருவாக அமைப்புகளுக்கு அதிகாரமளிக்க வேண்டும். மாவட்ட அபிவிருத்தி சபைகள் மூலமாக அதிகாரத்தைப் பரவலாக்குவது என்பது அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஒரு சமரசத்தை ஏற்படுத்தும்.
மாகாணசபை முறைமையில் கூட முதலமைச்சரின் மாவட்டம் மட்டும் தான் அனைத்து பயன்களையும் பெறுகின்றது. மாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்கள் அவ்வாறு பயனடைவதில்லை. ஒரு நாள் பாராளுமன்றத்திற்கு நுழையலாம் என்ற நம்பிக்கையில் முதலமைச்சர்கள் தமது மாவட்டத்திற்குச் சேவை செய்கிறார்கள். இன்றும் கூட, மாகாணசபைகளின் உண்மையான செயற்பாடுகளில் மாவட்டம் தான் விடயமாக இருக்கிறது.
கொள்கையளவில், அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்தை நான் நம்புகிறேன். போர் நடந்த பகுதிகளில் வறுமையின் பாதிப்பு இன்றும் கூட மிகப் பாரிய அளவில் உள்ளது. மாகாணசபைகளுக்கும் தேசிய அரசாங்கத்திற்குமிடையில் விரிசல் உள்ளது. அது நல்லதல்ல. இது மக்களுக்குச் சேவை செய்ய உதவாது” என முன்னாள் சனாதிபதி மைத்திரிபால கூறினார்.
“அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக நிறுவப்பட்ட மாகாணாசபைகளை இல்லாதொழிக்குமாறு அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு கோருபவர்களுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது, ……….
13 ஆம் திருத்தச்சட்டமென்பது 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் விளைவாகும். மாகாணசபைகள் சட்டமென்பது 13 ஆம் திருத்தச்சட்டத்தின் விளைவாகும். எனவே, மாகாணசபைகளை இல்லாதொழிப்பது அவ்வளவு இலகுவானதல்ல என்பது எனக்குத் தெரியும். 13 ஆம் திருத்தச்சட்டத்திலிருந்து நாம் முற்றிலுமாக விலகினால் இந்தியா எம்மீது சிறிது வருத்தப்படக் கூடும். எங்கள் பிராந்தியத்தில் இந்தியாவுடனான நட்பு இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு மிகவும் முக்கியமானது என்பதுடன் இந்த நட்பானது அனைத்து அரசாங்கங்களினாலும் வலுப்படுத்தப்பட வேண்டியது. மாகாணசபைகளை இல்லாதொழிப்பது என்பது நெருப்புடன் விளையாடுவதற்கு ஒப்பானது.
அதேவேளையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் அபிவிருத்தி செய்தல் என்ற விடயத்தைப் பொறுத்தளவில், மாகாணசபைகள் விரும்பிய முடிவுகளைத் தரவில்லை என்பதை 30 ஆண்டுகால அனுபவம் சொல்கிறது. அதனால் தான் நாம் புரிந்துணர்வுடன் ஒரு சமரசத்திற்கு வருவது முக்கியமானது. நான் ஏலவே குறிப்பிட்டதன் படி, மாகாணசபைகளை உருவாக்கியமை ஒரு முதலீடாகும். நாங்கள் இந்த மாகாணசபைகளை 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றோம். அபிவிருத்தி விடயத்தில் அவை எதிர்பார்க்கப்பட்ட பலன்களைத் தராத போது, மக்களும் அரசாங்கமும் நியாயமான முடிவை எடுக்க வேண்டும்” என்றார்.
“த இந்து” நாளேட்டுக்காக ஊடகர் மீரா சிறினிவாசன் என்பவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கண்ட, நேர்காணலின் முதன்மையான சில பக்கங்களை, காலத்தின் தேவை கருதி, குளோபல் தமிழ்ச் செய்திகள் மொழியாக்கம் செய்கிறது.