இலங்கை பிரதான செய்திகள்

கல்வி செயலணியின் உறுப்பினரிடமிருந்து ஆசிரியருக்கு அச்சுறுத்தல்!

ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதோடு, அவரை வெளியேற்றியதாக ஜனாதிபதி கல்வி பணிக்குழுவில் உறுப்பினராக செயற்படும், கொழும்பில் அமைந்துள்ள பிரபல மகளிர் பாடசாலையின் அதிபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் ஏற்கனவே மாணவர்களை பாடசாலையில் இணைத்துக்கொள்வதில் தவறான நடைமுறையை பின்பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து ஒழுக்காற்று விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றஞ்சாட்டுகின்றது.

கொழும்பு புனித பவுல் பெண்கள் கல்லூரியில் பணியாற்றிய எச்.ஜி வசந்த என்ற ஆசிரியர், கல்விச் செயலாளரின் இடமாற்ற உத்தரவிற்கு அமைய, கொழும்பு விசாகா வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டார்.

கடந்த வருடம் செப்டெம்பர் 2ஆம் திகதியிடப்பட்ட இடமாற்றக் கடிதத்திற்கு, ஆசிரியர் எச்.ஜி வசந்த இந்த வருடம் ஜனவரி 4 ஆம் திகதி விசாகா வித்தியாலயத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் புதன்கிழமை (06) வெளியிட்ட ஊடக அறிக்கையில்தெரிவித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் விசாகா வித்தியாலயத்தின் அதிபர், சந்தமாலி அவிருப்பால, புனித பவுல் கல்லூரியின் அதிபரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரது உதவியாளர்கள் தனது பாடசாலையில் பணியாற்ற முடியாது என அறிவித்து, சேவையில் இருந்து நீக்கும் கடிதத்தை அவர் மேலே வீசியெறிந்துள்ளார்.

மேலும், நான்கு பாடசாலை காவலர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து அதிபரின் அறையிலிருந்து குறித்த ஆசிரியரை வெளியே இழுத்து தள்ளுவதற்கு முயற்சித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

ஒரு ஆசிரியருக்கு எதிராக விசாகா அதிபர் எடுத்த இந்த அவமானகரமான நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக கண்டிப்பதாக, ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் கூறியுள்ளார்.

“மேலும், விசாகா வித்தியாலய அதிபர் ஆசிரியர் இடமாற்ற பணிப்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை கடுமையாக சாடியுள்ளார்”

இது தொடர்பாக, எச்.ஜி வசந்த என்ற ஆசிரியர், ஜனவரி 5, செவ்வாய்க்கிழமை கல்விச் செயலாளரிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளார். அதே நாளில் பம்பலப்பிட்டிய பொலிஸிலும், கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

கல்வி அமைச்சின் பக்கச்சார்பு

விசாகா வித்தியாலயத்தின் அதிபரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், சமரச நடவடிக்கைகளின் போது கல்வி அமைச்சு பக்கச்சார்பாக செயற்படுவதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாகா வித்தியாலயத்தின் அதிபர் மீது கடந்த வருடம் தரம் ஒன்றுக்கு மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பிலான முறைக்கேடு குறித்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் விசாகா கல்லூரியின் முதல் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக 15 முறைகேடு குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை பொது சேவை ஆணைக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஒழுக்காற்று விசாரணை இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள அவர், 2021ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நேர்காணல் குழுவில் பங்கேற்கக் கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்விச் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது”

இதுத் தொடர்பில் கண்காணிக்குமாறு, கோரிக்கை விடுத்து, பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த 2020 ஜூலை 7ஆம் திகதி, கல்விச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் அதிபர் தன்னிச்சையாகவும் நடந்து கொண்டாலும், அவர் ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, இலங்கை கல்வி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை முரண்பாடான விடயமாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.