ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94 ஆவது வயதில் காலமானார். இலங்கை யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை யாழ்ப்பாணத்தில் அப்போது முடித்திருத்தகம் நடத்தி வந்தார்.
ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946-ல் நுழைந்தார் டொமினிக் ஜீவா. அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இருந்த காலம். ப. ஜீவானந்தம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது அவருடன் இணைந்து கொண்டார் . அதுவரை இருந்த டொமினிக் என்ற இயற்பெயருடன் ஜீவாவையும் இணைத்துக் கொண்டார்.
1966-ல் மல்லிகை இதழை டொமினிக் ஜீவா ஆரம்பித்தார். நவீன தமிழ் இலக்கிய இதழாக வெற்றிகரமாக மல்லிகை இதழை நடத்தினார் டொமினிக் ஜீவா.
சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று டொமினிக் ஜீவா மாஸ்கோ சென்று திரும்பினார். எண்ணற்ற தமிழ் நூல்களை இந்த சமூகத்துக்கு படைத்து தந்த டொமினிக் ஜீவா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று (28.01.21) வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு உலக அளவில் படைப்புலக ஆளுமைகள், இலக்கிய ஆர்வலர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டொமினிக் ஜீவா,
டொமினிக் ஜீவா, ஆவுறம்பிள்ளை (1927.06.27 – ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், இதழாசிரியர். இவரது தந்தை ஆவுறம்பிள்ளை தாய் யோசப் மரியம்மா. இவர் மல்லிகை என்னும் சஞ்சிகையின் ஆசிரியராவார். புரட்சிமோகன் என்ற புனைபெயரில் ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
இவர் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அனுபவ முத்திரைகள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம், நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களையும் UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY என்ற மொழிபெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளார்.