யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெருமளவான பணம் திருடப்பட்டுள்ளது.
பருத்தித்துறையை சேர்ந்த நபர் ஒருவர் வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக தனது ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
அதன் போது மோட்டார் சைக்கிளுக்குள் இருந்த பணப்பை திருடப்பட்டுள்ளது. பண பைக்குள் 23ஆயிரம் ரூபாய் பணமும் , அவரதும் , அவருடைய மனைவியினுடையதுமான இரண்டு பண பரிமாற்று (ATM) அட்டை என்பன திருட்டு போயிருந்தன.
அந்நிலையில் குறித்த பண பரிமாற்று (ATM) அட்டையை பயன்படுத்தி அச்சுவேலி பகுதியில் உள்ள இரண்டு வங்கிகளில் 2 இலட்ச ரூபாய் மற்றும் 90ஆயிரம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளன.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் உரியவரால் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , வங்கிகளின் பாதுகாப்பு கமராக்களின் பதிவுகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் #மோட்டார்சைக்கிள் #பணம் #வங்கி_அட்டைகள் #திருட்டு #வடமராட்சி