Home இலங்கை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு! ரதிகலா புவனேந்திரன்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு! ரதிகலா புவனேந்திரன்.

by admin

வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் முக்கியமானதாகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயமும் ஒன்றாகும். நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலுடன், வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமின்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. முல்லை நகரின் காவல் தெய்வமாகவும், தாய்த் தெய்வமாகவும் கண்ணகி அம்மன் வழிபடப்படுகின்றாள்.


‘முல்லை மண்ணை ஆழுகின்ற முடி தரித்த மன்னவளாய்…’
கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கிய சான்றாக சிலப்பதிகாரம், சிபம்புகூறல், கோவலனார்கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. இலங்கையில் சைவ தமிழ் மக்கள் மாத்திரமன்றி, பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் ‘சவர்த்தினித்தெய்யே’ எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.
கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கியதையும், அதன்பின்பு வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளதுடன் வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடும் பரவியுள்ளது.


முன்பு ஒரு காலத்தில் நந்திக் கடலோரத்தில், ஒரு முதுமை வாய்ந்த அம்மையார் ஒருத்தி வேப்பம்படவாளில் இருப்பதை ஆட்டிடைய குலச்சிறுவர்கள் கண்டார்கள். சிறுவர்களிடம் அவ்வம்மையார் தனக்குத் தங்குவதற்கு இடமில்லையென கூறிய போது அச்சிறுவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்துக் கொடுத்ததுடன் உண்பதற்கு பொங்கலும் செய்து கொடுத்தார்கள்.

மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு எரிப்பதற்கு எண்ணெய் இல்லையே என்று மனம் வருந்தினார்கள். அவர்கள் கவலைப்படுவதைக் கண்ட அம்மூதாட்டியார் பிள்ளைகளே கடல் நீரை எடுத்து விளக்கேற்றுங்கள் என்றார். சிறுவர்களும் கடல் நீரையெடுத்து விளக்கு ஏற்றினார்கள். இன்றும் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிக்கப்படுகின்றது. குடிசை அமைத்து விளக்கேற்றித் தந்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார். அம்மையாரின் தலைமுடியை வகுந்த போது தலையில் ஆயிரம் கண்கள் இருப்பதை கண்டு சிறுவர்கள் பயந்தனர். அப்போது அம்மையார் நான் வைகாசித் திங்களன்று திரும்பவும் வருவேன் எனக் கூறி திடீரென மறைந்தார்.
இடைச்சிறுவர்கள் இதனை முதியவர்களுக்கு கூறினார்கள். இவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கு தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டியிருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட் கிழமை பொங்கல் செய்தனர்.

முள்ளியவளையிலுள்ள காட்டு விநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழு நாள் மடைகளும், பொங்கலும் இன்றும் காட்டு விநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்த நையினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன.
அடுத்த கட்டமாக கண்ணகி வழிபாட்டின் மரபில் ஆகம மரபு தொடர்பு படுத்தப்படுவதை அவதானிக்கலாம். மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கை உடையவர்கள். ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கப்படுவதைக் காணலாம். ஆனால் வற்றாப்பளையில் கிராமிய மரபும், ஆகம மரபும் இணைந்து செயற்படுவதை காணலாம்.
இவ்வழிபாட்டு மரபில் சிலம்பு, பிரம்பு, அம்மானை, உடுக்கு முதலிய புனித சின்னங்களும் வெள்ளியால் அமைந்து சமுடபடாம் என்னும் அமைப்பும், சித்திரச் சேலைகளும் இடம்பெறத் தொடங்கின. பக்தஞானி என்பவரே இந்த ஏற்பாட்டைச் செய்தார்.


கும்பத்தில் வெள்ளிமுக அமைப்பை பொருத்தி வெள்ளியாலான கை, கால் என்பவற்றை முறைப்படி அமைத்து கண்ணகி அம்மனது உருவம் அமைக்கப்படும். இப்புனித சின்னங்களை அம்மனுக்கு பூசை செய்யும் அந்தணர்கள் தங்களது பாதுகாப்பில் முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த தமது இல்லத்தில் வைத்து பூசித்து வந்தனர். வெள்ளிதோறும் இல்லத்தில் பூசையும், திங்கட்கிழமைகளில் வற்றாப்பளை ஆலயத்தில் பூசையும் நிகழ்ந்தன.


அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வழிபாடில் அமைந்த நிகழ்வாகும். பழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆயலம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்திற்குரிய புதிய பொலிவுடன் வளர்ந்து வருகின்றது.


இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும், சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும். சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப்பெண் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதை சுட்டி நிற்கின்றது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாக பூசிக்க சைவசமயமரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள்.


இந்தியாவில் கண்ணகி வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டில் அரசனுக்கெதிராக வழக்காடி மதுரையை தீக்கரையாக்கி அழித்த பின்னர் அவளின் கோபத்தைத் தணிப்பதற்காக இலங்கையின் கரையோரமாக வருகை தந்து பல இடங்களில் அமர்ந்திருந்து பத்தாவது இடமாக நந்திக் கடற்கரை அருகே வந்து தங்கியதால் பத்தாம்பளை என்பது மருவிப் பின்னர் ‘வற்றாப்பளை’ எனலாயிற்று. சினம் கொண்ட கண்ணகிக்குச் சினத்தை அடக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோவலன் கண்ணகி கூத்து நடைபெறுகின்றது.
கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், வேம்படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களைக் காட்டியமை, பனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித்துரைக்கு எறிவித்தமை, ஆலய பொருட்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாக கதை உண்டு.

வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்களிப்பான், சின்னமுத்து, கண்நோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் விபூதி தீயவற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும். ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடைபெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும், அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும். கால்நடையாக கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலை தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரைத் தொடர்வர்.

ரதிகலா புவனேந்திரன்
நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைகழகம்

Spread the love
 
 
      

Related News

1 comment

Suthar February 11, 2021 - 8:23 am

நன்று

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More