பொதுமுடக்கங்கள், ஊரடங்குக் கட்டுப்பாடுகள்.. சமூக இடைவெளி என்று வாழ்நாளைக் கழித்துக்கொண் டிருக்கின்ற லட்சக்கணக்கானோர் ‘கொவிட்-19’ வைரஸ் விரைவிலேயே உலகத்தை விட்டு இல்லாது போய்விடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.மாஸ்க் அணிவதும் கைகளைக் கழுவுவதும் தடுப்பூசிகளும் வைரஸை முற்றாகத் துடைத்தழித்துவிடும் என்றும் கற்பனை செய்கின்றனர். ஆனால்.. “இல்லை. அது நிரந்தரமாக எங்களோடு தங்கிவிடப் போகின்றது என்பதே உண்மை” என்று தொற்று நோயியல் நிபுணர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.
காய்சல் மற்றும் சளிச் சுரம் என்று ஆண்டில் ஒருமுறை வந்து தணியும் நோய்களைப்போன்று ‘கொவிட் – 19’ ‘வைரஸும் ஒரு பருவகால நோயாக (seasonal illness) மாறி உலகில் நிரந்தரமாகத் தங்கியிருக்கப் போகிறது. ஆனால் தற்போது போன்று அழிவுகளை ஏற்படுத்துகின்ற வீரியம் அதனிடம் இருக்காது-என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தடுப்பூசிகள், வைரஸ் தொற்றியவர் களையும் அறிகுறி உள்ளவர்களையும் குணப்படுத்துவதில் பெரும் வெற்றி யீட்டிவருகின்றன. ஆனால் அவை வைரஸ் தொடர்ந்து பரவுவதை முற்றாகக் கட்டுப்படுத்திவிடப் போவதில்லை. இதனை ஒரு ‘முடிவற்ற தொற்று’ நோய் என்று குறிப்பிடுகின்ற நிபுணர்கள், காலப் போக்கில் – சில பத்தாண்டு களுக்குப் பிறகு-நமது குழந்தைகள் இந்த வைரஸை எதிர்க்கும் திறனோடு பிறந்து வளர்ந்து விடுவார்கள் என்று நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
“கொவிட்-19 நோய்குக் காரணமான வைரஸை முற்றாக இல்லாமற் செய்வது அடிப்படையில் நடக்காத காரியம். மனித வாழ்வோடு அது என்றைக்குமாய் தங்கிவிடப் போகின்றது”-என்று அமெரிக்காவின் பொஸ்டன் சிறுவர் மருத்துவமனையின் தலைமை ஆய்வு நிபுணர் ஜோன் பிறவுண்ஸ்ரெய்ன் (Dr. John Brownstein) தெரிவித்திருக்கிறார்.” தடுப்பூசி மருந்துகளும் இயற்கையாக உருவாகின்ற நோய் எதிர்ப்புச் சக்திகளும் வைரஸின் பரவலை ஓரளவு கட்டுப்படுத்திவிடக்கூடும்.
ஒரு பெரும் தொற்று நோயாக (pandemic) அல்லாது ஏனைய கடுமையான பருவகால சுவாச நோய்களில் ஒன்றாக இதுவும் மாறி மனிதர்களோடு தங்கிவிடும் என்று நினைக்கிறேன். இப்போது போன்று பெரும் எடுப்பில் அன்றி கீழ் நிலையில் அது தொடர்ந்தும் பரவிக் கொண்டே இருக்கும்”-இவ்வாறு சிக்காகோ பல்கலைக் கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணரும் பரிமாண உயிரியலாள ருமாகிய மருத்துவர் சாரா கோபேய் (Sarah Cobey) ஏபிஸி செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.
காலப்போக்கில் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய மந்தை நோய் எதிர்ப்பு சக்தி(“herd immunity”) கோவிட் – 19 வைரஸை எதிர்க்கும் ஒரு வழிமுறையாக மாறுமா என்பதை இப்போது நிச்சயமாகக் கூற முடியாது என்று வேறு சில நிபுணர்கள் கருதுகின்றனர். “எங்கள் பகுப்பாய்வின் அடிப்படையில், கோவிட் -19 விஷயத்தில் மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி எழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை”என ஜென்னி லாவின் (Jennie Lavine) என்ற அமெரிக்க ஆய்வாளர் கூறுகின்றார்.ஏனைய சில வைரஸ் நோய்கள் போன்று ‘கொவிட் 19’ வைரஸ் தொற்றிலிருந்து வாழ் நாள் முழுவதும் பாதுகாப்புக் கொடுக்கின்ற நோய் எதிர்ப்புச் சக்தி மனிதர்களில் தோன்றுமா என்பது இன்னமும் நிச்சயமாகத் தெரியவில்லை என்ற செய்தியையும் நிபுணர்கள் வெளியிடுகின்றனர்.(படம்:நன்றி ரொய்ட்டர் செய்திச் சேவை)
குமாரதாஸன். பாரிஸ்.14-02-2021.