சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்கிற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அனைத்து அறவழி போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கடந்த காலங்களில் அரசியல் சாசனத்திற்கு எதிரான சிஏஏ வுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் நடைபெற்ற அனைத்து அறவழி போராட்டங்களில் ஈடுபட்டோர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது.
இது குறித்து தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து மனுவும் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்ட ”தமிழக முஸ்லிம்களின் தேர்தல் கோரிக்கைகள் 2021” என்ற நூலிலும் இதனை பிரதான கோரிக்கையாக முன் வைத்திருந்தது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழக முதல்வர், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் மற்றும் கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை தவிர மற்றவை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வழக்குகள் ரத்து செய்யப்படும் என்கிற தமிழக முதல்வரின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. அதே சமயத்தில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்தை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது தவறான முன்னுதாரனமாக அமைந்து விடும். இது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும். நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து தான் ஜனநாயக அறவழி போராட்டங்களை மக்கள் நடத்துகின்றனர்.வேறு எந்தவிதமான தீய நோக்கங்களும் இல்லை. தங்களின் உரிமைகள் மறுக்கபடுவதாக மக்கள் கருதும்போது ஜனநாயக போரட்டங்களின் வாயிலாகத்தான் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கமுடியும். ஆனால் இத்தகைய அறப்போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீதும், தலைவர்கள் மீதும் தேசதுரோக வழக்குகளும், காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்த பிரிவிலும் காவல்துறையால் வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டுள்ளன. இது ஜனநாயக அறவழி போராட்டங்களை அச்சுறுத்தும் வகையில் அமைத்துள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது.
அதேபோல் கொரோனா காலகட்டத்தில் இ-பாஸ் முறைகேடு வழக்குகள் ரத்து செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கொரோனா காலத்தில் இருந்த முழு ஊரடங்கில் சொல்லொண்ணா துயரத்தை மக்கள் அனுபவித்தனர். பயணம் மேற்கொள்ள இ -பாஸ் விதிமுறையை நடைமுறைப்படுத்தியது தமிழக அரசு. ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் பொதுமக்கள் மிக தாமதமாக இ -பாஸ் பெற்றதும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இ – பாஸ் வழங்கியதும் சாமானிய மக்களால் எளிதாக இ-பாஸ் பெறமுடியாத நிலை ஏற்பட்டது. தற்பொழுது அவ்வழக்குகளை ரத்து செய்ய முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது.
எனவே குடியுரிமை வழக்குகளை ரத்து செய்தது போன்று, அனைத்து அரசியல் வழக்குகளையும், கொரோனா காலத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். #சிஏஏ #போராட்ட_வழக்கு #ரத்து #தமிழக_முதல்வர் #பாப்புலர்ஃப்ரண்ட் #நன்றி