இலங்கை உலகம் பிரதான செய்திகள்

இலங்கையை ICC பரிந்துரைத்தல், (IIIM) உருவாக்குதல், போன்றவற்றை உள்ளடக்க கோரி சாகும் வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டம்?

பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க கோரி சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ICPPG தெரிவிப்பு

தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரித்தானியாவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையினை (IIIM) உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா நிதந்தர விசேட பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க பிரித்தானிய அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும்வரை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து சர்வதேச சர்வதேச இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் வழக்காடு மையத்தினால் (ICPPG) இன்று ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு இலங்கையில் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தமது தீவிர நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி 22.02.2021 ஆம் திகதி கடிதமொன்றினை ICPPG சமர்ப்பித்துள்ளது. மேலும் வெளியே கசிந்துள்ள பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள திட்டமுன்மொழிவில் ICC மற்றும் IIIM தொடர்பாக எதுவித விடயங்களும் உள்ளடக்கப்படாமைக்கும் 500 இற்கு மேற்பட்ட புலம்பெயர் அமைப்புக்களினால் பிரித்தானிய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் பிரேரணையை பிரித்தானியா கொண்டு வரவேண்டும்’என்ற கோரிக்கைக்கு இதுவரை பதிலேதும் அனுப்பாமைக்கும் அதிருப்தியை ICPPG அக்கடிதத்தின் மூலமாக தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கெதிரான இனப்படுகொலையை இன்று வரை தொடர்ந்து வருவதுடன் நினைவுச்சின்னங்களை அழித்தல், சமத்துவத்தை தடை செய்தல் போன்றவற்றுடன் மொழி, வரலாற்றினை நீக்குதல் போன்றவற்றினூடாக தமது இனவாதப்போக்கை வெளிப்படுத்தி வருவதுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1, 34/1மற்றும் 40/1 தீர்மானங்களின் பொறுப்புக்கூறல் செயல்முறையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியமையையும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்திலிருந்து உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கோரிய அதே கோரிக்கையே இதுவெனவும் அதாவது 2015 ஆம் ஆண்டு உலகெங்கிலுமுள்ள 1.5 மில்லியன் மக்கள் கையெழுத்திட்டு சமர்ப்பிக்கப்பட்ட ‘இலங்கையை ICC க்கு பரிந்துரைக்க வேண்டும்’என்ற மனு மூலமாகவும், 2019 ஆம் ஆண்டு சர்வதேச நீதிபதிகள் ஆணையம் இலங்கையை ICC க்கு பரிந்துரைப்பது ‘முழு உத்தரவாதம்’ என்று கூறியதன் மூலமும், 2019 ஆம் ஆண்டு ICPPG இனால் பிரித்தானிய பிரதமரிற்கு சமர்ப்பிக்கப்பட்ட ‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக’என்னும் மனு மூலமும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையினை உருவாக்கும் தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவருமாறு 250புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை மூலமும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய கடிதம் மூலமும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி 500 இற்கு மேற்பட்ட புலம்பெயர் அமைப்புக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் பிரேரணையை பிரித்தானியா கொண்டு வரவேண்டும்’என்ற கோரிக்கை மூலமும், இலங்கை இராணுவம், பொலிஸாரின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை எழுச்சியுடன் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’எழுச்சி போராட்டத்தின் மூலமும் மற்றும் ஏனைய ஆதாரங்களின் மூலமாகவும் இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை செயற்படுத்தத் தவறிவிட்டன என்பதற்கு ஆதாரங்களாகும் என மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற குறைந்தது 100 சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களை உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளுடன் ICPPG ஆவணப்படுத்தியுள்ளதனையும் தற்போது இலங்கையில் மர்ம மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் பெரும்பாலான சடலங்களில் சித்திரவதைக் காயங்கள் காணப்படுவதால் தற்போதைய சூழ்நிலையில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுபவர்கள் உடனடியாகவே கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் வீசப்படுகின்றன அல்லது தூக்கில் தொங்கவிடப்பட்டு தற்கொலைகளாக விசாரணைகளின்றி மூடிமறைக்கப்படுவதனாலேயே மர்மக் கொலைகள் அதிகரித்துள்ளதாக பல அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களை பிரித்தானிய அரசிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையினை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை பிரித்தானிய அரசின் தீர்மானத்தில் உள்ளடக்க கோரி ICPPG இனால் மேற்கொள்ளப்படவுள்ள சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு தோள் கொடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link